ரஜினி வீட்டு முன்பு மறியல் போராட்டம் – தயாரிப்பாளர்கள் முடிவு..!

ரஜினி வீட்டு முன்பு மறியல் போராட்டம் – தயாரிப்பாளர்கள் முடிவு..!

தமிழ்த் திரையுலகில் இன்றைக்கு ஒரு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்.

இன்றைய தினம் இவருடைய தலைமையில் சில தயாரிப்பாளர்கள் தற்போதைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்து ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், டி.பி.கஜேந்திரன், ரூபன் கிருஷ்ணகாந்த், மணிமாறன். பி.டி.செல்வகுமார், ராமதுரை, அருள் சிவா, ரகு, செளந்தர் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களுடன் இளம் தயாரிப்பாளர்களும் சேர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களை காப்பாற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எந்தவித முயற்சியையையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

pts-producers-protest-2

pts-producers-protest-1

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் பேசும்போது, “தற்போதைய சங்கத் தலைவரான தாணு சுயநலத்துடன் செயல்படுவதாகவும் சங்கத்தின் நலனுக்காக அவர் எதையும் செய்யவில்லை” என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், “தயாரிப்பாளர்களின் துன்பம், அவர்கள் படும் இன்னல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றால் ‘கபாலி’ படம் வெளிவருவதற்கு முன்பு ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினால்தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும், சங்கமும் இறங்கி வந்து பேசுவார்கள். நமக்கு ஒரு முடிவு கிடைக்கும்..” என்று யோசனையும் தெரிவித்தார் டி.பி.கஜேந்திரன்.

இதனை இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஆமோதிக்க.. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக நாளைய தினம் மேலும் கலந்தாலோசிக்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள். 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் டி.ராஜேந்தரும் கலந்து கொள்வதாக இருந்ததாம். அவர் இப்போதுவரையிலும் வரவில்லை என்கிறார்கள்.

என்னதான் போராட்டம் என்றாலும் இதில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் எப்படி தலையி்ட்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது..

‘புலி’ படத்தின் தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் இளைய தளபதி விஜய்யின் ஆஸ்தான பி.ஆர்.ஓ. என்கிற வகையில் அந்தக் குடும்பத்தினருக்கு மிக நெருக்கமானவர். இப்போதும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அடிபணிந்து நடிப்பவர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போதைய தலைவரான தாணுவிற்கு மிக நெருக்கமானவர். தாணுவை இந்தப் பதவிக்கு கொண்டு வந்ததில் மிக முக்கிய பங்கு எஸ்.ஏ.சி.க்கு உண்டு. அப்படியிருக்க எஸ்.ஏ.சி.யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார் தாணுவை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் என்ன என்பது பற்றி தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..!

Our Score