full screen background image

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் ஆர்.சி.சக்தி காலமானார்

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் ஆர்.சி.சக்தி காலமானார்

தமிழ்ச் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஆர்.சி.சக்தி இன்று மதியம் சென்னையில் காலமானார். இவருக்கு வயது 75.

இன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் புழுதிக்குளம் என்ற சிற்றூரில் 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிறந்த ஆர்.சி.சக்தி சிறு வயதில் இருந்தே நாடகத்தின் மீதும், சினிமாவின் மீதும் ஆர்வமாக இருந்தவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நாடகங்களை அமைத்து அரங்கேற்றியவர்.

சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் என்.எஸ்.கே.நாடக சபாவில் இணைந்து நாடகத்தில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். பின்பு வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகத்துடன் இணைந்து சில நாடகங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். ‘பொற்சிலை’ என்கிற படத்தில்தான் முதன்முதலாக துணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடன இயக்குநராக இருந்த தங்கப்பன் மாஸ்டருடன் இவருக்கிருந்த நட்பின் காரணமாய் இன்னொரு மிகப் பெரிய நட்பு இவருக்குக் கிடைத்த்து. அவர்தான் கமல்ஹாசன். தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த கமல்ஹாசனுக்கு சிற்றப்பனாகவே மாறினார் ஆர்.சி.சக்தி.

kamal-rc-sakthi

கமல்ஹாசன் நடன இயக்குநராகப் பணியாற்றிய ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தில் ஆர்.சி.சக்தியும் துணை இயக்குநராகப் பணியாற்றினார். தொடர்ந்து கமல்ஹாசனை தனி ஹீரோவாக 1972-ம் ஆண்டு தான் இயக்கிய ‘உணர்ச்சிகள்’ படத்தில் அறிமுகப்படுத்தினார் ஆர்.சி.சக்தி. ஆனால் பல்வேறு காரணங்களினால் இந்தப் படம் 1976-ம் ஆண்டுதான் வெளியானது. இதே படம்தான் மலையாளத்தில் ‘ராசலீலா’ என்ற பெயரில் வெளியாகி சக்கைப் போடு போட்டது.

Unarchigalfilm

1978-ம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ என்ற படத்தை இயக்கினார். இது பாடல்களுக்காகவும், படத்தின் மென்மையான வித்தியாசமான இயக்கத்திற்காகவும் இன்றளவும் பேசப்படும் படமாகும்.

manitharil ithanai nirangala-poster

இதற்கடுத்த ஆண்டு ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் ‘தர்மயுத்தம்’ படத்தை இயக்கினார். இதுவும் ரஜினியின் திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான படமாக அமைந்த்து.

dharmayutham-poster

இதன் பின்பு சின்ன சின்ன படங்களை மட்டுமே ஆர்.சி.சக்தி இயக்கியிருந்தாலும் 1984-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘சிறை’ திரைப்படம் சூப்பர்டூப்பர் ஹிட்டானது. ஆர்.சி.சக்தியின் இயக்கத் திறமைக்கு இந்தப் படமும் ஒரு சான்று.

sirai-poster

பிரபல எழுத்தாளர் அனுராதாரமணனின் கதையில் நடிகை லட்சுமியின் உணர்ச்சிகரமான நடிப்பில் வெளியான இந்தப் படம் தமிழ்ச் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இன்றைக்கும் பேசப்படக் கூடிய படமாக இருந்தது.

நடிகை லட்சுமி இன்றைக்குவரையிலும் ஆர்.சி.சக்தியின் மிக நெருங்கிய நண்பியாவார். இதே கூட்டணி அடுத்து ‘தவம்’ படத்திலும் தொடர்ந்தது. ஹிட் படமில்லையென்றாலும் லட்சுமியின் நடிப்புக்கு உதாரணப் படமாக அது அமைந்தது.

KootuPuzhukkal-poster

அடுத்த வருடமே ‘கூட்டுப் புழுக்கள்’ என்ற அருமையான படத்தைக் கொடுத்தார். மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட இந்தப் படம் இன்றைக்கும் சக்தியின் சிறப்பான இயக்கத்திற்காகவும், காதலின் வடிவத்தை வெளிப்படுத்தியவிதத்திலும் தமிழ்ச் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படமாக அமைந்தது. ரகுரவனும், அமலாவும் நடித்திருந்த இந்தப் படம் அவர்களுக்கும் மிக முக்கியமான படம்தான்..!

சக்தியின் நெருங்கிய நண்பரான-பிள்ளையான கமல்ஹாசன் அதற்குள்ளாக எட்டாத உயரத்திற்குச் சென்றுவிட்டாலும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என்று அறிவித்துதான் ‘மனக்கணக்கு’ படத்தைத் துவக்கினார் சக்தி. ஆனால் சில காரணங்களினால் கமல்ஹாசன் அதில் நடிக்காமல் போக, விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார்.

1972-ல் துவங்கி ‘உணர்ச்சிகள்’, ‘மனிதரில் இத்தனை நிறங்களா’, ‘மாம்பழத்து வண்டு’, ‘ராஜநாகம்’, ‘ஸ்பரிசம்’, ‘உண்மைகள்’, ‘சிறை’, ‘தங்கக்கோப்பை’, ‘நாம்’, ‘சந்தோஷக் கனவுகள்’, ‘தவம்’, ‘மனக்கணக்கு’, ‘கூட்டுப் புழுக்கள்’, ‘தாலிதானம்’, ‘வரம்’, ‘அம்மா பிள்ளை’, ‘பத்தினி பெண்’ என்று 43 வருடங்களில் எண்ணி 18 படங்களே செய்திருக்கும் இயக்குநர் ஆர்.சி.சக்தி தனது இயக்கத் திறமையினாலும் கதை சொல்லாடலாலும், தமிழ்ச் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க பெயரை கைப்பற்றியிருந்தார்.

இவர் கடைசியாக இயக்கிய ‘பத்தினி பெண்’ படம் சிறந்த வசனகர்த்தா, மற்றும் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி சில வருடங்களால பல தொலைக்காட்சி தொடர்களை இயக்கியிருக்கிறார். சின்னத்திரையில் இயக்கும் இயக்குநர்களுக்காக தனியாக சங்கத்தைத் துவக்கியதும் ஆர்.சி.சக்திதான். சின்னத்திரை கூட்டமைப்பை உருவாக்கியதில் பெரும் பங்கு கொண்டவர்.

kamal-r.c.sathi-gowthami

இந்தாண்டு தனக்கு 75-வது பிறந்த நாள் பிறக்கிறது என்பதால் பல திரையுலகப் பிரபலங்களை நேரில் அழைத்து மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடினார். நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

கடைசியாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மறைவுக்கு நேரில் வந்து கண்ணீர்விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார். நல்ல மனதுடையவர்.. அதிர்ந்து பேசாதவர்.. துணை, இணை இயக்குநர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்.

இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மகன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றிருக்கும் ஆர்.சி.சக்தியின் பெருமைக்கு இந்த விருதினைவிடவும் அவர் இயக்கிய சில படங்களே சாட்சிகளாக இருக்கின்றன.

அவரது மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்..! 

Our Score