தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிக அதிகப் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க வேண்டியது.. கொரோனா பாதிப்பின் காரணமாக தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் துவங்கியுள்ளது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காகத்தான் கடந்த 6 மாத காலமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த இந்திய அழகியான ஐஸ்வர்யா ராய் ஹைதராபாத் வந்துள்ளார். அவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான ‘நந்தினி’ பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘பெரிய பழுவேட்டரையராக’ நடிகர் சரத்குமார் நடிக்கிறார்.
இந்தப் படத்திற்காக கடந்த வாரம் சென்னையில் தொடர்ந்து 6 நாட்கள் ஒரு நடனக் காட்சிக்கான ரிகர்சல் நடந்துள்ளது. பிரபல நடன இயக்குநர் பிருந்தாதான் இந்த நடனக் காட்சியை வடிவமைத்துள்ளார். இந்த ரிகர்சலில் திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பல நட்சத்திரங்களும் நடனப் பயிற்சியெடுத்துள்ளனர். இவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்.
அதோடு, கூடவே இன்னொரு மாற்றமும் ‘பொன்னியின் செல்வனில்’ நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தப் படத்தில் இன்னொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ‘நிழல்கள்’ ரவி நடிப்பதாக இருந்தது. இதற்காக அவர் முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட பல மாதங்களாக தாடியையும் வளர்த்து வந்தார். இந்தச் சூழலில் இப்போது திடீரென்று அவர் மாற்றப்பட்டு பார்த்திபன் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ‘நிழல்கள் ரவி’ வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்கிறார்கள் ‘பொன்னியின் செல்வன்’ படக் குழுவினர்.









