full screen background image

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்.. என்ன காரணம்..?

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்.. என்ன காரணம்..?

நடிகரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர் சமீபத்தில் தான் உருவாக்கிய ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தின் தலைவர் பதவியில் இருந்து திடீரென்று ராஜினாமா செய்துவிட்டார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான், பாரம்பரியமிக்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறேன்.

எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27ம் தேதி காலை நடைபெற இருக்கிறது.

எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும், கோரிக்கையும் தெரிவித்தனர்.

எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.

எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டத் திட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்…” என்று அறிவித்திருக்கிறார்.

இதேபோல் இந்தத் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தின் செயலாளரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக திரு. டி.ராஜேந்தர் அவர்கள் நீடிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த சங்கத்தின் தலைவராக நீடிக்கிறார்.

மேலும், அந்தச் சங்கத்தின் By Law விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தின் பேரில் வேறு சங்கங்களில் பதவி வசிக்க முடியாத சூழிலின் காரணமாக இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்..” என்று தெரிவித்திருக்கிறார்.

டி.ராஜேந்தர் திடீரென்று எடுத்த இந்த முடிவு பற்றி தமிழ்த் திரையுலகத்தில் இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

டி.ராஜேந்தர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் நின்றபோதே பலரும் இது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

“விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டத் திட்டத்தின்படி அந்தச் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் வேறு சினிமா சங்கங்களின் பொறுப்பில் இருக்கக் கூடாது. ஆனால் நீங்கள் எப்படி இந்தச் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்..?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “எங்களது சங்கத்தின் செயற்குழுவில் இது குறித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை நிறைவேற்றி.. அந்தத் தீர்மானத்தை பொதுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். மிக விரைவில் பொதுக் குழுவைக் கூட்டி அந்தச் சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெறுவோம்..” என்று டி.ராஜேந்தர் கூறினார்.

ஆனால் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்ததை அடுத்து அவசரம், அவசரமாக ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தைத் தோற்றுவித்து அதற்குத், தானே தலைவராகவும் ஆகிவிட்டார்.

இதற்கிடையில் விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருக்கும் முக்கியமான விநியோகஸ்தர்கள் அனைவரும் தனியாகச் சென்று வேறொரு புதிய சங்கத்தைத் தோற்றுவித்துவிட்டார்கள். இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஒற்றுமையாக இருந்த சங்கத்தில் டி.ராஜேந்தர் குழப்பத்தை ஏற்படுத்தி முக்கியமான விநியோகஸ்தர்களை வெளியேற்றி, புதிய சங்கத்தை உருவாக்க வைத்துவிட்டதாக நடுநிலையான விநியோகஸ்தர்கள்கூட டி.ராஜேந்தர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக் குழு வரும் டிசம்பர் 27-ம் தேதியன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தப் பொதுக் குழுவில் டி.ராஜேந்தர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பல உறுப்பினர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சங்கத்தின் பொதுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் டி.ராஜேந்தர் வேறு சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது சட்ட விதிகளின்படி தவறு என்பதால் டி.ராஜேந்தரின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சங்கத்தில் போர்க் குரல்கள் ஒலித்து வருகின்றன.

சங்கத்தின் பொதுக் குழுவில் தன் மீது ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும்விதமாகத்தான் இன்றைக்கு அவசரம், அவசரமாக டி.ராஜேந்தர் ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தில் இருந்து விலகியிருப்பதாக விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

“நான் இப்போது நமது சங்கத்தைத் தவிர வேறு சங்கத்தில் பொறுப்பில் இல்லை’
என்று டி.ராஜேந்தர் பொதுக் குழுவிற்கு வந்து சொன்னாலும், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் போவது உறுதி..” என்கிறார்கள் அவரது எதிர்ப்பாளர்கள்.

என்ன நடக்கப் போகிறதோ.. 27-ம் தேதிவரையிலும் காத்திருப்போம்…!

Our Score