‘கத்தி’ படம் லைகா மொபைல் நிறுவனம் சம்பந்தப்பட்டும், ‘புலிப்பார்வை’ படம் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் முள்ளிவாய்க்கால் போர் பற்றிய பிரச்சினையினாலும் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாக ஈழ ஆதரவு இயக்கங்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
‘கத்தி’ படத்திற்கும், ‘புலிப்பார்வை’ படத்திற்கும் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளும் நாம் தமிழர் இயக்க அமைப்பாளர் சீமானை அனைத்து இயக்கங்களும் ஓரங்கிவிட்டன. அதோடு மாணவர் அமைப்புகளும் சீமானை குறி வைத்து தினம்தோறும் கேள்விகளை வீசிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று சர்ச்சைக்குரிய புலிப் பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்று கோரி தமிழ் ஈழ ஆதரவு இயக்கங்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் இன்று நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, கொங்கு இளைஞர் பேரவையின் எம்.எல்.ஏ தனியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, முன்னாள் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன், கூடங்குளம் அணு உலை இயக்க எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன், தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் பெ. மணியரசன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் தபசி குமரன், புதுச்சேரி மீனவர் வேங்கைகள் அமைப்பின் மங்கையர்செல்வன், தமிழ்ப் புலிகள் திருவள்ளுவன், திராவிட முன்னேற்ற மக்கள் கழகத்தின் ஞானசேகரன், மே 17 இயக்கத்தின் திருமுருகன், இளந்தமிழகம் இயக்கத்தின் செந்தில்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொழிலன் என மொத்தம் 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் “கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது…” என்று முதல் கட்டமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையும் மீறி ‘கத்தி’, ‘புலிப்பார்வை’ திரைப்படத்தை வெளியிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசித்து போராட்ட அறிவிப்பை வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.