full screen background image

ஹீரோ + நண்பன் + நாய் = ‘எங்க காட்டுல மழை’ திரைப்படம்

ஹீரோ + நண்பன் + நாய் = ‘எங்க காட்டுல மழை’ திரைப்படம்

‘குள்ள நரிக் கூட்டம்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் ஸ்ரீபாலாஜி இயக்கி வரும் அடுத்த படம் ‘எங்க காட்டுல மழை’. இதில் மிதுன் நாயகனாகவும், ஸ்ருதி ராமகிருஷ்ணன் நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். மேலும் அருள்தாஸ், அப்புக்குட்டி, சாம்ஸ், மதுமிதா, யோகிராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஏ.ஆர்.சூர்யா இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எல்.ஜஸ்டின்ராய் எடிட்டிங் செய்திருக்கிறார். கிளைட்டன் சின்னப்பா வசனம் எழுதியிருக்கிறார். முனி பால்ராஜ் கலை இயக்கம் செய்திருக்கிறார். வாலி பிலிம் விஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கவிஞர் நா.முத்துக்குமார் ‘அடடா காதல் வந்ததே’ என்ற பாடலையும், கவிஞர் சினேகன் ‘ஓர் முத்தம் என்ன விலை’ என்ற பாடலையும் எழுதியுள்ளனர். கார்த்திக், ரஞ்சன், ஹரிஹரன், கானா பாலா போன்ற முன்னணி பாடகர்கள் பாடியுள்ள பாடல்களுக்கு ஸ்ரீவிஜய் இசையமைத்துள்ளார்.

இதன் டிடிஎஸ் பணிகள் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவிலும், வண்ணம் சேர்ப்பு வேலைகள் ரியாவிலும், கிராபிக்ஸ் பணிகள் பிரசாத் லேப்பிலும் நடைபெற்று வருகின்றன. இக்பால் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகளைச் செய்து வருகிறார். இந்தக் கோடை விடுமுறையில் படம் நிச்சயம் வெளியாகுமாம்.

சென்னை, புதுச்சேரி, மலேசியா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.  இப்படம் பற்றி இயக்குநர் ஸ்ரீபாலாஜி மிக விரிவாக நம்மிடம் பேசினார்.

“எங்க காட்டுல மழை’ என்ற பெயருக்கேற்ப எப்படின்னே தெரியலைங்க.. இந்தப் படத்தோட ஒரு நாள் ஷூட்டிங்கூட நல்லபடியா நடக்கலை.. தொடர்ந்து மழை. மழை.. மழைதான்.. எல்லா நாட்களும் மழைதான். மழை கொஞ்சம் ஓய்ந்து வெயில் வரும்போதுதான் படபடவென அடுத்தடுத்து ஷாட்டுகளை எடுத்தோம். அந்த அளவுக்கு மழை எங்களை பாடாய் படுத்திவிட்டது. இங்கேதான் போற இடமெல்லாம் மழை பெய்யுதேன்னு மலேசியாவுக்கு போனோம். அங்கேயும் கேமிராவை வைச்சவுடனேயே மழை.. என்ன சொல்றதுன்னே தெரியலை..!

இதுவொரு ரொமான்ட்டிக் காமெடி திரில்லர் படம். வேலை வெட்டிக்கே போகாத ஒரு இளைஞன் சென்னைக்கு வந்து ஹை கிளாஸ் பையன் மாதிரி டீஸண்ட்டா டிரெஸ் பண்ணி, ஆர்ப்பாட்டமா காசு, செலவு பண்ணி வாழுறான். அவன் வாழ்க்கைல நடக்குற ஒரு சின்ன இன்ஸிடெண்ட்டுதான் படத்தின் கதைக் கரு.

ஹீரோ போலவே கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் அப்புக்குட்டியும், ஹீரோவும் ஒரு கட்டத்தில் அறிமுகமாகி நண்பர்களாகின்றனர். அதே சமயம் வீட்டு நாய் ஒன்றும் அனாதையாகி இவர்களோடு வந்து ஒட்டிக் கொள்கிறது.  இந்த மூன்று பேரையும் வைத்துத்தான் படம் நகரும்.

இந்த இரண்டு நண்பர்களுக்குள் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இதைத் தீர்ப்பதற்குள் ஹீரோயினுக்காக ஒரு பிரச்சினையில் நண்பர்கள் இருவருமே மாட்டிக் கொள்கிறார்கள். அதற்கடுத்து நாயும் சேர்ந்து கொள்ள.. படமே களேபரமாகிறது..

நாய் படத்தின் முக்கியமான கேரக்டராகவும் வாழ்ந்திருக்கிறது. ஹீரோ, அப்புக்குட்டி பேசும் வசனங்களுக்கெல்லாம் நாய் கவுண்டர் அட்டாக் கொடுப்பது போன்ற காட்சிகளும் படத்தில் உண்டு.

இந்த நாய்க்கு பிரபல சின்னத்திரை நடிகர் ஆதவன் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். இதில் நாயை வைத்து படமெடுக்கத்தான் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம். அதுக்காக ஏசி கார், சாப்பிட ஐஸ்கிரீம், சிக்கன் என்று அதிகமாகவே செலவுகளை செய்துள்ளோம். கிளைமாக்ஸில் நாய்க்கு பல லட்சம் செலவில் அனிமேஷன் வேலைகளையெல்லாம் செய்திருக்கிறோம்.

இதுவரையிலான பெரும்பாலான படங்களில் அழுக்கு முகம், அழுக்கு சட்டை காஸ்ட்யூமில் பவனி வந்த அப்புக்குட்டி, இந்தப் படத்தில் நீட்டாக கலர்புல் டிரெஸ்ஸில் பவனி வருகிறார். இந்தப் படம் முழுக்க, முழுக்க குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக் கூடிய ஒரு பொழுது போக்கு படமாக இருக்கும். இளைஞர்களை கவரும் விதமாகவும் காதல் காட்சிகள் இருக்கும்..” என்றார் இயக்குநர் ஸ்ரீபாலாஜி.

‘குள்ள நரிக் கூட்ட’த்தில் கூட்டத்தைக் கூட்டிய இயக்குநராச்சே.. இதிலும் கல்லா கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்..!

Our Score