“இந்தா பிடிங்க சாவியை..!” துணை இயக்குநர்களை வரவேற்கும் நடிகர் சூரி..!

“இந்தா பிடிங்க சாவியை..!” துணை இயக்குநர்களை வரவேற்கும் நடிகர் சூரி..!

நடிகர் சூரி.. இப்போதைக்கு மீடியம் பட்ஜெட் படங்களில் காமெடி கிங் இவர்தான்.. கருணாஸ். கஞ்சா கருப்புவின் காமெடிகளில் சரக்கு குறைந்ததால் ஏற்பட்ட இடைவெளியை சூரிதான் நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

காமெடியில் வரிசை கட்டி நின்றாலும், சந்தானத்துக்கு தான் போட்டியில்லை என்கிறார் சூரி.

"இது நம்ம ஆளு' படத்துல சந்தானம்கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். மனசுல போட்டியோ பொறாமையோ இருந்தா எப்புடி ரெண்டு பேரும் ஒண்ணா நடிக்க முடியும்? நான் ஒரு ஓட்டப் பந்தய வீரன். விசில் அடிச்சா ஓடிக்கிட்டே இருக்கணும். நான் போய் ரீச்சான உடனே, நான் இரண்டாவதுன்னு சொன்னாங்கன்னா ஓ.கே. சொல்லிட்டு வந்துடுவேன். ஆனா, அடுத்த முறை முதல் இடத்தைப் பிடிக்க இன்னும் கொஞ்சம் வேகமா ஓடுவேன். எனக்குப் போட்டினு யாரும் கிடையாது. என்னைய‌பொறுத்தவரை நான் முதல் ஆளா கோட்டை தொடணும்.." என்கிறார் சூரி.

"ஜி' படத்தில் தல அஜீத்கூட ஒரு சின்ன கேரக்டர் பண்ணினேன். அப்போ நான் டைமிங்கா பேசிய டயலாக்கைத் தட்டி கொடுத்துப் பாராட்டினார் அஜீத் சார். ‘சீக்கிரமே உங்களைப் பெரிய காமெடி நடிகனா பார்க்கணும்'னு அப்பையே ஆசிர்வாதமா சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இன்னிக்கு வளர்ந்து நிற்கிறேன். ஆனா, இதை இன்னும் அவர்கிட்ட நேர்ல போய் நின்னு சொல்ல முடியலை. நிற்க நேரமில்லாத அளவுக்கு நடிச்சாலும், ‘எப்பண்ணே எங்க தலயோட சேர்ந்து நடிப்பே’ன்னு கேட்குற என் சொந்தத் தம்பிங்க‌ ஆதிக்கும் சீனிக்கும் பதில் சொல்ல முடியலை. நானும் அல்டிமேட் ஸ்டாரோட ஆல்டைம் ஃபேன்தான். சீக்கிரமே அவரோட சேர்ந்து நடிக்கணும்.." என்ற ஆர்வத்துடன் இருக்கிறார் சூரி.

கொஞ்சம் காசு, பணம் சேர்த்தாச்சு. எல்லாருக்கும் வரும் தயாரிப்பாளர் ஆசை உங்களுக்கு வரலியான்னு கேட்டா தெளிவா பேசுறார் சூரி.

"கலாபக் காதலன்' படம் ஸ்டார்ட் பண்ண நேரத்துல சாலிகிராமத்துல அந்தப் படத் தயாரிப்பாளர்கள் ஆபிஸ் போட்டிருந்தாங்க. நான் அங்கே வாய்ப்பு கேட்கப் போனேன். அதே இடத்துலதான் இப்போ என்னோட ஆபீஸ் இருக்கு. வாய்ப்பு கேட்டு நின்ன இடத்தையே எனக்கு வாங்கிக் கொடுத்தது இந்த சினிமாதான். உதவி இயக்குநர்களுக்காக அந்த ஆபீஸ்ல ஒரு மினி தியேட்டரே வைச்சிருக்கேன். உதவி இயக்குநர்கள் ஏதாவது ஒரு படம் போட்டுப் பாக்கணும்னாலோ, யாரையாவது தனியா சந்திச்சு கதை விவாதம் பண்ணலாம்னாலோ அவங்க எப்போ வேணும்னாலும் என்னோட ஆபீஸுக்கு வரலாம். சினிமாதான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்ட யார்கிட்டயும் ஆபீஸோட சாவிக் கொத்தக் குடுத்துட்டு போற‌ ஆள் நானு. அதனால காலம் வரும்போது கண்டிப்பா படம் தயாரிப்பேன்..!" என்று உறுதியாகவேச் சொல்கிறார்..!

யாருப்பா அது..? ஸ்டோடி டிஸ்கஷனுக்கு இடம் ரெடியா இருக்கு.. வந்து யூஸ் பண்ணிக்குங்கப்பா..!

நன்றி : தமிழ் இந்து நாளிதழ்