full screen background image

தென்னிந்திய நடிகர் சங்கத்தை மூன்றாகப் பிரித்தால்தான் என்ன..?

தென்னிந்திய நடிகர் சங்கத்தை மூன்றாகப் பிரித்தால்தான் என்ன..?

ஒரு மாநில அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை போல பல கலாட்டாக்கள், கோப பேச்சுக்கள்.. உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்கள்.. டிராமாக்கள்.. தள்ளுமுள்ளு.. வாக்குப்பதிவில் தில்லுமுல்லு என்று சகலத்தையும் செய்து ஒரு வழியாக தென்னிந்திய நடிகர் சங்கம் தனது தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது.

மிகக் கடுமையாக உழைத்து சங்கத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கும் நாசர் தலைமையிலான அணி சந்தோஷத்தில் இருந்தாலும், அவர்களுக்கெதிராக இருக்கும் பணிகள் நிச்சயம் அவர்களைத் தூங்கவிடப் போவதில்லை.

paandavar team

“ஸ்பை சினிமாஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நாங்களே நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவோம்.”

“நாடக நடிகர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்துவோம். அவர்களின் நல்வாழ்க்கு வழி காண்போம்..”

என்ற இந்த இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இந்த அணியினர்.

ஆனால் இதன் பின்னால் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் இவர்கள் சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது.. அதற்குள் இருக்கும் ஆயிரம் அரசியல்களை இவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

முதலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வோம்.

நடிகர் சங்கக் கட்டிடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பிறகு அங்கே சினிமா தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகம் வரப் போகிறது என்று செய்தி வெளியானது.

அப்போதே, “நடிகர் சங்க கட்டிடம் இருக்கும் இப்போதைய இடம் குடியிருப்புப் பகுதி. அங்கே வணிக வளாகம் வந்தால் எங்களது குடியிருப்புக்கு பெரும் தொல்லையாக இருக்கும். நாங்கள் சுதந்திரமாக இருக்க முடியாது. எனவே இத்திட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது..” என்று கூறி அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் பலரும் ஒன்று சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அந்த வழக்கில் எதிர் பார்ட்டியாக நடிகர் சங்கம் சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தங்களது தரப்பு மனுவை கோர்ட்டில் சொல்லவில்லையாம். அதற்கு மாறாக இன்னொரு எதிர்மனுதாரரான சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தாக்கல் செய்த தனது பதில் மனுவில், “நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எந்தவொரு விண்ணப்பத்தையும் எங்களிடம் இதுவரையிலும் சமர்ப்பிக்கவில்லை..” என்று கூறியது. இதனை முன் வைத்து வழக்கினை விசாரித்த நீதிபதி. “இனி வரும் காலங்களில் அந்த இடத்தில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட முனையும்போது  மனுதாரர்கள் கோர்ட்டுக்கு வரலாம்..” என்று சொல்லி அந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

ஆக.. அந்த இடத்தில் வணிக வளாகம் போன்று எது கட்டினாலும் நிச்சயம் ஆயிரம் தடைக்கற்கள் தாராளமாக போடப்படும் என்பது உறுதி. அந்தப் பகுதி மக்களே இதற்கு கடும் எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த எதிர்ப்பினால் 7 அல்லது 8 மாடிகள் கொண்ட கட்டிடமாக கட்டினாலும் வணிக வளாகமாகவோ, அல்லது சினிமா தியேட்டர்களை உள்ளடக்கியதாக இருந்தாலோ சி.எம்.டி.ஏ. அனுமதி கிடைக்குமா என்பது இப்போதுவரையிலும் சந்தேகம்தான். அதே சமயம் ஐ.டி. நிறுவனங்கள் போன்ற அலுவலக அமைப்பு என்றால் அனுமதி கிடைக்க வாய்ப்புண்டு.

இது போன்று அலுவலக அமைப்பில் கட்டிடங்களை அமைத்துவிட்டு அதில் வரும் மாத வாடகை வருமானத்தை வைத்துத்தான் நாடக நடிகர்களின் வறுமையை போக்க வேண்டும் என்பதால் ஸ்பை சினிமாஸ் தர முன் வந்த 24 லட்சம் ரூபாய் வருமானத்தையும் தாண்டிய வருமானத்தை இவர்கள் சம்பாதிக்க வேண்டுமெனில் அதை இவர்கள் எப்படி செய்யப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

எப்படி கட்டினாலும் மாதத்திற்கு 24 லட்சம் ரூபாய் வாடகைக்கும் மேலாக கிடைக்கும்படிதான் திட்டம் போட வேண்டும். இல்லையெனில் ராதாரவி வறுத்தெடுத்துவிடுவார் என்பது இவர்களுக்கு தெரியும். அது போன்று 7, 8 மாடி கொண்ட அமைப்பு எனில் அதைக் கட்டுவதற்கு அதிகப்பட்சம் 12-ல் இருந்து 15 கோடி ரூபாய்வரையிலும் செலவாகும்.

இந்தச் செலவுக்காக மறுபடியும் சிங்கப்பூர், மலேசியா, துபாயில் அனைத்து நடிகர் நடிகைகளையும் வைத்துக் கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தலாமா என்கிற ஐடியாவுக்கு வந்திருக்கிறார்கள் புதிய நிர்வாகிகள். இதை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறப் போகும் செயற்குழுவில் முடிவு செய்யப் போகிறார்களாம்.

கலை நிகழ்ச்சி நடத்தினாலும் ஒரே சமயத்தில் 12 அல்லது 15 கோடியை வசூல் செய்துவிட முடியாது. குறைந்தபட்சம் 3 இடங்களிலாவது அல்லது 3 முறை நடத்தித்தான் சம்பாதிக்க முடியும். அதுவும் மிகப் பெரிய தொலைக்காட்சி சேனல் மனம் வைத்து, சேனல் ரைட்ஸ் வாங்கினால்தான். இது முடியக் கூடிய விஷயம் என்றாலும், முழு பணமும் கைக்குக் கிடைக்கவே ஒரு வருடம் ஆகிவிடும்.

பின்னர் பிளானிங், பிளானிங் அப்ரூவல்.. இதையெல்லாம் கடந்து கட்டிடம் கட்டத் துவங்கவே 2 ஆண்டுகள் ஆகிவிடும். ஒரு ஆண்டில் அடித்தளத்தைத் தோண்டும் பணியில் இருக்கும்போதே அடுத்த தேர்தல் வந்துவிடும். ‘அதான் தோண்டிட்டோமே…’ என்று சொல்லி மறுபடியும் இதே டீம் ஆட்சியைப் பிடிக்கலாம். ஐயமில்லை. வெற்றி பெறுவார்கள்.

தோராயமாக கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகிவிடும். அடுத்த பதவியாண்டில் இதனை அவர்கள் திறந்து வைக்கலாம். பெருமைப்படலாம். சாதித்துவிட்டோம் என்று கர்வப்படலாம். ஆனால் கிடைக்கப் போகும் அந்தப் பணத்தில் கட்டிடத்தைக் கட்டிவிட்டு மாத வருமானமாக கிடைக்கவிருக்கும் தோராயமான 30 லட்சத்தில் எத்தனை உறுப்பினர்களுக்கு எத்தனை நல்லதை இவர்களால் செய்ய முடியும்..?

mgr-sivaji-thangavelu

தற்போது சங்கத்தில் இருக்கும் 3139 உறுப்பினர்களில் சினிமா ஹீரோ, ஹீரோயின்கள் மற்றும் முக்கிய கேரக்டர்களில நடிக்கும் பிரபலமான நடிகர், நடிகையர், சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் துணை நடிகர்கள், மற்றும் தமிழகம் முழுவதிலும் இருக்கும் நாடக நடிகர்களும் அடங்குவர்.

இப்படி மூன்று சங்க உறுப்பினர்களை உள்ளடக்கி ஒரே சங்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த ஒரே சங்கத்தில் கிடைக்கும் பணத்தினை வைத்துதான் இந்த மூன்று சங்க உறுப்பினர்களையும் இவர்கள் பரமாரிக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்பதெல்லாம் இவர்களுக்கு மிகப் பெரிய சுமை. இதை இவர்கள் இப்போதாவது உணர்ந்தார்களா என்று தெரியவில்லை.

மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சங்கம் அமைத்திருக்கும் இந்த நாடக நடிகர்களில் பெரும்பாலோர் இப்போதே 50 வயதை கடந்தவர்கள்.

கடந்த 1985-ம் ஆண்டுக்கு முன்புவரையிலும் பிஸியாக இருந்த இந்த நாடக நடிகர்கள், அதற்குப் பின் வந்த கால மாற்றச் சூழலில் தொலைக்காட்சியின் அபரிமிதமான வளர்ச்சியினாலும், நாடகங்களைக் காண ஆர்வமில்லாத தலைமுறை\யினர் தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்ட காரணத்தினாலும் காணாமலேயே போய்விட்டார்கள்.

இப்போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக வருடத்திற்கு 2 மாதங்களில் மட்டுமே இவர்களுக்கு நாடக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த 2 மாதங்களுக்காக காத்திருந்து நடித்து வரும் இந்தக் கலைஞர்களின் உண்மையான கலை அர்ப்பணிப்பு சினிமா கலைஞர்களிடத்தில்கூட காண முடியாதது. இவர்களில் பலரும் இப்போதும் வேறு, வேறு வேலைகள் பார்த்துக் கொண்டு நாடகம் நடிக்க அழைக்கும்போது போய் நடித்துவிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

நாடக நடிகர்களுக்கு இப்போதைய பெரிய தேவையே மாத ஓய்வூதியம்தான். தற்போது மாநில அரசு இவர்களில் 60 வயதைக் கடந்தவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இந்த 1500 ரூபாயை வைத்துக் கொண்டு இவர்கள் என்ன செய்வார்கள் என்று அரசுகள் யோசிப்பதில்லை. அரசுகளைப் பொறுத்தவரையில் ‘பிச்சை போட்டாச்சு. அவ்வளவுதான்..’ என்கிற மனப்பான்மை.

ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டிக் காப்பாற்றி அடுத்தத் தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும் உன்னதமான இந்தக் கலைஞர்களுக்கு இந்த நாட்டின் அரசுகள் கொடுக்கின்ற கடைசி மரியாதை இதுதான். இந்த பிச்சைதான்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் ஒருவர் குடித்தனம் நடத்த மாதத்திற்கு எத்தனை ரூபாய்கள் தேவை என்பது அனைவருக்குமே தெரியும். குறைந்தபட்சம் 10000 ரூபாய் இருந்தால்தான் கவுரவமாக வாழ முடியும். இதில் வெறும் 1500 ரூபாயை கொடுத்துவிட்டு போய்த் தொலை என்றால் அவர்களால் எப்படி தங்களது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, நாடகக் கலையை தொடர்ந்து நடத்த முடியும்..?

இந்தக் கலைஞர்களுக்கு குறைந்தபட்சம் 10000 ரூபாயாவது கிடைக்கப் பெற வேண்டும் என்பதுதான் நியாயமானது. ஆனால் இதனை யார் அவர்களுக்குக் கொடுப்பது..? எப்படி கொடுப்பது..?

artistes union-logo

இன்னொரு பக்கம் வேறொரு பிரச்சினை. ராதாரவி செயலாளாரக இருந்தவரையிலும் சேலத்தில், நெல்லையில், தூத்துக்குடியில் யாராவது ஒரு நாடக நடிகர் இறந்துபோனால் நேரமிருந்தால் தானே நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கையில் 5000 ரூபாய் ஈமச்சடங்கிற்காக கொடுத்துவிட்டு வருவார். இது வாடிக்கையாக நடந்ததுதான். இனிமேல் அப்படி இந்த புதிய பாண்டவர் அணியினரால் ஓட முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் அனைவருமே சினிமாவில் மிக பிஸியான நடிகர்கள், நடிகைகள்.

ஏற்கெனவே இந்த 2 மாத கால நடிகர் சங்க முஸ்தீபு வேலைகளினால் நடிகர் நாசர் நடிக்க வேண்டிய பல படங்கள் அவரது கையை விட்டுப் போயிருக்கின்றன. விஷால், மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோல் இனிமேல் இவர்களால் தொடர்ந்து இருக்க முடியுமா..?

தலைவரும், செயலாளரும் சங்கத்திற்கு தினமும் வர வேண்டும். பஞ்சாயத்துக்களை மேற்கொள்ள வேண்டும். ஒரூ சீனியர் ஆக்டர் நடிக்க வர மறுக்கிறார் என்றால் அவரை போனில் பிடித்து பேசி, தாஜா செய்து படப்பிடிப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும். சம்பளப் பாக்கி விஷயத்திற்காக விடிய விடிய தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து செய்ய வேண்டும். இத்தனை வேலைகளுக்கு  நடுவில் தங்களுடைய படங்களிலும் நடிக்க வேண்டும். கூடுதலாக நாடக நடிகர்களையும், அவர்களுடைய பிரச்சினைகளையம் சமாளிக்க வேண்டும் எனில் முடிகிற காரியமா..?

3139 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு இப்படி அல்லல்படுவதைவிட தற்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத்தை மூன்றாகப் பிரித்துவிட்டால்தான் என்ன..?

சினிமாவில் மட்டுமே நடித்து பெயரெடுத்திருக்கும் நடிகர், நடிகைகள் ஒரு தனி சங்கமாகவும், நாடக நடிகர்கள் தனி சங்கமாகவும், துணை நடிகர்கள் தனி சங்கமாகவும் உருவாக வேண்டும்..! இப்படி செய்தால் ஒவ்வொரு சங்கத்தினருக்கும் பணிச் சுமையும், செலவு சுமையும் பெரிதும் குறையுமே..?

கேரளாவில் அம்மா அமைப்பில் 300-க்கும் அதிகமான உறுப்பினர்களே இருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலோர் சினிமா நடிகர்கள் மட்டுமே. ஐந்து படங்களில் நடித்திருந்தால் மட்டுமே அங்கே அனுமதி. கேரளாவில் தமிழ்நாட்டைவிடவும் அதிகமான நாடகக் குழுக்கள் இருக்கின்றன. ஆனால் அங்கே அவர்களுக்கு தனித்தனி சங்கங்களும் இருக்கின்றன. அதனால் பிரச்சினையில்லை.

ஆந்திர நடிகர் சங்கத்திலும் 300-க்கும் குறைவான உறுப்பினர்கள். கன்னட நடிகர் சங்கத்திலும் இதே நிலைமைதான். ஆனால் தமிழில் மட்டுமே துணை நடிகர்களையும், நாடக நடிகர்களையும் இன்னமும் சேர்த்து வைத்துக் கொண்டு கூட்ஸ் வண்டி போல இழுத்துக் கொண்டே செல்கிறார்கள்.

சங்கத்தைப் பிரித்தால் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைவு. அதே உறுப்பினர்களின் மனநிலையில் இருப்பவர்களே தலைமைப் பொறுப்புக்கு வரும்போது அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்காக பேசுவதும், செயல்படுவதும் மிக எளிதாக இருக்கும்.

நாடக கலைஞர்களுக்கு அவர்களது சக கலைஞர் ஒருவரே தலைவராகவும், செயலாளராகவும் வரும்போது அவர்களுடைய பிரச்சினைகளை அவர்களே மிக எளிதாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமே..? எதற்காக இவர்களிடம் வந்து கையைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டும்..?

சங்கத்தைப் பிரித்தால் உருவாகும் சங்கங்களின் செலவுகளுக்கு பணத்திற்கு எங்கே போவது என்பார்கள். இங்கேதான் அந்த நடிகர் சங்க இடத்தை கவனிக்க வேண்டும்.

artiste union-1

அந்த இடம் மொத்தம் 18 கிரவுண்டு. கிட்டத்தட்ட 1 ஏக்கர். தி.நகரில் இன்றைய மார்க்கெட் மதிப்பின்படி ஒரு கிரவுண்ட்டு மனையின் விலை 8 கோடி ரூபாய் என்று ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அந்த இடத்தின் மொத்த மதிப்பு தோராயமாக 145 கோடி என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனை மூன்றாகப் பிரித்தால் ஒரு சங்கத்திற்கு 48 கோடி ரூபாய் கிடைக்கும். இதனை வங்கியில் டெபாசிட் செய்தாலே வருடத்திற்கு வட்டியாக கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வரும்.  மாதத்திற்கு 33 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும்.

மாத வட்டியாகவே 33 லட்சம் ரூபாய் கிடைத்தால் அதை வைத்து குறைந்தபட்சமாக இருக்கும் சினிமா நடிகர்கள் தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். துணை நடிகர்கள் சங்கத்தினரும் தங்களுடைய உறுப்பினர்களில் 60 வயதைக் கடந்த மூத்த நடிகர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 8000 ரூபாயாவது பென்ஷனாக கொடுக்கலாம்.

இதேபோல் நாடக நடிகர்கள் சங்கமும் தங்களுடைய 600-க்கும் மேற்பட்ட 60 வயதினை கடந்த உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய்க்கும் மேலாக ஓய்வூதியத்தினை தர முடியும். அரசு கொடுக்கின்ற 1500 ரூபாயோடு இதுவும் சேர்ந்தால் அந்த நாடக நடிகர்கள் நிச்சயமாக கடைசி காலம்வரையிலும் இந்த நாடகக் கலையை அர்ப்பணிப்போடு செய்வதற்கு நம்மாலான உதவிகளைச் செய்தது போலிருக்கும்.

ஆனால் இப்படி மூன்று சங்கங்களுமே ஒன்றாக இணைந்திருக்கும் சூழலில் கிடைக்கவிருக்கும் 30 லட்சம் ரூபாய் தோராயமான தொகையில் மூன்று சங்க உறுப்பினர்களுக்கும் சேர்த்து அப்படி என்ன செய்திட முடியும்.,.?

நடிகர் சங்க இடத்தில் ஒரு பாதியை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தன் சொந்தப் பணத்தில் வாங்கி அதை சங்கத்திற்கு தானமாக கொடுத்தார். இதன் பின்பக்கத்தில் இருக்கும் ஒரு பகுதியை பின்னர் சக கலைஞர்கள் இணைந்து பணம் போட்டு வாங்கினார்கள்.

“கலைவாணர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஆர். ராதா போன்ற ஜாம்பவான்கள் நாடகம் போட்ட பகுதி இது. நாடக நடிகர்கள் மற்றும் சினிமா நடிகர்களின் அடையாளமே இந்த இடம்தான்…” என்றெல்லாம் வசனம் பேசி இனியும் அவர்களை, அவர்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.

இரண்டு அறை கொண்ட குடும்பத்தில் அடுத்தத் தலைமுறை தலையெடுக்கும்போது வீட்டை பெரிதாக்குவார்கள். அல்லது கூடுதல் அறைகள் கொண்ட வீட்டிற்கு குடி பெயர்வார்கள். அதற்கும் வழியில்லையெனில் அனைவரும் சமரசமாக பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். இது தவிர்க்க முடியாதது.

அதைப் போல இதையும் நினைத்துக் கொண்டு சங்கத்தை உடைத்துவிட்டார்கள்.. சங்கத்தை பிரித்துவிட்டார்கள் என்கிற அவப் பெயர் வருமே என்றெல்லாம் கருதாமல் விஸ்தாரமாக சிந்தித்து இதில் நல்ல முடிவையெடுத்து நாடக நடிகர்களை வாழ வைத்தால் அவர்கள் நிச்சயம் தற்போதைய நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகளை வாயார வாழ்த்துவார்கள். இந்தச் சமூகமும் வாழ்த்தும்..!

“இது எங்களால் முடியாது. நாங்கள் என்றென்றும் சேர்ந்தேதான் இருப்போம்…” என்று சொல்வார்களேயானால், சினிமா கலைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி  ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் கிடைக்கின்ற மொத்த வருமானத்தையும் நாடகக் கலைஞர்களுக்குக் கொடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது கிடைக்கப் பெறும்படி செய்யுங்கள்..! உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்..!

எப்படியிருந்தாலும், அடுத்தத் தலைமுறையினருக்கு நாடகக் கலை என்பதே தெரியாமல் போய்விட்டது என்பதற்கான பழி பாவம் இன்றைய நடிகர் சங்கத்தினருக்கு வரக் கூடாது என்பதே நமது விருப்பம்..!

யோசித்து செயல்படுங்கள் கலைஞர்களே..!

Our Score