முத்துராமன், ஜெயலலிதா நடித்து 1973-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் ‘சூரியகாந்தி’.
படத்தில் மேலும் சோ, மனோரமா, மௌலி, காத்தாடி ராமமூர்த்தி, M.R.R. வாசு போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதை, வசனத்தை A.S.பிரகாசம் எழுதி இருந்தார். வித்யா பிலிம்ஸ் வேணுகோபால் தயாரித்த இந்த படத்தை முக்தா வி.சீனிவாசன் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் ‘ஓ மேரோ தில்ரூபா’ என்ற பாடலையும் ‘நானென்றால் அது நீயும் நானும்’ என்ற பாடலையும் கதாநாயகியான ஜெயலலிதாவே பாடியிருக்கிறார்.
மேலும் கவியரசர் கண்ணதாசன் எழுதி, நடித்து, பாடிய புகழ் பெற்ற பாடலான ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ என்ற பாடல், இந்தப் படத்தில் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.
பாடல்களுக்காகவும், படத்தின் கதைக்காகவும், சிறப்பான நடிப்பு, மற்றும் இசை என்று எல்லோராலும் பாராட்டு பெற்ற ‘சூரியகாந்தி’ படம் 150 நாட்கள் ஓடியது.
தன்னைவிட மனைவி அதிகம் சம்பாதிக்கிறாளே என்று கணவனுக்குள் எழும் தாழ்வு மனப்பான்மையும், இதனால் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகளும்தான் படத்தின் கதை. தம்பதிகளுக்குள் ஈகோ கூடாது.. பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். அவர்களை வீட்டிலேயே இருக்க வைத்து அவர்களை அடிமைப்படுத்தக் கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
இதனாலேயே இந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில், தந்தை பெரியார் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்தப் படம் வெளியாகி 43 வருடங்களை கடந்து 44-ம் வருடத்தை தொட்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதைக் களம் எந்த கால கட்டத்திற்கும் பொருத்தமானதாக இருப்பதால், இந்த தலைமுறையினரும் ரசிக்கக் கூடிய படமாகத்தான் இது இருக்கும்.
இத்தகைய பெருமைமிக்க இந்தப் படத்தை இப்போது நவீன வடிவமாக டிஜிட்டலில் மாற்றியிருக்கிறார்கள்.
இந்தப் படம் கருப்பு வெள்ளையிலேயே சினிமாஸ்கோப்பில் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை A.P. பிலிம்ஸ் கஜலட்சுமி வெளியிடுகிறார்.