full screen background image

“முருகன், சாந்தன், பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” – தமிழ் திரையுலகம் கோரிக்கை..!

“முருகன், சாந்தன், பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” – தமிழ் திரையுலகம் கோரிக்கை..!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 வருடங்களாக சிறையில் இருக்கும் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலகத்தினர் கோரியுள்ளனர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வெளியிட்ட ஒரு தீர்ப்பில் மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மாநிலத்தில் உள்ள கைதிகளை விடுதலை செய்யலாம். அதில் தவறில்லை என்று கூறியிருந்த்து.

இதனையொட்டி பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் தமிழக அரசு உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் இது குறித்த வேண்டுகோளை முதல்வரிடம் விடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்றைக்கு பெப்சி, நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் ஆகியவைகள் இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் 7 தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, “முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 7 பேரையும் 161-ம் சட்டப் பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

இதனை வெறும் கடிதமாக கொடுக்காமல், முதல்வர் ஒதுக்கும் நேரத்தை வைத்து ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக திரளும்போது மக்கள் மத்தியிலும் இது குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படும்..” என்றார்.

இந்த ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சந்திப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் அரங்கத்தில் நடைபெற்றாலும் வர்த்தக சபையைச் சார்ந்தவர்களோ, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைச் சார்ந்தவர்களோ இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score