நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைத்து நடைபெற்று வந்தது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடத்தில் வாரம் ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி இந்த வாரம் நடந்த பரிசோதனையில் ஊழியர்கள் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே, கொரோனா ஊரடங்கு முடியும் வரை மே 31-ம் தேதிவரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருந்தார்.
தற்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி தொடர்ந்து பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுதர்சன், வட்டாட்சியர் சங்கர், ஆர்.டி.ஓ. பிரித்தீ பார்கவி ஆகியோர் படப்பிடிப்பு அரங்கிற்கு சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.
தடையை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டதை ஊர்ஜிதப்படுத்திய பின்பு படப்பிடிப்பு நடத்த அனுமதித்த அரங்கு நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதன் பிறகு மாவட்ட கலெக்டருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் மலையாள பிக்பாஸ் அரங்கத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைக்க முடிவு செய்தனர்.
இதனால் பிக்பாஸ் அரங்கத்திற்குள்ளே இருந்த 7 நடிகர், நடிகைகள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அவர்களிடத்திலேயே தெரிவிக்கப்பட்டது.
அந்த நடிகர், நடிகைகள் தங்களின் உடமைகளை எடுக்க சிறிது நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உடை, முகக் கவசம், கையுறை மற்றும் முகத்தில் அணியும் ஷீல்டு ஆகியவை வழங்கப்பட்டன.
அவற்றை அணிந்து கொண்ட நடிகர், நடிகைகள் மிகுந்த பாதுகாப்புடன் அரங்கினுள் இருந்து வெளியேற்றப்பட்டனர். அனைவரும் அங்கிருந்து கார்களில் புறப்பட்டுச் சென்றனர்.
மேலும் அரங்கின் உள்ளே படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து படப்பிடிப்பு அரங்கின் 3 நுழைவு வாயில்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
மேலும் ஈவிபி பிலிம் சிட்டி படப்பிடிப்பு தளம் முழுமைக்கும் சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.