full screen background image

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைக்காமல் ஏமாற்றிய எம்.ஜி.ஆர்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைக்காமல் ஏமாற்றிய எம்.ஜி.ஆர்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 22 லட்சம் ரூபாய் செலவில் 1979-ம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டு அந்தக் கட்டிடத்திற்கான கடன் தொகையை கட்டாமல்விட்டதினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து விஜயகாந்த் தலைவராக இருந்தபோது ஒரு வழியாக கட்டி முடித்த கதையை இந்தப் பதிவில் படித்திருப்பீர்கள்.

ஆனால் இந்தக் கடன் தொகையை 1979-லேயே முழுமையாக அடைத்திருக்கலாமாம். இதற்கான வாய்ப்பு அப்போதைய தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர். வசம் இருந்திருக்கிறது.

முதலில் ஆர்வமாக இதில் இறங்கிய எம்.ஜி.ஆர்., கடைசி நேரத்தில் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியான நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அ.தி.மு.க. எதிர்ப்பு அரசியல் பேச்சுக்களால் கோபப்பட்டு, கடனை அடைக்க மறுத்துவிட்ட உண்மைக் கதையும் நடந்திருக்கிறது.

இது பற்றி இந்தப் பிரச்சினையில் நேரடி சாட்சியாக இருந்த பழம் பெரும் நடிகர் வி.கே.ராமசாமி 2002-ம் ஆண்டு எழுதிய தனது ‘எனது கலைப்பயணம்’ என்ற நூலில் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.

v-k.ramasamy

அந்தக் கட்டுரை இங்கே நமது நேயர்களுக்காக பதிவு செய்யப்பட்டுகிறது..!

எனது கலைப்பயணம் – வி.கே.ராமசாமி – பக்கம் 430-436

“சிலர் தீவிரமாகப் பாடுபட்டும் சங்கம் மட்டும் ஏனோ வளரவேயில்லை. நிதிப் பற்றாக்குறை என்பது நிரந்தரமாகக் கவலைப்படுவதற்கான விஷயமாகவே இருந்து வந்தது. எம்.ஜி.ஆர். தவிர, சிவாஜி, எஸ்.எஸ்.வாசன், சின்னப்பா தேவர், ஏவி.எம்.செட்டியார் போன்றோர் சேர்ந்து பணம் போட்டு சங்கத்துக்காக நிலம் வாங்கி, கட்டிடம் கட்ட முனைந்தார்கள்.(தி.நகர் அபிபுல்லா சாலையில் இப்போதிருக்கும் வளாகம்) கட்டிடம் கட்டுவதாக முடிவு செய்து வாசன் அவர்கள் அடிக்கல்லும் நாட்டினார். ஆனாலும் ஒரு கட்டிடம் கட்டும் அளவுக்கு நிதி சேரவில்லை.

அப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். தம்மால் நடிகர் சங்கத்துக்காக முழு நேரமும் ஒதுக்க முடியாத நிலையில் எம்.ஜி.ஆர். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டார்.

mgr-1

‘ஆசை, ஆசையா உருவான சங்கம் இது. நடிகர்களின் வளர்ச்சி நலனுக்காக ஆரம்பமானது. ஆனால் இந்தச் சங்கம் இன்னும் வளராமல் இருக்கிறது. ரொம்ப வருத்தமா இருக்கு. தம்பி சிவாஜியை இதுக்குத் தலைமைப் பொறுப்பை ஏத்துக்கச் சொல்லுங்க. எப்படியாவது சங்கத்துக்கு ஒரு சொந்தக் கட்டிடம் கட்டியே ஆகணும்..’ என்றார்.

நான் சிவாஜிக்கு மிக நெருக்கமானவன் என்பதால் நான் சொன்னால் சிவாஜி கேட்பார் என்று எம்.ஜி.ஆர். நினைத்திருக்கலாம். எனக்கொன்றும் இதில் ஆட்சபணை இல்லை என்பதால் ‘அதற்கென்ன.. சிவாஜியிடம் நான் பேசுகிறேன்..’ என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டு ‘சட்டாம்பிள்ளை’ வெங்கட்ராமனுடன் சிவாஜியை சந்திக்கச் சென்றேன்.

‘நான் தலைவராவது பெரிசில்லை. சங்கத்துக்குக் கட்டிடம் கட்டணும்னா பேங்க்ல லோன் வாங்க வேண்டியிருக்கும். நிர்வாகத்தை கவனிக்க புதுசா தகுந்த ஆட்களை நியமிப்பேன். கட்டிடம் கட்ட ஆகுற செலவை நிர்வாகக் குழு அடைக்கிறவரைக்கும் சங்கத்துக்கு புதுசா தேர்தல் வைக்கக் கூடாது. இதுக்கெல்லாம் சரின்னு ஒப்புதல் தந்தா, நான் தலைமைப் பொறுப்பை ஏத்துக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..’ என்று சிவாஜி சொன்னார்.

நான் சிவாஜி சொன்ன இந்த நிபந்தனைகளை அப்படியே எம்.ஜிஆரிடம் சென்று சொன்னபோது, ‘அவர் இஷ்டப்படி செய்யட்டும். பொறுப்பு ஏத்துக்க தயார்ன்னா சரி. ஆனா ஒண்ணு.. சங்கம் நல்லா வளரணும்..’ என்றார் எம்.ஜி.ஆர். இந்தப் புதிய ஏற்பாட்டுக்கு நடிகர்கள் மற்றும் திரைத்துறையினர், அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது.

mgr-sivaji-thangavelu

திட்டமிட்டபடி சிவாஜி தலைவரானார். மேஜர் சுந்தர்ராஜன் செயலாளராகவும், நான் பொருளாளராகவும் அமர இரண்டு உப தலைவர்கள், இருபத்தி நான்கு கமிட்டி உறுப்பினர்கள் என்று நியமிக்கப்பட்டு துரிதமாக இயங்க ஆரம்பித்த்து சங்கம்.

வங்கியில் கடன் வாங்கி கட்டிடம் கட்டும் பணியை முதலில் தொடங்கினார் சிவாஜி. அப்ப்ப்பா..! எப்படிப்பட்ட நாட்கள் அவை..!?

ஷாஜஹான்கூட தாஜ்மஹால் கட்டியபோது இத்தனை ஈடுபாடு காட்டியிருக்க மாட்டார்…? பொழுது விடிந்தால்போதும்.. நாங்கள் ஓடி வந்து கட்டிடம் உருவாகிற இடத்தில் உட்கார்ந்து கொள்வோம். ஒரு செங்கல், ஒரு துளி மணல் வீணால்கூட சிவாஜி கவனித்துக் கேட்பார்..! கட்டிடம் உயர்ந்த ஒவ்வொரு அங்குலத்திலும் எங்கள் கவனம் பதிந்திருந்த்து. அப்படிப் பார்த்துப் பார்த்து கட்டினோம்.

அடிக்கடி முதல்வர் எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு, கட்டிடத்தின் வளர்ச்சி நிலை பற்றி தகவலை தந்து கொண்டேயிருப்போம். அவரும் எங்களை உற்சாகமூட்டிக் கொண்டேயிருப்பார்.

mgr-svaji-5

சுமார் 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் உருவானவுடன் எம்.ஜி.ஆரே. அதனை திறந்து வைத்தார். பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்பிக்கையுமான நாட்கள் அவை. எப்படியும் நடிகர் சங்கம் இனி ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்துவிடும் என்று தீவிரமாக நம்பினோம்.

கட்டிடம் உருவாகி இயங்க ஆரம்பித்தவுடன் எங்கள் முன் இருந்த முதல் பிரச்சினை அந்த 22 லட்சம் ரூபாய்க் கடன்தான். அதனை அடைத்தால் ஒழிய பிற வளர்ச்சிப் பணிகள் சாத்தியமில்லை என்கிற நிலையில் நாங்கள் மறுபடியும் எம்.ஜி.ஆரை சந்தித்து ‘என்ன செய்யலாம்..?’ என்று யோசனை கேட்டோம்.

mgr-sivaji-1

எம்.ஜி.ஆர். சற்று யோசித்த பின், ‘ஒன்று செய்யுங்கள்.. தமிழ்நாட்டின் நான்கு பெரிய நகரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு நட்சத்திர இரவு நடத்துங்கள். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அந்த நிகழ்ச்சிகள் நடப்பதாக இருக்கட்டும். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து நான் உங்கள் கடனை அடைத்துவிடுகிறேன்..’ என்றார். இந்த யோசனை சிறப்பான வெற்றியைக் காணும் என்று தோன்றவே சிவாஜியும் இதற்குச் சம்மதித்தார்.

திருநெல்வேலி, மதுரை, கோவை, சேலம் நகரங்களில் நடந்த அந்தக் கலை இரவு நிகழ்ச்சிகளை மாபெரும் சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும்.  வெறும் கேலிக்கூத்தான நட்சத்திர நிகழ்ச்சிகளாக இல்லாமல் அற்புதமான நாடகங்கள்.. இசை நிகழ்ச்சிகள்.. நகைச்சுவை காட்சிகள், நடனங்கள் என்று கண்டவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு போனது அந்த நிகழ்ச்சிகள்.

அன்றைக்குத் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த பல நட்சத்திரங்கள் பங்கு பெற்று சிறப்பித்த அந்த நிகழ்ச்சிகளின் மூலம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் வசூலானதாகக் கேள்வி.

நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட கலைஞர்களுக்கான போக்குவரத்து, உணவு, பிற வசதிகளைத் தாமே செய்து தந்து அரசாங்கம் நிதியையும் தாமே நேரடியாக வசூலித்த்து. ஆனால் பேசியபடி ஏனோ நடிகர் சங்கக் கட்டிடத்துக்கான கடனை அடைக்க அரசு தருவதாகச் சொன்ன பணம் வந்து சேர தாமதமாகிக் கொண்டே போனது. நானும், மேஜர் சுந்தர்ராஜனும் இது குறித்து நடையாய் நடந்து கொண்டிருந்தோம்.

5 லட்சம் ரூபாய் மட்டும் முதல் தவணையாக வந்து சேர.. அதன் பின்பு மூச்சுப் பேச்சே இல்லை. வேறு வழியில்லாமல் நானும், மேஜர் சுந்தர்ராஜனும் மீண்டும் எம்.ஜி.ஆரை சந்திக்கப் போனோம்.

‘என்ன விஷயம்…?’ என்று கேட்டார்.

‘ஐயா கடனை அடைக்கத் தருவதாகச் சொன்ன தொகையில் 5 லட்சம் மட்டும் தந்தீர்கள். மீதி இன்னும் வந்து சேரலையே..?’ என்றோம் தவிப்பாக.

mgr-sivaji-4

எம்.ஜி.ஆர். சற்று நேரம் என்னை உற்றுப் பார்த்தார்.

‘மீதி.. நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்..? அடுத்த நிர்வாகம் வந்து அடைத்துக் கொள்ளட்டுமே..?’ என்றார் சாதாரணமாக.

நான் அதிர்ந்துவிட்டேன். அடுத்த நிர்வாகம்..? என்ன சொல்ல வருகிறார் எம்.ஜி.ஆர். என்று எனக்குப் புரியவில்லை.

‘என்ன சொல்றீங்க..?’ என்று அவரிடமே கேட்டேன்.

‘புரியலையா..? நீங்க ஒண்ணும் கடன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பேசாம சங்கத்துக்குத் தேர்தல் வைங்க. அடுத்த நிர்வாகம் வரும். அப்போ பார்த்துக்கலாம்..’ என்றார்.

தேர்தல் வைப்பதா..? சிவாஜி பொறுப்பு ஏற்பதற்கு முன்பேயே சொன்ன கண்டிஷனை இவர் மறந்துவிட்டாரா..? கடன் அடைக்கப்படும்ம்வரை தேர்தல் கூடாது என்று சிவாஜி சொன்னதை இவர் ஒப்புக் கொண்ட பின்னால் அல்லவா, அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கவே சம்மதித்தார். இதெல்லாம் எம்.ஜி.ஆர். அறியாததல்லவே..? நான் இவற்றையெல்லாம் மீண்டுமொருமுறை எம்.ஜி.ஆருக்கு ஞாபகப்படுத்தினேன்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் கூறி முடித்ததும் தம் கருத்திலோ, முடிவிலோ எவ்வித மாற்றமும் இல்லாதவராக ‘நீங்க கவலைப்படாம போங்க.. அடுத்த நிர்வாகம் வந்து பார்த்துக்கட்டும்..’ என்றார் தீர்மானமாக.

என்ன காரணம்..? ஏன் எம்.ஜி.ஆர். இப்படி சொல் மாறினார்..? புரியாமல் தவித்தேன். என் தவிப்பைப் புரிந்து கொண்டவராக அவரே அதற்கான விடையையும் தந்தார். அதைக் கேட்டபோது நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

சிவாஜிகணேசன் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார். ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசை மிகக் கடுமையாக காங்கிரஸார் விமர்சனம் செய்து கொண்டிருந்த நேரம் அது.

மதுவிலக்கு ரத்தாகி இருந்த காலக்கட்டமான அந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தார். இந்த இரு விஷயங்களையும் இணைத்து ‘அப்பனுக்குச் சாராயம்.. பிள்ளைக்கு சத்துணவா..?’ என்று காங்கிரஸ் மேடைகளில் எம்.ஜி.ஆரை தாக்கினார்கள் காங்கிரஸ்காரர்கள்.

mgr-sivaji-3

தனிப்பட்ட ரீதியில் சிவாஜிக்கு, எம்.ஜி.ஆரிடம் எவ்வித மனத்தாங்கலும் கிடையாது. எனினும் அரசியல், கட்சி என்று வரும்போது அவர் அரசு மது விலக்கை ரத்து செய்ததை விமர்சனம் செய்தே ஆக வேண்டிய நிலை. அதைத்தான் அவர் செய்தார். இதைத்தான் எம்.ஜி.ஆர். மிகவும் பர்ஸனல் அட்டாக்காக எடுத்துக் கொண்டார்.

இந்த விஷயத்தை அவரே என்னிடம் குறிப்பிட்டு, ‘தம்பி சிவாஜி இப்படி பேசாலாமா..? அவரே இப்படியெல்லாம் என்னை குறை சொன்னால் என்ன அர்த்தம்..?’ என்று கேட்டார். எனக்குச் சங்கடமாகிவிட்டது. சிவாஜி அவர்களின் அரசியல் மேடை விமர்சனங்களை மனதில் கொண்டு நடிகர் சங்க நலனை அந்தரத்தில் தொங்க விடுவது என்ன நியாயம்..?

‘ஐயா உங்களுக்குத் தெரியாத்தில்லை. அரசியலையும், நடிகர் சங்க விஷயத்தையும் இணைக்காதீங்க. சங்கத்து கடனை அடைக்க வேண்டியது முக்கியமில்லையா..?’ என்று கேட்டேன்.

‘அது முக்கியம்தான்.. அதுக்குத்தான் சொல்றேன். பேசாம தேர்தல் வைச்சிடுங்க. அடுத்த நிர்வாகம் வந்து பார்த்துக்கட்டும்..’ என்றார் பழையபடியே. நான் இடைவிடாமல் கொஞ்ச நேரம் வாதாடிக் கொண்டேயிருந்தேன். எம்.ஜி.ஆரும்., சளைக்கவில்லை. ‘தம்பி இப்படியெல்லாம் பேசலாமா..? அதுதான் தேர்தல் வைங்க..’ என்று இதே வார்த்தைகளைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தார்.

ஒரு கட்டத்தில் எனக்குப் புரிந்துவிட்டது. இனிமேல் இவரிடம் பேசி காரியம் வெற்றியாதல் சாத்தியமில்லை என்று உணர்ந்தேன். மிகுந்த சோகம் நெஞ்சை அழுத்த, ‘அப்ப நான் இதையே போய் சிவாஜியிடம் சொல்லிடறேன்..’ என்றேன். எம்.ஜி.ஆர். பதிலேதும் சொல்லவில்லை. வேறு வழியில்லாமல் நான் கிளம்பி வர வேண்டியதாகிவிட்டது.

அந்தச் சோகமும், துக்கமும் இவ்வளவு, அவ்வளவு அல்ல. ஆசை, ஆசையாகப் பார்த்துக் கட்டிய கட்டிடம். எதிர்கால திட்டங்கள் சாதிக்க நினைத்திருந்த காரியங்கள் எல்லாம் ஒரு தரம் மனக்கண்ணில் வந்து போனது.

விஷயம் மேலும் ரசாபாசமாகிவிடாமல் இருக்கும் பொருட்டு உடனடியாக சிவாஜி, மேஜர் நான் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துவிடுவதாக முடிவு செய்து, அப்படியே செய்துவிட்டோம்.

ஆனால் அடுத்தடுத்து வந்த நிர்வாகங்கள் இந்தக் கடனை அடைக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் போனதுதான் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாகிவிட்டது. வட்டிக்கு மேல் வட்டி ஏறிக் கொண்டே போக சுமார் 25 லட்சமாக இருந்த கடன் இன்று கிட்டத்தட்ட இரண்டு கோடியே முப்பது லட்சத்துக்கும் மேலாக வளர்ந்து பூதாகரமாக நிற்கிறது..”

– இவ்வாறு எழுதியிருக்கிறார் வி.கே.ராமசாமி.

இவர் எழுதியிருப்பதைப் பார்த்தால், எம்.ஜி.ஆர். கொஞ்சம் மனம் வைத்திருந்தால், இந்தக் கடன் பிரச்சினை அன்றைக்கே முடிவுக்கு வந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர். வாக்குக் கொடுத்தபடி அந்த நட்சத்திர கலை விழாவில் கிடைத்த வசூல் தொகையான 1 கோடியே 80 லட்சம் ரூபாயில் செலவு போக மீதமிருந்த பணத்தில் 30 லட்சம் ரூபாயையாவது நடிகர் சங்கத்திடம் கொடுத்திருந்தால், அன்றைக்கே அந்தக் கடன் அடைக்கப்பட்டிருக்கும்..!

இதை அவர் அன்றைக்கு செய்திருந்தால் அவர் வாழ்ந்த காலத்திலேயே இன்னுமொரு புகழும் அவருக்கே கிடைத்திருக்கும்.

குற்றம், குறையில்லாத மனிதர்கள் உலகத்தில் எங்குமே இல்லை. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் யாராவது ஒருவர் அவரைக் குறை சொல்லும் அளவுக்கு வாழ்க்கை சூழல் அமைந்துவிடும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இப்படி அமைந்திருக்கிறது..!

நன்றி : எனது கலைப்பயணம் 

ஆசிரியர் – நடிகர், கலைமாமணி வி.கே.ராமசாமி

539 பக்கங்கள் – 250 ரூபாய்

வெளியிட்டோர் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்

Our Score