திடீர் உடல் நலக் குறைவால் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் காலமான நடிகர் குமரி முத்துவின் உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் குமரி முத்து மறைவு குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தன்னுடைய நடிப்பாலும், மறக்க முடியாத தனிப்பட்ட சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து அவர்கள் நம்மைவிட்டு பிரிந்தமைக்காக மனம் வருந்துகிறோம்.
அவரை இழந்து வாடும் அவருடைய உற்றாருக்கும், சுற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பிக்கிறோம்.
இந்த நேரத்தில் அண்ணன் குமரிமுத்து அவர்கள், நமது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஆற்றிய அரும்பணிகளையும், முந்தைய காலத்தில் சங்க நலத்திற்காக குரல் கொடுத்து போராடியதையும் இப்போது நியமன செயற்குழு உறுபினராக நம்மோடு இணைந்து செயல்பட்டு சங்க முன்னேற்றத்திற்காக பல்வேறு யோசனைகளை வழங்கியதையும் இப்போது நன்றியுடன் நாம் நினைவு கூர்கிறோம்.
நிறைவு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தைவிட்டு சென்றிருக்கும் அண்ணன் குமரிமுத்து, நம்முடைய பெருமைமிக்க சங்கத்திற்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே, அவர் ஆத்மாவுக்கு நாம் செலுத்துகின்ற மலர் வளையமாகும்..” என்று குறிப்பிட்டுள்ளனர்.