அரசியல் கட்சிகளை அலற வைத்திருக்கும் சூர்யாவின் படத் தலைப்பு..!

அரசியல் கட்சிகளை அலற வைத்திருக்கும் சூர்யாவின் படத் தலைப்பு..!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரப் போகும் படத்தின் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக நேற்றைக்கே அறிவித்திருந்தார்கள். அந்தப் படத்தின் போஸ்டர் டிஸைன் எப்படியிருக்கும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தவர்களுக்கு இன்றைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறார் சூர்யா.

படத்தின் பெயர்தான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம். ‘ஜெய் பீம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இந்தப் படத்திற்கு..!

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோல்தான் செய்கிறார். வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஜோதிகாதான் நடிக்கிறார். மேலும் ‘கர்ணன்’ படத்தின் நாயகியான ரஜிஷா விஜயனும் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கேரக்டரில் நடிக்கிறாராம்.

இந்தப் படத்தை கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய இயக்குநரான த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார்.

இருளர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஆனாலும், இந்தப் படம் பற்றிய ஒரு சிறிய செய்திகூட இதுவரையிலும் வெளியில் கசியவில்லை.

சைலன்ட்டாக படத்தைத் தயாரித்து வெளியிடுவது சூர்யாவின் வழக்கம் இல்லையே என்றாலும், இந்தப் படம் பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்போது அமைதிக்கான காரணமும் தெரியும் என்று சொல்லியிருந்தார்கள் சூர்யா வட்டாரத்தினர்.

அதற்கான காரணம் இன்று தெரிந்துவிட்டது. அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய விடுதலையின் முழக்கமான ‘ஜெய் பீம்’ என்பதையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்தியா முழுவதிலும் இருக்கும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க முழக்கப்பட்ட ஒரு அடையாளமாக இருக்கும் இந்த ‘ஜெய் பீம்’ என்ற கோஷத்தை சூர்யா தன் படத் தலைப்பாக வைத்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஞானவேல் ஒரு பத்திரிகையாளர். ‘ஆனந்தவிகடன்’ மற்றும் ‘குங்குமம்’ பத்திரிகைகளில் பல்லாண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’யில் சில ஆண்டுகள் பொறுப்பாளராகவும் இருந்தவர். சூர்யாவின் நெருங்கிய நண்பராக இருக்கிறார். இதனாலேயே இந்தப் பட வாய்ப்பும் இவரைத் தேடி வந்திருக்கிறது.

ஏற்கெனவே நடிகர் சூர்யா மீது மத்திய அரசும், பா.ஜ.கட்சியினரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நீட் தேர்வினை எதிர்த்து சூர்யாவும், கார்த்தியும் குரல் கொடுத்துள்ளனர். விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். மாணவர்களின் படிப்பு சம்பந்தமான பாடத் திட்டங்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்திருக்கின்றனர். கோவில்களுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளை அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுக்கலாமே என்று ஜோதிகாவும் குரல் கொடுக்க.. நடிகர் சிவக்குமாரின் ஒட்டு மொத்தக் குடும்பத்தின் மீதும் பா.ஜ.கட்சியினர் கடும் கோபத்தில்தான் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில்தான் தைரியமாக பா.ஜ.க.வினருக்கு பிடிக்காத வார்த்தையான ‘ஜெய் பீம்’ என்பதையே தலைப்பாக வைத்து ஒரு படத்தைத் துணிச்சலாக தயாரித்து வருவது நடிகர் சூர்யாவின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.

அதே சமயம் சூர்யாவுக்குள் இருக்கும் அரசியல் ஆசையும், ஆதங்கமும், விருப்பமும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த ஆசை முழுமையாக நிறைவேறுமா.. இல்லையா.. என்பது சூர்யா-கார்த்தி எதிர்ப்பாளர்களின் செயல்களைப் பொறுத்துதான் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Our Score