full screen background image

ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வில் ‘உயரமான நடிகை யார்?’ என்ற கேள்வி..!

ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வில் ‘உயரமான நடிகை யார்?’ என்ற கேள்வி..!

மத்திய அமைச்சகங்களிலும், இதர மத்திய அரசு துறைகளிலும் ஊழியர்களை நியமிப்பதற்காக, SSC என்ற பணியாளர் தேர்வாணையம் அண்மையில் எழுத்து தேர்வை நடத்தியுள்ளது.

நாடு முழுவதும் நடந்த இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள்தான் இப்போது சர்ச்சையாகியுள்ளன..

பாலிவுட்டை சேர்ந்த நடிகைகள் நான்கு பேரின் பெயர்களை கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என்று ஒரு கேள்வியில் கேட்டிருக்கிறார்கள்.

ssc-actress-height

பாலிவுட் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, கேத்ரினா கைஃப், ஹுமா குரேஷி ஆகிய நான்கு பேர்தான் சாய்ஸில் கொடுக்கப்பட்டிருந்த நடிகைகள்.

இதேபோன்று “காதலர் தினம் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது…?” என்ற மற்றொரு கேள்வியும் கேட்கப்பட்டிருந்ததாம். இந்தக் கேள்வியுடன் இந்த ஆண்டில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஒரு கேள்வியும் கேட்கப்பட்டு, இவை இரண்டில் ஏதாவது ஒன்றிற்கு பதிலளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இந்தக் கேள்விகளுக்கு தேர்வை எழுதியவர்கள் பதிலளித்துவிட்டு வந்தாலும் விஷயம் வெளியில் பரவி பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. இதை கேள்விப்பட்ட தேசிய மகளிர் ஆணையம் பணியாளர் தேர்வாணையத்தின் இந்தச் செயலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

“பட்டதாரிகள் எழுதும் இது போன்ற தேர்வுகளில் இத்தகைய கேள்விகள் மிகவும் அபத்தமானவை…” என்று கூறிய மகளிர் ஆணையம், “மேற்கூறிய இந்த இரண்டு சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படக் கூடாது..” என பணியாளர் தேர்வாணையத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்றதற்காக இப்போது வருத்தம் தெரிவித்துள்ள பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பட்டாச்சார்யா, “இந்த கேள்விகள் ஏற்கத்தக்கதல்ல… முறையற்றது.. தரக்குறைவானதுதான்..” என்று ஒத்துக் கொண்டுள்ளார்.

மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று “இந்த 2 கேள்விகளும் மதிப்பெண் திருத்தும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது…” என்றும் பட்டாச்சார்யா உறுதி அளித்துள்ளாராம்.

ஆக.. நான்கு பாலிவுட் நடிகைகளால் தேர்வு எழுதிய அனைவருக்கும் 2 மதிப்பெண்கள் போனஸாக கிடைக்கப் போகிறது..!

Our Score