‘சூரரைப் போற்று’ படத்திற்கு 7 சைமா திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன

‘சூரரைப் போற்று’ படத்திற்கு 7 சைமா திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன

நடிகர் சூர்யா நடித்திருந்த ‘சூரரைப் போற்று’ படத்திற்கு 2020-ம் ஆண்டிற்கான சைமா திரைப்பட விருதுகளில் 7 விருதுகள் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையும் இந்த படத்திற்கு கிடைத்தது.

மேலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்கார் போட்டியில் களம் இறங்கியது இத்திரைப்படம்.

அண்மையில் மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த படத்துக்கான விருதை ‘சூரரைப் போற்று’ படமும் பெற்றது.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா திரைப்பட விழாவில், 2020-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த இயக்குநர் விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது தயாரிப்பாளர் ராஜசேகரன் பாண்டியனுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்க்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது நிகேத் பொம்மிரெட்டிக்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் என இந்த சூரரைப் போற்று’ படத்திற்கு மட்டும் 7 விருதுகள் கிடைத்தன.

ஏழு விருதுகளை அள்ளியுள்ள ‘சூரரைப் போற்று’ படக் குழுவினருக்கு திரையுலகத்தினர் பலரும் தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சைமா விருதுகளுடன் படக் குழுவினர் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள 2-டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
Our Score