சூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..!

சூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..!

பிளக்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷாலினி வாசன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் நாயகனாக துருவா நடித்திருக்கிறார். இவர் ‘ஆண்மை தவறேல் ‘படத்தில் நாயகனாக நடித்தவர்.  நாயகியாக இந்துஜா நடித்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யாவும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் ஒரு ரகளையான  கதாபாத்திரத்தில் சிவ ஷாரா நடிக்கிறார். இவர் ‘மீசையை முறுக்கு’, ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்களில் நடித்தவர். மேலும் ஸ்ரீனி, நாகராஜன் கண்ணன், ஜானகி சுரேஷ், செளந்தர்யா நஞ்சுண்டன், சபீதா ராய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தளபதி ரத்னம், சுந்தர்ராம்  கிருஷ்ணன், இசை – திவாகரா தியாகராஜன், படத் தொகுப்பு – முருகவேல், கலை இயக்கம் – சூர்யா, பாடல்கள் – அருண் கார்த்திக், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், மக்கள் தொடர்பு – சக்தி சரவணன், தயாரிப்பாளர் – ஷாலினி வாசன், தயாரிப்பு நிறுவனம் – பிளக்ஸ் பிலிம்ஸ்.

இந்தப் படத்தை ஏ.கே. என்கிற அருண் கார்த்திக் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே குறும் படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது ‘லேகா’ என்கிற குறும் படம் திரையுலகத்தில் பரவலாக கவனம் பெற்ற படமாகும்.

நாயகன் துருவாவும், அவரது மாமாவான சிவ ஷாராவும் திருடர்கள். சின்னச் சின்னத் திருட்டுக்களை மட்டுமே செய்து வந்தவர்கள் முதல்முறையாக ஒரு பெரிய அஸைண்ட்மெண்ட்டில் இறங்குகிறார்கள்.

அதன்படி மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியின் மகளான இந்துஜாவை கடத்துகிறார்கள். இவர்கள் கடத்திய பின்புதான் தவறான ஆளைக் கடத்திவிட்டோம் என்பதே இவர்களுக்குத் தெரிய வருகிறது.

அன்றைக்குப் பார்த்து இந்துஜாவின் அப்பாவை யாரோ கொலை செய்திருக்கிறார்கள். அவருடைய அம்மாவுக்கு புத்தி பேதலித்துப் போய் இருக்கிறது. இந்த நிலைமையில் இந்துஜாவையும் தேடி ஒரு கும்பல் அலைகிறது.

தன் தந்தையைக் கொலை செய்துவிட்டு, தன்னையும் கொலை செய்யத் தேடும் அந்தக் கும்பலை அழிக்க துருவாவின் உதவியைக் கேட்கிறார் இந்துஜா. அதற்குள்ளாக இந்துஜாவை ஒரு தலையாய் காதலிக்கத் துவங்கியிருக்கும் துருவா.. இதற்குச் சம்மதிக்கிறார்.

இப்போது வில்லனின் கோஷ்டி நாயகனையும் சேர்த்தே தூக்குகிறது. இந்துஜாவின் கார் அவர்களுக்குக் குறியாக இருக்க அந்தக் காரைத் தேடி அலைகிறார் நாயகன். கார் கிடைத்தவுடன்தான் காரில் இருக்கும் விலை மதிப்பில்லாத போதை பொருள் நாயகன் கைக்கு வருகிறது.

இதனை வைத்து மிகப் பெரிய டீல் பேசி வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார் நாயகன் துருவா. நாயகியும் இதே கொள்கையை தன் மனதுக்குள் மட்டும் நினைத்துக் கொண்டு துருவாவை வைத்தே வில்லன் கோஷ்டியைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறாள்.

இருவரின் எண்ணப்படியே எல்லாமும் நடந்து முடிந்ததா..? போதைப் பொருள் டீல் நல்லபடியாக முடிந்ததா.. இல்லையா..? இறுதியில் பணம் யாருக்குக் கிடைத்தது..? என்பதையெல்லாம் இந்தப் படத்தைத் தியேட்டரில் போய் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாயகன் துருவாவிற்கு இது இரண்டாவது படம். அவரது உருவம் மற்றும் நடிப்புத் திறனுக்கேற்ற கதையாக இருப்பதால் அதிகம் மெனக்கெடாமல் நடித்திருக்கிறார். அனைத்துக் காட்சிகளிலும் ஒரே மாதிரியான முக பாவனையை வைத்திருப்பதுதான் எரிச்சலாக இருக்கிறது.

நாயகி இந்துஜாவுக்கு இந்தப் படத்தில் அழுத்தமான வேடம். சில குளோஸப் காட்சிகளில் மிக அழகாக நடித்திருக்கிறார். தனது அம்மாவிடம் கோபத்தோடு தனது உறவை அறுத்தக் கொள்ளும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் இதுவரையிலும் இல்லாத அளவுக்குக் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியைக் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் நெருக்கமும் ஓஹோ..!

ஷராவின் சிற்சில டைமிங் வசனங்கள் சிரிப்பைத் தந்தாலும் பல காட்சிகளில் அவரைப் பார்க்கும்போது பரிதாபமாகத் தெரிந்தது. அடுத்து இவர் என்ன பன்ச் அடிக்கப் போகிறார் என்பதே நமது எதிர்பார்ப்பாக அமையும்விதத்தில் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை வடிவமைத்திருக்கிறார்கள்.

இதில் இவருக்கு இரட்டை வேடங்கள் வேறு. ஒரு நல்ல போலீஸ் அதிகாரியாக இன்னொரு வேடத்தில் வந்து கதையை முடித்து வைக்கும் நபராகவும் வருகிறார். இவருக்கான இரட்டை வேடத்திற்கான காரணத்தை அடுத்த பாகத்தில் சொல்கிறாராம் இயக்குநர். ஐயோடா சாமி..!

‘மைக்கேல்’ என்னும் கேரக்டரில் அறிமுகமாகியிருக்கும் ஆதித்யாவுக்கு ஒரு பாராட்டு. அந்தக் கேரக்டருக்கு உரித்தான வில்லத்தனத்தை சிற்சில இடங்களில் காட்டியிருக்கிறார். இந்துஜாவின் அப்பாவாக நடித்தவரும், அம்மாவாக நடித்தவரும் சில இடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களாலேயே காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது.

காசிமேடு ஸ்ரீனியாக நடித்தவருக்கு பலத்த பில்டப்பு கொடுத்து நடனமாடவும் அனுமதித்திருக்கிறார்கள். கேங் லீடர் கதாபாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார் அவர்.

தளபதி ரத்னம், சுந்தர்ராம் கிருஷ்ணா இருவரின் ஒளிப்பதிவும் அருமை. கலர் கிரேடிங்கையும் மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். பாடல் காட்சிகளில் குளுமையையும், நடனமாடுபவர்களின் முக பாவனைகளையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

நடன இயக்குநருக்கு ஒரு பாராட்டு. ‘ஜில் ஜில் ராணி’ பாடலும், ஆடலும் ஜோர். படத்தில் அடிக்கடி வரும் டிவிஸ்ட்டுகளுக்கு ஏற்றாற்போல திரைக்கதையை மாற்றியமைத்து படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் இது சற்றுத் தெளிவில்லாமல் இருப்பதினால், இந்தப் படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விடுகிறது.

படத்தை நகைச்சுவை படமாகக் கொண்டு செல்வதா அல்லது சீரியஸ் படமாகக் கொண்டு செல்வதா என்கிற குழப்பம் இயக்குநருக்கே இருந்து தொலைத்திருப்பதால் அவரும் திரைக்கதையை சற்றுக் குழப்பத்துடனேயே நகர்த்தியிருக்கிறார். இதனாலேயே படத்தில் சீரியஸ் காட்சிகளில்கூட நம்மால் மனம் ஒன்றிப் பார்க்க முடியவில்லை.

போதைப் பொருள் பயன்படுத்தலில் இருக்கும் தீமைகளையும், அடுத்தத் தலைமுறையை நாசமாக்கும் செயலையும் இன்னும் கொஞ்சம் உரக்கச் சொல்லியிருக்கலாம். இதற்கு மாறாக இதையும் விற்று காசாக்க நினைக்கும் நாயகனையே இந்தப் படத்தில் காண்பித்திருப்பதால், கடைசியில் படம் நகைச்சுவை மோடுக்கு போய்விட்டது.

திரைக்கதையை காமிக்ஸ் புத்தகத்தின் வடிவில் தந்திருக்கும் புதுமை ஒன்றுதான் இந்தப் படத்தல் காணப்படும் புதிய விஷயம். மற்றபடி போதை மருந்து கடத்தல் பற்றிய படங்களில் இதுவும் ஒன்று.

இந்த ‘சூப்பர்-டூப்பரை’ ஒரு முறை பார்க்கலாம்..!

Our Score