full screen background image

திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்-நடிகர்கள் சங்கம் இரண்டாக உடைந்தது..!

திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்-நடிகர்கள் சங்கம் இரண்டாக உடைந்தது..!

திரையுலக சங்கங்களின் அடுத்த கலாட்டா போர்ஷன் ஸ்டண்ட் நடிகர் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தில் நடந்தேறியுள்ளது.

தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கத்தில் 700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள்தான் சினிமாவில் இடம் பெறும் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்கள். கதாநாயகர்களுக்கு சண்டைப் பயிற்சி அளிக்கிறார்கள். உயரத்தில் பறந்து சண்டை போடுவது, கார், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி அடிபட்டு கிடப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார்கள்.

இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் ஸ்டண்ட் இயக்குநர்களும் ஸ்டண்ட் நடிகர்களும் கலந்து கொண்டனர். பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம், தளபதி தினேஷ், தியாகராஜன், சூப்பர் சுப்பராயன், அனல் அரசு, சந்திரசேகர், குன்றத்தூர் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

பொதுக் குழுவில் ஸ்டண்ட் நடிகர்களுக்கும், ஸ்டண்ட் இயக்குனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கயிறு கட்டி சண்டை போடும் காட்சிகளில் நடிக்க தயாரிப்பாளர்களிடம் இருந்து தங்களுக்கு அதிக சம்பளம் வாங்கித் தர வேண்டும் என்று ஸ்டண்ட் நடிகர்கள் வற்புறுத்தி பேசினர். கனல் கண்ணன் சங்கத்தில் இல்லாதவர்களை வைத்து சண்டை காட்சி எடுத்ததாகவும் குற்றம் சாட்டினர். இதுபோல் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் தங்களுக்குத் தெரியாமல் சண்டை காட்சியை படமாக்கியதாக ஸ்டண்ட் இயக்குநர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் கலாட்டா, ரகளை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடிக்கப் பாய்ந்தனர். இதனால் ஸ்டண்ட் இயக்குநர்கள் பலரும் கூட்டத்தில் இருந்து வெளியேறி வேறொரு இடத்தில் போட்டிக் கூட்டம் நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் சங்கத்தில் இருந்து விலகி தனி அமைப்பு தொடங்கி செயல்படப் போவதாக திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு நேரில் சென்று கடிதம் கொடுத்துள்ளனர்.

இவர்களே சண்டை கலைஞர்கள்தான். சண்டையிடுவதற்கு காரணம் கிடைத்துவிட்டால் போதாதா..? அதுதான் நேற்று கைகலப்புவரையிலும் சென்றிருக்கிறது.

எல்லாமே தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் ஈகோ பிரச்சனைதானாம். தற்போது தலைவராக இருக்கும் ராஜசேகர் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். பெப்சி விஜயன், மலேசியா பாஸ்கர் போன்ற பழைய பெருச்சாளி இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டதாலும், பல புதிய ஸ்டண்ட் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாலும் பழையவர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

இதில் ஒரு சில ஸ்டண்ட் இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத நடிகர்களை வைத்து சண்டை காட்சிகளை படமாக்குவதாக பல ஸ்டண்ட் நடிகர்களுக்கு அசாத்தியமான கோபம். போதாக்குறைக்கு பலரும் பேசிய தொகையையும் தயாரிப்பாளர்களிடத்தில் பேசி வாங்கித் தருவதில்லை என்றும் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இது எல்லாமும் சேர்ந்துதான் தங்களது குருவையே எதிர்த்து குரல் எழுப்பவும், கேள்வி கேட்கவும் வைத்துவிட்டது. ஏற்கெனவே இவர்களது டார்ச்சரினால் பிரபலமான ஸ்டண்ட் இயக்குநரான பீட்டர் ஹெயின் சென்னை நெசப்பாக்கத்தில் குடியிருந்தாலும் இந்தச் சங்கத்தில் இருந்து விலகிப் போய் ஆந்திர ஸ்டண்ட் இயக்குநர்கள் சங்கத்தில் மெம்பராகிவிட்டாராம்.

ஸ்டண்ட் நடிகர்களும், இயக்குநர்களும் ஒரே சங்கத்தில் செயல்பட முடியாது என்பதை இப்போதுதான் இவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே நடனக் கலைஞர்கள் சங்கத்திலும் பிரச்சினை வந்து நடன இயக்குநர்கள் தனியாகச் செல்வதாக அறிவித்தனர். அதே கதைதான் இங்கேயும்..!

இனிமேல் பெப்சி சமாதானப்படலத்தை துவக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்..!

Our Score