இந்த வெப் சீரீஸை Wall Watcher Film நிறுவனம் அமேஸான் பிரைம் வீடியோ நிறுவனத்திற்காகத் தயாரித்துள்ளது.
இந்த வெப் சீரீஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், அஸ்வினி, சரவணன், சாந்தினி தமிழரசன், கவுரி கிஷன், சம்யுக்தா, மோனிஷா, ரினி, ஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி, மஞ்சிமா மோகன், கயல் சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதன் திரைக்கதையை புஷ்கர்-காயத்ரி தம்பதியினர் எழுதியுள்ளனர். இந்த வெப் சீரீஸை இயக்குநர்கள் பிரம்மா, கே.எம்.சர்ஜூன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
சுழல் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த இரண்டாம் சீசன் இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள்.
முதல் சீசனில் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் மட்டுமே இதில் இருக்க… இரண்டாவது சீசன் முற்றிலும் வேறு ஒரு கதை களத்தில் நடக்கிறது.
தன்னுடைய தங்கையை பாலியல் வன்புணர்வு செய்தவனை தன்னுடைய காதலன் கதிரின் துப்பாக்கியால் சொட்டு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு வந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தத் துப்பாக்கியை கொடுத்ததற்காக கதிரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நேரத்தில் அந்த ஊரின் மிகப் பிரபலமான வழக்கறிஞரான லால் அவருடைய பங்களாவில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இவர் கதிருக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் “இந்த வழக்கை நீயே விசாரித்துக் கொள்…” என்று டி.ஐ.ஜி.யும் உத்தரவிட கதிரே இந்த வழக்கை கையில் எடுக்கிறார்.
அந்த வீட்டுக்குள் ஒரு கப் போர்டுக்குள் பதுங்கியிருந்த கௌரி கிருஷ்ணனை கையில் துப்பாக்கியுடன் கையும் களவுமாக பிடிக்கிறார்கள் கதிரும், இன்ஸ்பெக்டர் சரவணனும். கௌரியிடம் விசாரித்தால் அவர் வாயே திறக்காமல் இருக்கிறார். பேசாமலேயே இருக்கிறார். அவரிடம் இருந்து வேறு எந்த தகவலும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையில் இந்த தகவல் லோக்கல் கேபிள் சேனல் மூலமாக தமிழகம் முழுவதும் பரப்பப்பட… திடீரென்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏழு பெண்கள் நாங்கள்தான் லாலை கொலை செய்தோம் என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைகிறார்கள்.
இப்பொழுது இந்த வழக்கு மிகவும் பரபரப்பாகிறது. ஒரு நபரை 8 பெண்கள் சேர்ந்து கொலை செய்தோம் என்றால் எப்படி அதை ஏற்றுக் கொள்வது என்று சந்தேகிக்கும் காவல் துறையினர் இந்த வழக்கை மேலும் தீவிரமாக விசாரிக்கிறார்கள்.
இந்த விசாரணையின் முடிவு என்ன..? யார் லாலை கொலை செய்தது…? இந்த எட்டு பெண்களுக்கும் லாலுக்கும் என்ன தொடர்பு…? இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் பங்களிப்பு என்ன…? என்பதுதான் இந்தப் படத்தின் சுருக்கமான திரைக்கதை.
இந்த வெப் சீரீஸ் மொத்தம் எட்டு எபிசோடுகள் என்பதால் ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு கதையாக விரிந்து கொண்டே செல்கிறது. அதேபோல் ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொருவர் மீது சந்தேகக் கேள்விகள் வீசப்பட்டு அவர்களை கேள்விக்குறியாக்குகிறார்கள்.. கடைசியில் யார் குற்றவாளி என்பது மிகவும் சஸ்பென்சாக நாம் எதிர்பாராத ஆளாக எதிர்பாராத தருணத்தில் வெளிப்படுகிறது.
அந்த வகையில் ஒரு நல்லதொரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக இந்த வெப் சீரிஸை படைத்திருக்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்களான புஷ்கரும் காயத்ரியும்.
படத்தில் இறந்து போகும் வழக்கறிஞராக நடித்திருக்கும் லால் ஒவ்வொரு எபிசோடிலும் கதையை நகர்த்தும் விதத்தில் நடித்திருக்கிறார். அதிலும் அசத்தலான ஒரு நடிப்பு. அவரிடத்தில் ஒரே ஒரு பிரச்சனை மலையாள ஸ்லாங்கில் தமிழ் பேசுவதுதான். ஆனாலும் அதையும் தாண்டி அவருடைய அசாத்தியமான நடிப்புதான் அவரை பார்க்க வைத்திருக்கிறது.
ஒரு கட்சியில் அவரும் அவருடைய பங்காளியான ஓ.ஏ.கே.தேவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு பேசுகின்ற பேச்சு அட்டகாசமான ஒரு நடிப்பு.
நாயகனாக நடித்திருக்கும் கதிர் 8 எபிசோடுகளிலுமே வலம் வருகிறார். அவருடைய படபடப்பு, பதைபதைப்பு எதுவும் இந்த வெப் சீரீஸுக்கு உதவி செய்யவில்லை. இந்த கதைக்கு அவருடைய பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே அந்த கேரக்டருக்குள் புகுந்து நடித்திருக்கிறார் என்று சொல்லலாம்.
போன முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு ரொம்பவே சுமார்தான். மிகவும் ஆக்ரோஷமான நடிப்புக்கு தீனி போடப்படாமல் ஒரு மெதுவான ஒரு நடிப்புக்காகவே அவர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
லாலின் மனைவியாக நடித்த அஸ்வினி இன்னொரு பக்கம் நம்மை பெரிதும் கவர்ந்திருக்கிறார். லாலின் மரணத்திற்கு பிறகு அவருடைய நடத்தை, பேச்சுக்கள், அவருடைய இறுக்கமான முகம் அனைத்துமே அவர் ஒரு சிறந்த நடிகை என்பதை அடையாளப்படுத்துகிறது.
அந்தப் பகுதியின் இன்ஸ்பெக்டராக தானிருந்தும் தன்னிடம் விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்காமல் ஒரு சப் இன்ஸ்பெக்டரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு போன டி.ஐ.ஜி. மீது கோபித்துக் கொள்வதில் இருந்து கடைசியாக தன்னுடைய நிஜ முகத்தை காட்டும் வரையிலும் சரவணனின் பங்களிப்பு இந்த வெப் சீரியஸில் மிகவும் அதிகம்.
பல இடங்களில் சரவணனின் வசனமும், நடிப்பும் நமக்கு மிகவும் கலகலப்பை கொடுத்திருக்கிறது. அதிலும் வில்லியுடனான தனது தொடர்பு பற்றி அவர் பேசும் வசனத்தில் தியேட்டரே அதிர்ந்த்து. இந்த ஒரு காட்சியிலேயே நம்மையும் கொஞ்சம் பொறாமைப்பட வைத்துவிட்டார் சரவணன்.
இவரைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு நடித்திருக்கும் பழைய எம்.எல்.ஏ.வின் மனைவியாக நடித்திருப்பவரின் அமைதியான, அடக்கமான அழகும், நடிப்பும் ஏ ஒன்..! (யாருங்க இந்த அம்மணி..?)
படத்தின் ஸ்பெஷலாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு கதையில் மஞ்சிமா மோகனும், கயல் சந்திரனும் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் மஞ்சிமா மோகனின் உருக வைக்கின்ற நடிப்பு சிறப்பு.
எட்டு பெண்களில் கௌரி கிருஷ்ணன் ஒரு முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்ற ஏழு பேர்களும் சிறப்பான நடிப்பினை காண்பித்திருக்கிறார்கள்.
குலசை என்ற குலசேகரப்பட்டினத்தின் தசரா திருவிழாவை மொத்தமாக படம் எடுத்து அவ்வப்பொழுது சில இடங்களில் கச்சிதமாக பொருந்தி வரும் அளவுக்கு திரைக்கதையை எழுதி அமைத்திருக்கிறார்கள் தம்பதியினர். இதற்காக அவர்களுக்கு நாம் ஒரு ஸ்பெஷல் பாராட்டினை வழங்க வேண்டும்.
ஒரு ஆவணப் படத்துக்கே உரித்தான வகையில் அந்த குலசை மாரியம்மன் திருவிழா மொத்தத்தையும் படம் எடுத்து அதையும் தன்னுடைய திரைக்கதையில் தேவையான அளவுக்கு தேவையான இடங்களை கச்சிதமாக பொருத்தி வைத்திருக்கிறார்கள். அதனாலேயே இந்த வெப் சீரியஸை பார்ப்பதற்கு மிகவும் மிக சுவாரசியமாக இருக்கிறது.
திருவிழாவை படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் ஒளிப்பதிவாளர் தன்னுடைய சகல சக்திகளையும் பயன்படுத்தி மிகுந்த பொருட் செலவில் இந்தக் காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.
முதல் கட்சியிலிருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவின் தரம் மிகவும் அருமை. அவ்வளவு அழகான ஒலிப்பதிவு. அதிலும் அந்தக் குலசை ஊரையே வளைத்துப் பிடித்து படமாக்கி இருக்கிறார்கள் அந்த வகையில் ஒளிப்பதிவாளரின் பங்கு நிச்சயம் பாராட்டு கூறியது.
பின்னணி இசையில் எந்தவிதமான உறுத்தலையும் நமக்குக் கொடுக்காமல் அடுத்தது என்ன என்று நம்மை ஏங்க வைப்பது போல செய்து இருக்கிறார் இசையமைப்பாளர்.
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பார்த்த பொழுது நமக்கு பாலா படத்தை பார்த்தது போலவே இருக்கிறது. அப்படி ஒரு ஆக்ரோஷமான சண்டை காட்சியை படமாக்கி இருக்கும் அந்த சண்டை இயக்குநர், ஒளிப்பதிவாளர் இருவருக்குமே நமது பாராட்டுக்கள்.
இந்த வெப் சீரிஸில் இருக்கும் ஒரேயொரு பிரச்சனை கொஞ்சம் நீளமான திரைக்கதையாக அமைத்துவிட்டார்கள். அதிகப்பட்சம் ஐந்து எபிசோடுகளில் முடிய வேண்டிய கதை. ஆனால், கொஞ்சம் ஒவ்வொரு கதைக்கும் நீட்டமாக கிளைக் கதையை அமைத்துள்ளார்கள். அது தேவையில்லாதது என்பது மொத்தமாகப் பார்த்து முடித்த பின்பு நமக்கு தோன்றுகிறது.
ஒரு குற்றம் நடந்திருக்கிறது..! அந்தக் குற்றத்தை யார் செய்தது..? என்பதை கண்டுபிடிப்பதற்குள் அந்த குற்றத்திற்கான பின்னணி…! கொலை செய்யப்பட்டவர்களின் பின்னணி..! என்று சகலத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு குற்றப் பத்திரிகையை தயார் செய்து நம் கண் முன்னேயே இந்த வெப் சீரிஸ் மூலமாக காட்டி இருக்கிறார்கள் இதை இயக்கிய இயக்குநர்கள் பிரம்மாவும், சார்ஜூனும். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.









