full screen background image

சூர்யா நடிக்கும் 42-வது படம் இன்று துவங்கியது

சூர்யா நடிக்கும் 42-வது படம் இன்று துவங்கியது

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ & ‘எதற்கும் துணிந்தவன்’ உட்பட சமீபத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், சூர்யா நடித்த மற்றும் தயாரித்த படங்கள் பலவும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதுடன், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. 

மகத்தான இத்தொடர் வெற்றிகளின்  மூலம் ‘ஸ்டார்’ மற்றும் ‘நடிகர்’ ஆகிய இரு களங்களிலும் தன்னை நிலைநிறுத்தி இந்தியத் திரையுலகில் தானோரு ‘அபூர்வ இனம்’ என்பதை சூர்யா நிரூபித்துள்ளார். 

சினிமா மீதான ஆர்வம், அவரது முழு அர்ப்பணிப்பு,  இணையற்ற விடாமுயற்சி மற்றும் சூர்யாவின் நிஜ வாழ்க்கையின் வீர உருவம் ஆகியவை பான்-இந்திய அளவில் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளன.

‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் நடிகர் சூர்யா, இன்று ஆகஸ்ட் 24, தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

சூர்யா 42’ என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், Studio Green நிறுவனத்தின் 25-வது படமாக உருவாகிறது. இப்படத்தினை  தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, மிகப் பெரிய பான்-இந்திய வெற்றி திரைப்படங்களில் சிலவற்றைத் தயாரித்த  UV Creations வம்சி-பிரமோத்  உடன் இணைந்து மிகப் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்தப் படத்தில் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அவர் சமீபத்திய பான்-இந்தியன் பிளாக் பஸ்டர் ‘புஷ்பா’ உட்பட பல சூப்பர் ஹிட் ஆல்பங்களை தந்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்த படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, மிலன் கலை இயக்கம் செய்கிறார்.  சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகள்  அமைக்கிறார், ஆதி சங்கர் திரைகதை எழுத, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். மேலும் ஹரிஹர சுதன் (சிஜி), ராஜன் (காஸ்ட்யூமர்), C.H.பாலு (ஸ்டில்ஸ்), கபிலன் செல்லையா (வடிவமைப்பாளர்), குப்புசாமி (மேக்கப்), சுரேஷ் சந்திரா & ரேகா D’One (பத்திரிகை தொடர்பு), ஷோபி (நடன அமைப்பு), தாட்சயினி (காஸ்ட்யூம் டிசைனர்), அனுவர்தன் (ஹீரோவுக்கு ஆடை வடிவமைப்பாளர்), நாராயணன்(இணை எழுத்தாளர்), மற்றும் R.S.சுரேஷ்மணியன் (புரடக்சன் கண்ட்ரோலர்) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் கமர்ஷியல் சினிமாவின் இயக்குநர் என்ற புகழை  ஒவ்வொரு திரைப்படத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இயக்குநர் சிவா இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இப்படம்  அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு  ஒரு மாறுபட்ட படைப்பாக இருக்கும்.

Our Score