‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ போன்ற தரமான படங்களை தயாரித்திருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தை பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கவுள்ளது. இது நடிகர் சூர்யாவின் 36-வது திரைப்படமாகும்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ், S.R.பிரபு இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
செல்வராகவனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பது இதுதான் முதல் முறை என்பதால் இந்தத் திட்டத்தின் அறிவிப்பு வெளியானவுடனேயே படம் பற்றிய எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் அதிகரித்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. வருகிற பொங்கல் நாளன்று படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, நடிகர் சிவக்குமார், இயக்குநர் செல்வராகவன், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் மற்றும் படத்தில் இடம் பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த ‘சூர்யா-36’ படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.