full screen background image

தேர்தல் பிரச்சாரத்தில் திரையுலக நட்சத்திரங்கள்..!

தேர்தல் பிரச்சாரத்தில் திரையுலக நட்சத்திரங்கள்..!

தேர்தல் வரும்போது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கு எப்படி சந்தோஷமோ, அப்படியேதான் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் பேச்சாளர்களுக்கும் சந்தோஷம் பிய்ச்சுக்கும். காரணம் காசு, பைசா, துட்டு, மால், பணம்தான்..!

தமிழகம் முழுவதும் பல ஊர்களில் தொடர் பிரச்சாரம் செய்ய கிளம்பினால் கட்சித் தலைமை கொடுக்கும் பணம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒவ்வொரு ஊரிலும் மேடையை ஏற்பாடு செய்யும் கட்சியின் பிரதிநிதிகளும் கொஞ்சம் கவனிப்பார்கள். அப்படி, இப்படி என்று மேடைக்கு 10000 ரூபாய் தேற்றிவிடலாம். இது சாதாரண ஒரு பேச்சாளருக்கு. இதுவே ஸ்டார் பேச்சாளர் என்றால் லட்சத்தைத் தாண்டிவிடும்..

இதோ இப்போது நடைபெறவிருக்கும் 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு கிளம்பியிருக்கும் நட்சத்திரங்களை கட்சி வாரியாக பார்த்துவிடுவோம்..

அ.தி.மு.க. சார்பில் வாக்கு வேட்டையாட கிளம்பியிருக்கும் திரையுலக நட்சத்திரங்கள் :

ராமராஜன்,  வெண்ணிற ஆடை நிர்மலா, பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, செந்தில்,  சிங்கமுத்து, ஆனந்தராஜ், கவிஞர் முத்துலிங்கம், T.K. கலா, சி.ஆர். சரஸ்வதி, விந்தியா,  பொன்னம்பலம், குயிலி, அனிதா குப்புசாமி, குண்டு கல்யாணம், இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், வையாபுரி மற்றும் சிலர்..

சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் 2 சீட்டுகள் கேட்டும் கிடைக்காததால்,  அதிருப்தியில் இருக்கும் சரத்குமாரும், ராதிகாவும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க கிளம்புவார்களா என்பது இப்போதுவரையிலும் தெரியவில்லை. ஆனால் இவர்களது கட்சியினர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. சார்பில் நடிகை குஷ்புவும், நடிகர்கள் வாகை சந்திரசேகரும், குமரி முத்துவும் தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள். இவர்களுடன் திண்டுக்கல் லியோனியும் சேர்ந்து கொள்கிறார்.

தே.மு.தி.க. சார்பில் கட்சியில் இருக்கும் ஒரேயொரு பிரபலமான நடிகர் ராஜேந்திரபிரசாத் சூறாவளி சுற்றுப் பயணம் கிளம்புகிறாராம்.

பா.ஜ.க.வில் இருக்கும் ஒரேயொரு பிரச்சாரப் புயலான நடிகர் எஸ்.வி.சேகர் பிரச்சாரத்துக்கு தயாராகிவிட்டாரா என்று தெரியவில்லை. இப்போது சென்னையிலேயே ஒவ்வொரு டிவி அலுவலகத்திற்கும் நேரில் சென்று போட்டி பேட்டிகளில் பங்கெடுத்து வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகளில் நேரடியாக எந்த சினிமா பிரபலமும் சேராததால் யாரையும் இந்த மேடைகளில் பார்க்க முடியாது.

அதிமுகவில் இந்த ஸ்டார் பேச்சாளர்களுக்கு கட்சி மேலிடம் 50000 ரூபாயும், அந்தந்த மேடை பொறுப்பாளர்கள் இன்னொரு 50000 ரூபாயும் தர வேண்டும் என்பது தலைவியின் கட்டளையாம்.. அனைவருக்கும் 40 நாட்கள் பிரச்சார லிஸ்ட் போட்டு கையில் கொடுத்துள்ளார்களாம்.. ஊர், ஊரா நாயா, பேயா அலைஞ்சாலும்.. கைல காசு மிகச் சரியாக வந்துவிடும் என்பதால் இவர்களுக்குக் கவலையே இல்லை..

தி.மு.க.வில் 1 லட்சம் என்று குஷ்புவுக்கு பேசியிருந்தாலும் இதனை அறிவாலயம் தராது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களாம். இதேபோல் வாகை சந்திரசேகருக்கும் இதே தொகைதான். ஆனால் இவர் அதிகம் அதட்டி கேட்க மாட்டாராம். கொடுத்தால் வாங்கிக் கொள்வாராம். கொடுக்காவிட்டாலும் வஞ்சனையில்லாமல் பேசிவிட்டு வருவாராம். குமரிமுத்து கொடுக்கும் தொகையை வாங்கிக் கொள்வாராம்..! திண்டுக்கல் லியோனி 50000 கேட்கிறார் என்கிறார்கள். இந்த முறையும் இவரது பிரச்சாரம் இருக்கும் என்றே தெரிகிறது..

சென்ற சட்டமன்றத் தேர்தலில் கோடிகளில் பணத்தை வாங்கிக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்த வைகை புயல் வடிவேலு இந்த முறை கேமிரா முன்பு மட்டுமே நிற்க முடிவெடுத்திருப்பதால் விஜயகாந்துக்கு பதில் சொல்லும் ஒரு வேலை மிச்சமானது.

ராதாரவி இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை என்பதால் அவருக்கு மேடை கிடைக்கவில்லை.. அ.தி.மு.க.வில் சேர்வதற்கு பெரும் முயற்சி செய்து பார்த்தும் இடம் கிடைக்காததால் சோர்ந்து, ஓய்ந்து போய்விட்டார்.

ஒரு ரவுண்டு அடித்து, முடிந்த அளவுக்கு சம்பாதித்துவிட்டு அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரையிலும் காத்திருப்பதுதான் இந்த கட்சி பேச்சாளர்களின் வாடிக்கை..! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டியதுதான்..!

Our Score