நடிகர் சூர்யா தயாரித்த ‘ஜெய் பீம்’ படத்தில் ராஜாக்கண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் கதாபாத்திரத்தை பயன்படுத்த அவருக்கு பணம் தருவதாக கூறி தராமல் மோசடி செய்ததாக இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
ஆஸ்கர் போட்டிவரை சென்று திரும்பிய ‘ஜெய் பீம்’ படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளி வருகிறது. அதே சமயம் படத்திற்கு எதிர்ப்புகளும் தொடர்கிறது.
இந்த ‘ஜெய் பீம்’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திட்டமிட்டே இயக்குநர் ஞானவேல் இழிவுப்படுத்தியதாக அவர் மீதும் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஏற்கனவே ‘ஜெய் பீம்’ தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், புதிதாக ஒரு வழக்கு இயக்குநர் ஞானவேல் மீது பாய்ந்துள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தின் கதையில் இடம் பெற்ற ராஜாக்கண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் என்பவர், இயக்குநர் ஞானவேல் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், தன்னுடைய கதாபாத்திரத்தை படத்தில் பயன்படுத்துவதற்காக தன்னிடம் ஞானவேல் அனுமதி பெற்றதாகவும், அதற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி, சாஸ்திரி நகர் போலீசார், இயக்குநர் ஞானவேல் மற்றும் படக் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலமாக மீண்டும் ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் மற்றும் படக் குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு தயாரிப்பாளர் சூர்யா ஏற்கெனவே நிவாரணம் வழங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.