full screen background image

நட்சத்திர கிரிக்கெட் போட்டி – வெற்றிக் கோப்பையை நடிகர் விக்ரம் அறிமுகப்படுத்தினார்..!

நட்சத்திர கிரிக்கெட் போட்டி – வெற்றிக் கோப்பையை நடிகர் விக்ரம் அறிமுகப்படுத்தினார்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் கட்ட  நிதி திரட்ட பல்வேறு முயற்சிகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

அதில் ஒரு பகுதியாக சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொள்ளும்வகையில் ஒரு நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தக் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

IMG_7843

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். தமிழ் நடிகர்கள் மட்டுமில்லாமல் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட இதர மொழி நடிகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் மோத உள்ளன. ஒவ்வொரு அணியிலும் தலா 6 நடிகர்கள் வீதம் 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். இந்த போட்டி 6 ஓவர்களை கொண்டதாக இருக்கும். காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் 8 அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த 8 அணிகளின் தூதுவர்களாக நயன்தாரா, திரிஷா, சமந்தா, அமலாபால், ஹன்சிகா, காஜல் அகர்வால் ஸ்ரீதிவ்யா, வரலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

8 அணிகளுக்கும் ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘மதுரை காலேஜ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘கோவை கிங்ஸ்’, ‘சேலம் சீட்டாஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘ராமநாடு ரைனோஸ்’ என்று மாவட்டங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

நட்சத்திர கிரிக்கெட் ‘சேட்டிலைட்’ உரிமை மற்றும் டிக்கெட் கட்டணங்களை சேர்த்து 13 கோடி  நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளின் அறிமுக கூட்டம் நேற்று மாலை சென்னை தாஜ் ஹோட்டலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 48 நடிகர்களும், தூதராக நியமிக்கப்பட்ட 8 நடிகைகளும் கலந்து கொண்டனர்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். இந்த விழாவில் பரிசுக் கோப்பையை நடிகர் விக்ரம் வெளியிட்டார்.

Our Score