19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வெற்றிகரமாக இன்று நடந்து முடிந்தது.
இந்த திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
இந்தப் படத்தை இயக்குநர் வசந்த் சாய் தயாரித்து, எழுதி, இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு பரிசுத் தொகையாக இயக்குநருக்கு 2 லட்சம் ரூபாயும், தயாரிப்பாளருக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘தேன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. கணேஷ் விநாயகன் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு பரிசுத் தொகையாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சரி சமமாக தலா 50,000 ரூபாய் அளிக்கப்பட்டது.
இன்னுமொரு இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கியிருந்த ‘சேத்துமான்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
நடுவர்களின் சிறப்புப் பரிசாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடித்திருந்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
இந்த வருடத்திய சினிமா சாதனையாளர் விருது இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு வழங்கப்பட்டது.
அமிதாப்பச்சன் பெயரில் வருடா வருடம் வழங்கப்படும் சிறந்த இளம் சாதனையாளருக்கான விருது பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.











