வடசென்னையின் நல்லவனாக கார்த்தி நடிக்கும் ‘மெட்ராஸ்’

வடசென்னையின் நல்லவனாக கார்த்தி நடிக்கும் ‘மெட்ராஸ்’

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கும் சென்னை மக்களின் வாழ்வியல் பேசும் படம் ‘மெட்ராஸ்’..!

மதுரை மண்ணின் மைந்தனாக – முரட்டு போக்கிரியாக கார்த்தி நடித்த படம் ‘பருத்தி வீரன்.’ அந்தப் படத்தில் கார்த்தி ஏற்ற கதாப்பாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அதே கார்த்தி சென்னை மண்ணின் மைந்தனாக நடித்துள்ள படம் ‘மெட்ராஸ்.’ இதுவும் அவருக்கு ஒரு மைல் கல்லாக அமையப் போகிறது.

‘மெட்ராஸ்’ படம் பற்றி இயக்குநர் ரஞ்சித் பேசும்போது,  “உண்மையில் அசலான சென்னை என்பதே தற்போதைய வட சென்னைப் பகுதிதான். ஆனால் இந்த வடசென்னை என்பதை தமிழ் சினிமாக்கள் இதுவரை வன்முறை பகுதியாகவும், இருட்டுப் பிரதேசமாகவும் சித்தரித்து வந்துள்ளன.. இது தவறானது. இந்தத் தவறான பிரச்சாரத்தால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்தப் பகுதியில் வங்கிகளின் ஏடிஎம்கூட வைக்கப்படுவதில்லை. வடசென்னைப் பகுதியின் பெயரைச் சொன்னால், சென்னையின் காவல் நிலையங்களில் தனியான ‘கவனிப்பும்’ உண்டு. ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்பகுதி மக்கள் அப்பாவிகள்.

அப்படிப்பட்ட உண்மையான வட சென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்கிற படம்தான் இந்த ‘மெட்ராஸ்.’ அவர்களின் வாழ்க்கையை, கொண்டாட்டத்தை அரசியலைச் சொல்கிற இயல்பான பதிவாக இந்தப் படம் இருக்கும். வட சென்னை சமூகத்தின் பாசாங்கற்ற ரத்தமும் சதையுமான பதிவாகவும் இருக்கும்..” என்கிறார் ரஞ்சித்.

அவர் மேலும் கூறுகையில் “இது தனி நபர் சார்ந்த கதையோ, கதாநாயகனை உயர்த்திப் பிடிக்கும் கதையோ அல்ல. ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையின் பதிவு, அங்கு வாழும் ஒரு இளைஞனாக கார்த்தி வாழ்ந்து இருக்கிறார். எங்கும் அவர் தனித்து வெளிப்பட மாட்டார். மண்ணோடு… மக்களோடு… அந்தக் கலாச்சார சூழலோடு கலந்த ஒரு குணச்சித்திரமாகவே தெரிவார்…” என்கிறார்.

இந்தக் கதை பற்றி கருத்து கேட்கவே இதன் திரைக்கதை கார்த்தியிடம் போயுள்ளது. படித்து கதைக்குள் இறங்கிய கார்த்தி, தானே இதில் நடிக்க விரும்பி படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.  இதில் ஐ.டி. படித்த இளைஞராக கார்த்தி நடித்துள்ளார். சென்னையில் வளர்ந்த கார்த்திக்கு, சென்னை மொழி ஏற்கனவே அறிமுகமானதுதான். எனவே சென்னை தமிழைப் பேசி நடிக்கும்போது அவர் அதிகம் சிரமப்படவில்லை.

நாயகி கேத்தரின் தெரசா ஒரு தெலுங்கு நடிகை. அவருக்கு தமிழும்ஸ சென்னைத் தமிழும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. காளியாக கார்த்தி, கலையரசியாக கேத்தரின் என நாயகன், நாயகி தவிர மற்றவர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமில்லாத முகங்களே. படத்தின் இயல்பு கெடக் கூடாது என்பதற்காகவே பெரும்பாலும் புதியவர்கள் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் 99 சதவிகித படப்பிடிப்பு வடசென்னைப் பகுதியிலேயே நடந்துள்ளது. 70 நாட்கள் தொடர்ச்சியாக இதுவரை கேமரா நுழையாத பல பகுதிகளில் படப்பதிவு நடந்துள்ளது. அங்குள்ள நெருக்கமான, இறுக்கமான வீடுகளிலும் சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் கேமரா புகுந்து காட்சிகளைச் சிறைப்படுத்தி வந்துள்ளது.

பாசாங்கு சினிமாவின் நிறமோ, பளபளப்பு கூட்டும் தரமோ வந்துவிடாதபடி அசல் தன்மையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் முரளி ஜி. இவர் புனே திரைப்படக் கல்லூரி மாணவர், குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.

இசையமைத்துள்ளவர் சந்தோஷ் நாராயணன். மொத்தம் 5 பாடல்கள். கபிலன், கானா பாலா, கு.உமாதேவி எழுதியுள்ளனர். படத்தில் இடம் பெறும் ‘சாவு கானா’ பாடல் நிச்சயம் பேசப்படுமாம்.

கலை இயக்கம் – ராமலிங்கம்

நடனம் சதிஷ்

ஸ்டண்ட் – அன்பறிவு

படத்தொகுப்பு – ப்ரவீன்

ஒலி வடிவமைப்பு – ரூபன்

என அனைவருமே இயக்குநர் ரஞ்சித்தின் படைப்பிற்குப் பலம் சேர்க்கும் பரிவாரங்களாக இயங்கியுள்ளனர்.

படத்தின் கதையின் மேல் நம்பிக்கை வைத்து தன்னை முழுவதுமாக ஒப்படைத்து வடசென்னை வாலிபன் காளியாக வாழ்ந்துள்ள கார்த்தியின் அறப் பணியைப் பெரிதும் பாராட்டுகிறார் இயக்குநர் ரஞ்சித். படப்பிடிப்பில் வசதிகளை மறந்து 10-க்கு 10 அறையில்கூட புழுக்கம் பொறுத்து நடித்துக் கொடுத்தாராம் கார்த்தி.

வடசென்னை மக்களின் வாழ்வியல் பதிவான, இந்த ‘மெட்ராஸ்’ அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

ஒரு புதிய மண் வாசனையை அனுபவிக்கத் தயாராக இருங்கள் ரசிகர்களே..!

Our Score