தெலுங்கில் தொடர்ந்து 6 வெற்றி படங்களையும், கடந்த 2016-ம் ஆண்டில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் 4 தொடர் வெற்றி படங்களையும் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது தமிழிலும் – தெலுங்கிலும் இரண்டு மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து, இந்த 2017 ஆண்டை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறார்.
தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து, தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் ஸ்ருதிஹாசனுக்கு, சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் ‘கட்டமராயுடு’ திரைப்படத்தின் வெற்றி மேலும் பெருமையை சேர்த்துள்ளது.
தமிழில் அஜீத் நடித்து வெளிவந்த ‘வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்குதான் இந்த கட்டமராயுடு. இதில் தெலுங்கின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் கல்யாண் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில்தான் 2-வது முறையாக பவன் கல்யாணுடன் ஜோடி போட்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இந்தப் படம் வெற்றி பெற்றதையடுத்து ராசியான நடிகை என்கிற பெயரை எடுத்திருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். தொடர்ச்சியாக அவரது தெலுங்கு படங்கள் வெற்றி பெற்றிருப்பதை வைத்துத்தான் இப்படி சொல்கிறார்கள் தெலுங்கு திரையுலகத்தினர்.
இந்த ‘கட்டமராயுடு’ படத்தில் ஸ்ருதியின் நடிப்பிற்கும், நடனத்திற்கும், ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, தமிழ் – தெலுங்கில் வெளியான ‘சிங்கம் 3’ திரைப்படம் மூலம் இந்த 2017-ம் ஆண்டை வெற்றியுடனேயே துவக்கியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். மேலும் ஹிந்தி திரையுலகில் நிலையாக அவர் கால் பதித்து இருப்பதால், அவருடைய தென் இந்திய மொழி திரைப்படங்கள் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பையும், அதே போல் அவருடைய இந்தி படங்கள் தென் மாநிலங்களில் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறதாம்.
இத்தகைய தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் ஸ்ருதி ஹாசனின் அடுத்த திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிரிபார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சுந்தர் சி.யின் ‘சங்கமித்ரா’.
இந்த ஸ்ருதிஹாசனின் ‘ராசி’ ஒர்க் அவுட்டானால் நிச்சயமாக தமிழ்த் திரையுலகிற்கு புதியதொரு சாதனை கிடைக்கும் என்று உறுதியாகவே சொல்லலாம்.