தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக விக்ரமன் தேர்வு..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக விக்ரமன் தேர்வு..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குநர் விக்ரமன் தலைமையிலான அணி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ்ச் சினிமா துறையில் பெப்சியுடன் இணைந்த ஒரு சங்கமாக இருப்பது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம். இந்தச் சங்கத்தில் 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்தச் சங்கத்திற்கு தேர்தலே நடத்தப்படாமல் இருந்து வந்த சூழலில் இந்த ஆண்டுதான் நீதிமன்ற நடவடிக்கையின்படி தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் இயக்குநர் விக்ரமன் தலைமையில் ‘புது வசந்தம் அணி’ என்கிற பெயரில் இயக்குநர்களும், எழுத்தாளர்களும் போட்டியிட்டனர்.

இதேபோல் ‘எழுத்தாளர்கள் அணி’ என்கிற பெயரில் முன்னாள் தலைவரான மோகன் காந்திராமன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் உள்ள சமூக நலக்கூடத்தில் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தும் 410 உறுப்பினர்கள்தான் வாக்களிக்கும் தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள். இவர்களில் 291 உறுப்பினர்கள்தான் இன்றைக்கு வாக்களித்தார்கள்.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் அரை மணி நேர இடைவெளியில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றார். இவர் 204 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மோகன் காந்திராமன் வெறும் 86 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

அதே சமயம் செயலாளர் பதவிக்கு ‘புது வசந்தம் அணி’யின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் செயலாளர் வி.சிகுகநாதன் வெறும் 9 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய செயலாளர் பிறைசூடனிடம் தோல்வியடைந்தார். பிறைசூடன் பெற்ற வாக்குகள் 150. வி.சி.குகநாதன் பெற்ற வாக்குகள் 141.

இயக்குநரும், நடிகருமான என்.எஸ்.ரமேஷ் கண்ணா பொருளாளர் பதவிக்கு ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.

துணைத் தலைவர்கள் தேர்தலில் ‘புது வசந்தம் அணி’யில் போட்டியிட்ட பழம் பெரும் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞரான பஞ்சு அருணாச்சலம் 194 வாக்குகள் பெற்றும், இயக்குநர் ‘யார்’ கண்ணன் 219 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.

இணைச் செயலாளர் பதவிக்கு ‘புது வசந்தம் அணி’யின் சார்பாகப் போட்டியிட்ட எழுத்தாளர் வி.பிரபாகர் 238 வாக்குகள், இயக்குநர்கள் டி.கே.சண்முகசுந்தரம் 215 வாக்குகள், சி.ரங்கநாதன் 225 வாக்குகள், கவிஞர் பா.விஜய் 230 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.

செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஒட்டு மொத்தமாக 12 இடங்களையும் ‘புது வசந்தம் அணி’யே கைப்பற்றியிருக்கிறது.

இந்த அணியின் சார்பாக போட்டியிட்ட இயக்குநர் மனோஜ்குமார் 218 வாக்குகள், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி 208 வாக்குகள், எழுத்தாளர் காரைக்குடி நாராயணன் 204 வாக்குகள், நடிகர் தம்பி ராமையா 203 வாக்குகள், கவிஞர் சினேகன் 196 வாக்குகள், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் 193 வாக்குகள், இயக்குநர் பாலசேகரன் 191 வாக்குகள், டப்பிங் கலைஞர் வி.ஹேமமாலினி 190 வாக்குகள், நடிகர் மெளலி 182 வாக்குகள், எழுத்தாளர் அன்னக்கிளி செல்வராஜ் 190 வாக்குகள், நடிகர் ராதாரவி 177 வாக்குகள், எழுத்தாளர் மதுரை தங்கம் 156 வாக்குகளைப் பெற்றும் வெற்றி பெற்றனர்.

செயலாளர் பதவியை மட்டுமே பறி கொடுத்தாலும் மீதமிருக்கும் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் புது வசந்தம் அணி கைப்பற்றியிருப்பதால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புது வசந்தம் வீசும் என்று அதன் உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள்..!

Our Score