தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் மார்ச் 20-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான புதிய அணி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு செயல்படுத்தினார்கள்.
தீபாவளி பரிசுகளை உறுப்பினர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைத்தார்கள். ஊர், ஊராகச் சென்று நாடகக் கலைஞர்கள் பற்றிய புள்ளி விபரங்களை சேகரித்தார்கள். உறுப்பினர்கள் அனைவரின் தகவல்களையும் திரட்டினார்கள். நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார்கள்.
முக்கியமாக ஸ்பை சினிமாஸ் உடனான புதிய கட்டிடம் கட்டும் ஒப்பந்த்த்தை ரத்து செய்துவிட்டு சங்கத்தின் நிலத்தை மீட்டுள்ளார்கள். கூடவே சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவதற்காக வரும் ஏப்ரல் மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்தப் புதிய நிர்வாகிகளின் பதவியேற்புக்கு பிறகான முதல் பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள்.
இது பற்றி ஆலோசனை நடத்த இன்று சங்க நிலத்தில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்தார்கள். அப்போது ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பற்றியும் ஆலோசித்தார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், அறங்காவலர்கள் ஐசரி கணேஷ் மற்றும் குட்டி பத்மினி மேலும் சங்க நிர்வாகிகளான நடிகர்கள் ஸ்ரீமன், அஜய் ரத்தினம், A.L.உதயா, விக்னேஷ், பசுபதி, ஹேமச்சந்திரன், நடிகைகள் லலிதா குமாரி, சோனியா, சங்கீதா, ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.









