IMDB வெளியிட்ட ரேட்டிங்கில் 1000 படங்களில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு 9.1 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. ‘ஷஷாங் ரிடம்ப்ஷன்’ திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ‘காட்பாதர்’ திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ படம் 34-வது இடத்திலும், 58-வது இடத்தில் விஜய் சேதுபதின் ’விக்ரம் வேதா’வும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
‘சூரரைப் போற்று’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இப்படத்தை சூர்யாவின் 2-டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் கொண்டாடப்பட்டது.
சினிமாத் துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு துறையினர், தொழில் துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள்.
ஆஸ்கார் பட்டியலிலும் ’சூரரைப் போற்று’ இடம் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது நினைவிருக்கலாம்.