தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான நிதியை திரட்டுவதற்காக ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியை தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் வரும் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி சம்பந்தமான பேச்சுவார்த்தைக்காக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவரான என்.சீனிவாசனை நேற்றைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பேசினார்கள்.
இதன் பின்னர் சென்னை பெருநகர காவல்துறை துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்ற நடிகர் சங்க நிர்வாகிகள், காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரனை நேரில் சந்தித்து ஏப்ரல் 17 அன்று நடைபெறவிருக்கும் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டிக்கு காவல்துறை போதுமான அளவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் ஸ்டார்ஸ் கிரிக்கெட் பற்றி பேட்டியளித்த நாசர், “இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் வேற்று மாநில நடிகர்களையும் கொண்ட 8 அணிகள் விளையாட இருக்கின்றன. இந்தப் போட்டி 6 ஓவர்கள் கொண்டது. ஒவ்வொரு டீமுக்கும் 6 ஓவர்கள் மட்டுமே தரப்படும். ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் விளையாடுவார்கள். ஏழு போட்டிகளை தொடர்ச்சியாக நடத்தவுள்ளோம். நாக்அவுட் முறையில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பதால் அன்றைக்கே இறுதிப் போட்டியும் நடைபெறும்.
இந்தப் போட்டிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு என்பதை இன்னமும் நாங்கள் முடிவு செய்யவில்லை. ரஜினியும், கமலும் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. ஆனால் போட்டிகளை பார்க்க வருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களும் கலந்து கொள்ளவிருப்பதால் சினிமா ரசிகர்கள், பொது மக்கள் கூட்டம் அலைமோதும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம். இதனால் இந்தப் போட்டியன்று ஸ்டேடியத்தில் அதிகளவில் காவல்துறையின் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.. “ என்றார்.









