போச்சு.. போச்சு.. மீடியா சும்மா இருந்தாலும் நம்ம நடிகர்களும் சும்மா இருக்க மாட்டாங்க போலிருக்கு.. எரிகிற தீயில எண்ணெய்யை ஊத்துற மாதிரி ஏதாவது ஒரு சின்ன பொறியை பத்த வைச்சிட்டுப் போயிருவாங்க. அப்புறம் அது எரிஞ்சவுடனேயே வந்து இது இவ்வளவு பெரிசா எரியும்ன்னு நினைக்கலியேன்னு வருத்தப்படுவாங்க..! இதுதான் இப்போ நடிகர் சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு நடக்கப் போகுது..
சமீபத்தில் நடந்த அகரம் பவுண்டேஷனின் பரிசளிப்பு விழாவில் பேசிய சூர்யா, சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாகப் பேசுவதாக நினைத்து ஒரு வார்த்தையில் சொன்ன விஷயம் காலம் காலமாக தமிழ்நாட்டில் சட்டென எதிர்க்குரல் எழுப்பும் ஒரு கடமையை உசுப்பிவிட்டிருக்கிறது..!
முதலில் அவருடைய பேச்சைக் கேளுங்கள்..
“நமக்கு இவ்வளவு அதரவு, அன்பு, பாராட்டு, ஊக்கம் தரும் மக்களுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோது உருவானதுதான் இந்த ‘அகரம் பவுண்டேஷன்.’
நூறு, இருநூறு என்று ஆரம்பித்து இப்போது ஆயிரம் பேர் உதவி ஊக்கம் பெற்றுள்ளனர். இதில் என் பங்கு சிறிதுதான் இதன் பின்னணியில் பலரது உழைப்பு இருக்கிறது. இது வளரும். எனக்குப் பின்னும் தொடரும்.
படித்தால் மட்டும் போதாது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகவல் தொடர்பு திறனில் நன்றாகப் படிப்பவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள். இதைக் களைய யோசித்து சாப்ட் ஸ்கில் வளர்க்க ஒரு பயிற்சி மையம் ஆரம்பிக்க இருக்கிறோம். இதற்கு மதுராந்தகத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை சாய்ராம் குழுமம் வழங்கியுள்ளது.
உலக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள். ஏன்? எதற்கு? என்ன? என்று தைரியமாகக் கேளுங்கள். உங்களுக்கேற்ற சரியான பாதை எது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நான்கூட ஏழாம் வகுப்பில் பெயில் ஆனவன்தான். அப்பா வேறு பள்ளியில் சேர்த்துவிட்டதால் தப்பித்தேன். செய்கிற பணியில் பெருமைப்பட வேண்டும்… எல்லாரும் என்ஜினியராகிவிட்டால் ப்ளம்பர் ஆவது யார்…? வெளிநாட்டில் ஒரு மெக்கானிக்கூட தன்னை ஒரு முதலாளி போல நினைத்து கர்வப்படுவார்…. ” – இவ்வாறு சூர்யா பேசினார்.
மாயக்கண்ணாடி படத்தில் இயக்குநர் சேரனும் இதே கருத்தைத்தான் சொல்லியிருந்தார். “யாருக்கு எது நன்கு வருமோ.. அதை இன்னும் நன்றாகச் செய்து அதில் பெரிய இடத்தைப் பிடிக்கலாமே…” என்றுதான் இயக்குநர் சேரன் சொல்லியிருந்தார்.
ஆனால் இங்கே அதனைப் புரிந்து கொண்டவர்கள் குறைவு.. படத்திற்கு பலமான எதிர்ப்புக் குரல்களை எழுப்பி, கடைசியில் அந்தப் படத்தின் பெருமையையே குலைத்துவிட்டார்கள்..
சூர்யாவும் இதைத்தான் சொல்ல வந்திருப்பார் என்று நினைக்கிறேன்.. சுருக்கமாகப் பேசுவதாக நினைத்து ஒரு வரியில் சொல்லியிருப்பதால் இதுவும் தவறாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும் என்று அஞ்சுகிறோம்..!
எந்த நாடாக இருந்தாலும் சமூகத்தில் பல பிரிவுகளும், பல துறை விற்பன்னர்களும் பெருகிக் கொண்டே செல்வது இறைவனின் செயல்.. அல்லது இயற்கையின் விருப்பம்..! இதில் எந்த நாட்டு மக்களும் தப்பவில்லை..
புரிந்து கொண்டால் சரி..!