“இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலின் கையாள்…” – குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

“இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலின் கையாள்…” – குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சிக்கும், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரும், பெப்சி அமைப்பின் தலைவருமான இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக் குழுவில் எதிர்ப்பின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா சில காரணங்களினால் ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து இதன் பின்னணியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருப்பதாக இயக்குநர்கள் சங்கத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

இதையொட்டி சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் காமாட்சியை 'காஞ்சி காமாட்சி' என்று விமர்சித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் ஆதரவாளர்கள் ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

இதற்கு ஒரு அறிக்கை மூலமாக பதில் அளித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நோக்கி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கேள்வி அறிக்கை :

தமிழ் சினிமாவின் அனைத்து சங்கங்களிலும் எந்த ரூபத்திலாவது, ஏதாவதொரு பதவியில் துண்டு போட்டு அமர்ந்திருக்கும் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களே..!

r.k.selvamani

நான் ‘காஞ்சி காமாட்சி’... சாரி ‘சுரேஷ் காமாட்சி’! தயாரிப்பாளர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக பல மேடைகளில்... பல இடங்களில் கதறினாலும் நான் இன்னும் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை.

எனக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனைத் தவிர வேறெந்த டி-50 ஆசையெல்லாம் கிடையாது.

இரு நாட்களுக்கு முன்பு நீங்கள் சொல்லி எழுதப்பட்ட மொட்டைக் கடிதாசி ஒன்று உங்கள் அடிவருடிகளால் சுற்றவிடப்பட்டது.

இதில் எதற்கு மறைமுகமாக என்னை இழுக்க வேண்டிய அவசியம் வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்கலாமே...? பேசலாமே..?

அதனால்தான் நான் நேரடியாகவே உங்களிடம் வருகிறேன்.

நான் உங்களிடம் கேட்கப்போவது சில கேள்விகள்தான்.

இயக்குநர் இமயம் பதவி விலகலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..? அதுவும் நான் சொல்லி அவர் விலக வேண்டிய அவசியம் அவருக்கென்ன?

அவரை அவசரம் அவசரமாக பதவி ஏற்கச் செய்ததில் உங்களுக்கு வேண்டுமானால் உள்நோக்கம் இருந்திருக்கலாம்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு உங்கள் பழைய நண்பர் போட்டியிட்டால் கூட்டாகச் சேர்ந்து இன்னும் பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்பது அந்த உள் நோக்கமாக இருக்கலாம்.

அல்லது டி-50 நடத்தவோ அதன் பலன்களை அனுபவிக்கவோ தடையாக  வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கமும் ஒரு காரணமாக  இருக்கலாம்.

இயக்குநர் இமயம் மென்மையானவர் என்பதால், அவரை எளிதாக கன்வின்ஸ் பண்ணி தன் காரியம் சாதித்துக் கொள்ளும் உள்நோக்கமாகவும் இருக்கலாம்.

எனக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும் சொல்லுங்கள்..?

இவ்வளவு நாள் இயக்குநர் சங்கத்தில் செயலாளர் பதவியில் இருந்து என்ன செய்தீர்கள்...?

செம்மையாக செயல்பட்ட இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளையில் நீங்கள் இயக்குநர்களுக்காக செய்த அல்லது உதவி இயக்குநர்களுக்காக செய்த ஏதாவது ஒரு நல்ல நிகழ்வை எடுத்துக் காட்ட முடியுமா..?

இன்றுவரை உதவி இயக்குநர்களுக்கான ஊதியத்தை முறைப்படுத்தியுள்ளீர்களா..? அவர்களுக்கான  வேலை வாய்ப்புக்கான உத்திரவாதத்தை ஏற்படுத்தித் தர முடிந்ததா இதுவரைக்கும்?

தமிழகத்தின் அடையாளமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குநர் இமயத்தை மிரட்டினது மாதிரியும்.. அவருக்கு சுயமாக முடிவெடுக்கத் தெரியாத மாதிரியும் எப்படி சொல்ல முடிகிறது உங்களால் திரு. செல்வமணி அவர்களே?

போற்றுதலுக்குரிய எம் இமயம் பாரதிராஜா என்ன கைக் குழந்தையா.. நான் சொல்லிக் கேட்க..? அவர் அரசு நியமித்த தயாரிப்பாளர் சங்கத்தின் கமிட்டியில் இருக்கிறார். அப்படி நியமிக்கப்பட்ட ஒட்டு மொத்த சினிமாவின் அடையாளமான அவரை இயக்குநர்கள் சங்கத்தில் கொண்டு வர வேண்டிய காரணம் என்ன..?

vishal-r.k.selvamani

வெளிநாடு போக தயாரிப்பாளர் சங்கம் உங்கள் குடும்பத்திற்கு விமானச் சீட்டு வாங்கித் தர வேண்டிய கட்டாயம் என்ன..? விசாலுக்கும் உங்களுக்கும் என்ன டீலிங்..? விசால் ஏன் உங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்..?

பெப்ஸிக்கு எதிராக படைப்பாளிகள்னு ஆரம்பிச்சதே நீங்கதான். அப்புறம் பெப்ஸியில் பதவிக்குப் போட்டி போட்டு வெற்றி பெற்ற பின் விட்டுப்போன யூனியனையெல்லாம் சேர்த்துக்கிட்டு இப்போ தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்குறீங்க...?

சாதனை செய்த மதிக்கப்படத்தக்க மறைந்த இயக்குநர் ருத்ரய்யா அவர்கள் இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. அதனால் அவரது நல்லது கெட்டதில் சங்கம் கலந்து கொள்ளாதுன்னு சொன்ன நீங்களா... இயக்குநர் இமயத்தின் கௌரவத்தைப் பற்றி பேசுகிறீர்கள்.?

இத்தனை ஆண்டு காலப் பதவியை வைத்து ஏன் இமயத்தைப் பெருமைப்படுத்தும் ஒரு விழாவைக்கூட முன்னெடுக்கவில்லை. இறந்து போன மரியாதைக்குரிய கே.பாலசந்தர் பாலுமகேந்திரா மகேந்திரன் ஆகியோரை வரும் காலம் நினைவில் கொள்ள... பெருமைப்படும் வகையில் என்ன காரியத்தை செய்துள்ளீர்கள் இதுவரை..?

இப்படி எதுவுமே செய்யாத உங்களுக்கு இப்போது மட்டும் இயக்குநர் இமயத்தை தலைவர் பதவிக்கு அவசரம், அவசரமாக பின் வாசல் வழியாக அழைத்து வரும் நோக்கம்தான் என்ன.?

ஆரம்பத்தில் உங்கள் கபட நாடகம் தெரியாத அப்பா அன்பால் நெகிழ்ந்து மறுக்காமல் உறுப்பினர்களை மதித்து ஏற்றார் பதவியை. பின்புதான் தெரிந்தது இது நீங்கள் விரிக்கும் வலை என...

ஏற்கெனவே தமிழ்த்திரை தொலைக்காட்சி அனுபவம் அவருக்கு நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ... ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பதவி விலகினார்.

அன்பு உதவி இயக்குநர்களே...!

இவர் விசாலின் கையாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேர்தலை நேர்மையாக அவர் எதிர்கொள்ளட்டும். சுயநலத்தினால் எல்லாப் பதவிகளையும் வகித்துக் கொண்டு திரையுலகத்தை குழப்பத்திலேயே வைத்திருக்க முனைகிறார்.

நகரியில் வீடு கட்டிக் கொண்டு பெப்சி வாகனத்தில் டீசலை நிரப்பிக் கொண்டு தினமும் ஓசியில் சென்று வருகிறார்.

ஏன் இங்கேயே இருந்து நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் திறமையுள்ளவர்கள் யாருமில்லையா..?

எத்தனை திறமையாளர்கள் உள்ளனர்..? அவர்களையெல்லாம் அரசியல் செய்து அரசியல் செய்தே ஒதுக்கி வைத்துதானே எல்லா நலன்களையும் எடுத்துக் கொள்கிறார்.

இவரது மனைவி ஆந்திராவில் கட்சிப் பதவிகளில். ஆனால் இவரோ தமிழ்நாட்டில் எல்லா சங்கங்களிலும் பதவியில் இருப்பாராம்...!!"

இவ்வாறு தனது அறிக்கையில் கேள்வியெழுப்புள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..!