அனபெல் சேதுபதி – சினிமா விமர்சனம்

அனபெல் சேதுபதி – சினிமா விமர்சனம்

PASSION STUDIOS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம், G.ஜெயராம் தயாரிப்பில், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த ‘அனபெல் சேதுபதி’ படம் உருவாகியிருக்கிறது.  

இநத்ப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, யோகி பாபு, மதுமிதா, ராஜ சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உத்ரா, யுவனேஷ் மற்றும் அஷ்வின் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – தீபக் சுந்தர்ராஜன், ஒளிப்பதிவு – கௌதம் ஜார்ஜ், படத் தொகுப்பு – பிரதீப் E.ராகவ், இசை – கிருஷ்ணா கிஷோர், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார்.N, ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங், நடன இயக்கம் – தினேஷ், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, ஒலிக்கலவை – N.உதய்குமார், ஒலி அமைப்பு – Sync Cinemas, VFX Supervisor – R மணிகண்டன், புகைப்படங்கள் – சந்தோஷ், விளம்பர வடிவமைப்பு – Tuney John 24 AM,  புரொடெக்சன் எக்ஸ்கியூட்டிவ் – சக்திவேல், இணை தயாரிப்பு – A.குமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா  D’One.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரான தீபக் சுந்தர்ராஜன், 1980-1990-களில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஆர்.சுந்தர்ராஜனின் மகனாவார். செப்டம்பர் 17 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படம் ஹாரர் டைப் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம். எல்லா படங்களின் கதைக்கும் ஏதாவது ஒரு இன்ஸ்பிரேஷன் கண்டிப்பாக இருக்கும். அது இல்லாமல் யாரும் கதை எழுத முடியாது. இதுவும் பல கதைகளின் இன்ஸ்பிரேஷன் உள்ள கதையம்சத்தில்தான் உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு துவக்கத்திலேயே அனபெல் சுப்ரமணியம்’, ‘அனபெல் சேதுபதி’ என்று இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். பின்பு படக் குழுவினரிடம் கலந்து பேசி ‘அனபெல் சேதுபதி’ பெயரையே தேர்வு செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் எழுதியிருந்த கதைக்கு கோட்டை, கொத்தளத்துடன் கூடிய பெரிய அரண்மனை தேவையாய் இருந்தது. முதலில் செட் போட்டு எடுக்கலாம் என்று யோசித்தவர்கள், ஜெய்ப்பூர் கோட்டையைப் பார்த்தவுடன் மனம் மாறி அங்கேயே மொத்தப் படத்தையும் முடித்திருக்கிறார்கள்.

பேய்களிடமிருந்து தப்பித்து ஓட முயல்பவர்களைப் பற்றிய கதையைத்தான் நீங்கள் இதுவரையிலும் பார்த்திருப்பீர்கள். அதே பேய்களே ஒரு வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் கதையை இந்தப் படத்தில்தான் பார்க்க முடியும்.

ஒரு பெரிய அரண்மனை. முந்தைய தலைமுறையில் அந்த அரண்மனையில் பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த மரணத்தின் மூலம் ஆவியானவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேற முயல்கிறார்கள். முடியவில்லை.

கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மாவைக் கொண்டவர்கள் என்றாவது ஒரு நாள் இந்த அரண்மனைக்கு வந்தால்தான் இவர்களால் அந்த அரண்மனையைவிட்டு வெளியேற முடியும் என்ற நிலைமை.

அதில் ஒரு ஆன்மா இப்போது டாப்ஸியிடம் இருக்கிறது. டாப்ஸியோ தனது குடும்பத்துடன் சேர்ந்து திருட்டு தொழிலைச் செய்து வருகிறார். இந்தத் திருட்டுக் குடும்பத்தினருக்கு விரோதியான இன்னொரு திருட்டுக் கும்பல் இவர்களை போலீஸிடம் போட்டுக் கொடுக்கிறது.

அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் அந்த அரண்மனையின் நேரடி வாரிசு. அந்தக் கோட்டைக்குள் பேய் நடமாட்டம் இருப்பதை அறிந்துதான் யாரும் அதை வாங்க வரவில்லை என்ற வருத்தத்தில் இருப்பவர்.. இந்தத் திருட்டுக் கும்பலை வைத்து அந்த அரண்மனையில் பேய் நடமாட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை சோதித்துப் பார்க்க நினைத்து இவர்களை அந்த அரண்மனைக்கு அனுப்புகிறார்.

டாப்ஸி, அவரது அம்மாவான ராதிகா, அப்பாவான ராஜேந்திர பிரசாத், அண்ணன் இந்த நால்வரும் அந்த அரண்மனைக்குள் வர.. டாப்ஸி மட்டுமே நம்மைக் காப்பாற்ற வந்த ஆன்மா உள்ளவர் என்பதை உணர்கிறார் உள்ளேயிருக்கும் இன்னொரு பேயான சண்முகம் என்னும் யோகிபாபு.

டாப்ஸி மூலமாக தாங்கள் தப்பிக்க நினைக்கிறார்கள் பேயானவர்கள்.. வீட்டுக்குள் பேய் இருப்பதை உணர்ந்த ராதிகா அண்ட் கோ.. அங்கேயிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். இதில் யார், யாரைக் காப்பாற்றினார்கள் என்பதுதான் படத்தின் பிந்தைய கதை.

வித்தியாசமான கதைதான். வித்தியாசமான திரைக்கதைதான். சிறந்த நடிப்புதான். ஆனால் சிரிப்பே வரவில்லை. காமெடி படம் என்று சொல்லிவிட்டு ஒரு இடத்தில்கூட சிரிப்பு வராதது யாருடைய தவறு.. இயக்குநருக்கு காமெடி கை கூடவில்லை என்பதை அவர் இதிலிருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும்.

ராதிகாவின் அப்பாவித்தனமான, ஏமாற்றுத்தனமான நடிப்பு ஓகே. ராஜேந்திர பிரசாத் பரவாயில்லை.. டாப்ஸி உடலைக் காட்டாமல் நடிப்பிலேயே கதையை நகர்த்த உதவியிருக்கிறார். விஜய் சேதுபதி சாதாரணமாக வந்து பேசிவிட்டு சென்றிருக்கிறார்.

மற்றவர்கள் அனைவருமே அவர்களது கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் நமக்குத்தான் சிரிப்பு வந்தபாடில்லை.

படத்தின் ஒளிப்பதிவு கச்சிதம். பிரம்மாண்டமான அரண்மனை அதே கோணத்திலும், கோலத்திலும் காட்டியிருக்கிறார்கள். ராஜா காலத்து உடைகளும், அணிகலன்களும் கண்ணைக் கவர்கின்றன. பாடல் காட்சிகளில் நடனம் மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாடல்கள்தான் ரசிக்கும்படி இல்லை.

கச்சிதமான படத் தொகுப்பினால் குழப்பமில்லாத திரைக்கதையாக அமைந்திருக்கிறது. யார் பேய்.. யார் நிஜம் என்பதை படத்தின் துவக்கத்தில் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். ஒரு சிறிய ரியாக்சனைக்கூட விடாமல் பதிவு செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

ஆனால்…

ராதிகாவின் குடும்பம் மொத்தமும் சிரிப்பு திருடர்களாக இருப்பதைப் பார்த்தால் நமக்கே சிரிப்பாக இருக்கிறது. நகைச்சுவை வசனங்களை வைத்திருந்தும், நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தும் இயக்கம் சரியில்லாததால் சிரிப்பு வராதது.. விஜய் சேதுபதியின் ரீ எண்ட்ரியில் போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டுவது.. நடக்குற காரியமா..? தொல் பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி போலீஸை மிரட்ட முடியுமா..? என்ன லாஜிக்கய்யா அது..? இதெல்லாம் சேர்ந்து படத்திற்கு மிகப் பெரிய மைனஸைக் கொடுத்திருக்கிறது.

ஒட்டு மொத்தமாய் ஒரு அழகான படத்தை பிரேம் போடத் தெரியாமல் கிழித்துவிட்டதைப் போல இருக்கிறது இந்தப் படத்தின் கதி..!

Rating : 3.5 / 5

 
Our Score