full screen background image

“பாலகிருஷ்ணா சண்டை காட்சிக்காக 1 வாரம் பயிற்சியெடுப்பார்..” – சொல்கிறார் சண்டை இயக்குநர் ஸ்டன் சிவா

“பாலகிருஷ்ணா சண்டை காட்சிக்காக 1 வாரம் பயிற்சியெடுப்பார்..” – சொல்கிறார் சண்டை இயக்குநர் ஸ்டன் சிவா

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘அகண்டா’. இந்தப் படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் பிரமிப்பூட்டும்வகையில் சிறப்பாக இருந்ததாக தெலுங்கு திரையுலகமே பாராட்டித் தள்ளுகிறது.

இந்தப் படத்திற்கு சண்டை காட்சிகளை அமைத்தவர் பிரபல சண்டை இயக்குநரான ஸ்டன் சிவா. இவர் இயக்குநர் பாலாவின் ஆஸ்தான சண்டை இயக்குநராவார். பாலா இயக்கிய ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ ஆகிய 4 முக்கிய படங்களுக்கும் இவர்தான் சண்டை இயக்குநர்.

தற்போது இவரது சண்டை இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் ‘அகண்டா’ படம் பற்றி பத்திரிகையாளர்களிடத்தில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும்போது, “நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் இணைந்து வேலை செய்த வகையில் இது மூன்றாவது படம். முதல் படம் ‘லட்சுமி நரசிம்மன்’. இரண்டாவது படம் ‘சிம்ஹா’. இந்த மூன்று படங்களுமே வெற்றி படங்கள்தான். அதிலும் சமீபத்தில் வெளியான ‘அகண்டா’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் இயக்குநர் போயபதி ்ரீனுதான் எனக்கு இந்த வாய்ப்பினை கொடுத்தார். இப்படத்தில் ஆக்க்ஷன் மிகப் பெரிய அளவில் இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே 85 நாள்கள் படமாக்கப்பட்டது. ஆக்க்ஷனுக்காகவே இப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

இதுவரையிலும் நான் சண்டை இயக்குநராக 300 படங்களுக்கும் மேல் இயக்கி இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு முதலான மொழிகளில் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன்.

இத்தனை படங்கள் பணியாற்றிய பின்பும், இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய பெயர் கிடைத்ததற்கு காரணம் என்னுடைய மகன்கள், மற்றும் டைரக்டர் போயபதி ஸ்ரீனு, மற்றும் நான் சொன்னதைவிட அசத்தலாக நடித்திருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா சார்தான்.

இந்த ‘அகண்டா’ படத்தில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தும் உணர்ச்சிகரமாக இருக்கும், அதனால் நான் சண்டை கற்று தரும்பொழுதே பாலகிருஷ்ணா அவர்களுக்கு ஒரு கதாநாயகனாக மாறித்தான் கற்று தந்தேன்.

பாலகிருஷ்ணா நடித்த அனைத்து படங்களும் மாஸாக இருக்கும். இந்த படத்தில் கதைக்கு ஒத்துப் போகும்படியான சண்டைக் காட்சியையும், மாஸுடன் கிளாஸையும் இணைக்கும் வகையில் இயக்கியுள்ளேன்.

இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் இரண்டாவதாக வரும் அகோராவின் கதாபாத்திரத்திற்காக தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரையிலான சண்டை காட்சிகளை இயக்கியது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது.

இதுவரை அவர் செய்யாத அளவிற்கு சண்டை காட்சிகள் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக உழைத்தோம். ஒவ்வொரு சண்டை காட்சியையும் எடுப்பதற்கு, குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாகவே பயிற்சி செய்வார் நடிகர் பாலகிருஷ்ணா.

அவர் பயிற்சியிலும் ஒத்திகையிலும் நானும் என் மகன் கெவின் சொன்னதைவிட, நடிக்கும் போது 200 மடங்கு அவரின் நடிப்பை வெளிப்படுத்துவார். மற்ற படங்களில், நடிகர்கள் சண்டையிடும்போது கையில் கிடைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி சண்டையிடுவர். பின்னர் அதை தூக்கி வீசி விடுவது வழக்கம்.

ஆனால், இதில் நடிகர் பாலகிருஷ்ணா கையில் எடுப்பது  சூலம் என்பதால் அவர் கையில் எடுத்து அந்த காட்சி முடியும்வரையிலும் கையில் இருந்து விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.

சினிமாவில் நிறைய படங்களில் சூலத்தை பயன்படுத்தியிருந்தாலும் இந்த அகோரா கதாபாத்திரம் கையில் சூலத்தை எடுத்தால் அடுத்த 10 வருடத்திற்கு மக்கள் மத்தியிலும் திரையுலகிலும் இதை பற்றிதான் பேச்சு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துதான் எடுத்தோம்.

நீருக்கு அடியில் வரும் சண்டைக் காட்சிகளும், அதில் நடித்தது பாலகிருஷ்ணா என்பதால்தான் அந்த இடத்தில் எடுபட்டது.

நடிகர் பாலகிருஷ்ணா சொன்னதை செய்யும் நடிகர். பெரும்பாலும் ஆலோசனை வழங்க மாட்டார். அதே நேரம் அவர் ஆலோசனை கொடுக்க இடம் தராத வகையில் நான் காட்சிகளை கூறுவேன்.

கிளைமாக்ஸ் சண்டையின்போது பாலகிருஷ்ணாவுக்கு அடிபட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், ரத்தத்தை துடைத்துவிட்டு அடுத்த காட்சிக்கு தயாராகிவிட்டார்.

இந்தப் படத்திற்காக நான் ஒப்பந்தம் செய்த 3 படங்களை செய்ய முடியாமல் போனது. இந்த படத்தில் மொத்தம் 85 நாட்கள் பணி புரிந்தோம்.

‘அகண்டா’ படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் ரெட்டி எதைப் பற்றியும் யோசிக்காமல் போதிய வசதிகளையும் தேவைகளையும் செய்து கொடுத்தார். சண்டை காட்சிகளுக்கு மட்டும் கோடி கணக்கில் செலவு செய்தார்.

கிளைமாக்ஸ் சண்டையில் 150 ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்களை பயன்படுத்துவதற்கும் அவர் ஆட்சேபணை ஏதும் சொல்லவில்லை. அவர் கேட்டது “பைட் அனைத்தும் சூப்பரா வரணும் மாஸ்டர்…” என்பது மட்டும்தான். அவர் கேட்டது போல் நாங்களும் சிறப்பாக செய்திருக்கிறோம்.

இப்போது என்னுடைய சினிமா வாழ்க்கையில் மட்டுமில்லை… நடிகர் பாலகிருஷ்ணா அவர்களுக்கும் ‘அகண்டா ‘திரைப்படம் ஒரு அடையாளம் என பல்வேறு நாடுகளில் இருந்து பாராட்டுக்கள் வருவதைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..” என்றார்.

Our Score