full screen background image

நடிகை சிநேகாவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை..!

நடிகை சிநேகாவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை..!

பிரசாத் கலர் லேப் இன்றைக்குக் களை கட்டியிருந்தது. இணையவுலகில் நக்கல், நையாண்டி, லொல்லு, ஜொள்ளு என்று எல்லாவற்றுக்கும் ராயல்டீ வாங்கி வைத்திருக்கும் அண்ணன் முத்துராமலிங்கனின் சிநேகாவின் காதலர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா..! அண்ணனின் சுற்றமும், நட்புமாக சேர்ந்து கொள்ள வழக்கம்போல அமர்வதற்கே இடமில்லை..!

படத்தின் டிரெயிலரும் மூன்று பாடல்களும் திரையிட்டுக் காட்டப்பட்டன. ‘குருவி குருவி’ பாடலும் அதன் படமாக்கலும் மிக வித்தியாசமாக இருந்தது. மதுரை நகரை மையமாக வைத்து ஒரு பாடல்.. மதுரையின் அருமை, பெருமைகளை மிக அதிகமான ஷாட்டுகளில் காட்டியிருக்கிறார் அண்ணன்.. இன்னொரு பாடலான ‘சிநேகா’ இயக்குநருக்கும் கவிதைக்குமான தொடர்பை சுட்டிக் காட்டியது..!

இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் சீமான், கவிஞர் அறிவுமதி, தயாரிப்பாளர்கள் கேயார், டி.சிவா, அதர்மம் படத்தின் இயக்குநர் ரமேஷ் கிருஷ்ணன், ஜாக்குவார் தங்கம் ஆகியோரின் நல்லாசியுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.. சீமானின் பரபர பேச்சுக்கும், டி.சிவாவின் தயாரி்பபாளர் சங்கம் பற்றிய எதிர்பார்ப்பு பேச்சுக்கும்.. ஜாக்குவார் தங்கத்தின் உற்சாகமான வரவேற்புக்கும், கேயாரின் உண்மை பேச்சுக்கும்.. கவிஞர் அறிவுமதியின் தெளிவான நீரோடை போன்ற உரைக்கும் கூட்டம் மதிமயங்கிப் போனது..

மதியம் கறிச்சோறு, மீன் குழம்பு, சிக்கன் 65 போன்ற வஸ்துக்களுடன் வயிற்றை நிரப்பிக் கொண்ட திருப்தியுடன் மீண்டும் பிரஸ் மீட்டுக்கு ஆஜரானது மீடியா..

தயாரிப்பாளரான தமிழன் டிவியின் உரிமையாளர் கா.கலைக்கோட்டுதயம் மிக தைரியமாகவே பேசினார். “நான் ஏற்கெனவே சில ஆங்கிலப் படங்களை வாங்கி டப்பிங் செஞ்சு ரிலீஸ் செஞ்சிருக்கேன். அந்த அனுபவம் எனக்கிருக்கு. அதுனால நிச்சயமா இந்தப் படத்தை தைரியமா நானே ரிலீஸ் செய்வேன். லாபம் வந்தா சந்தோஷமா அடுத்தடுத்து படங்களை செய்வேன். இல்லைன்னா இதோட போதும்னு நிறுத்திருவேன்..” என்றார் உறுதியாக.. 

“சத்ரியன்’ பத்திரிகையில் முத்தண்ணன் ஆசிரியராக இருந்தபோது அதில் நான் தலைமை நிருபராக வேலை செய்தேன..” என்று வெளிப்படையாகவே பேசினார் தயாரிப்பாளர். அந்தக் காலக்கட்டத்தில் ஒரே அறையில்தான் தங்கியிருந்தார்களாம். அந்த உரிமையின் காரணமாக முத்தண்ணன் பத்தாயிரம் ரூபாய் கடனாக கேட்கப் போய், திடீர் அதிர்ஷ்டமாக படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டதாம். அதிர்ஷ்டக்காரர் அண்ணன்….!

மிகக் குறைந்த பட்ஜெட்டுக்குள்.. சொன்னது போலவே படத்தை எடுத்துக் கொடு்ததிருக்கிறார் இயக்குநர். பாட்டு ரிக்கார்டிங் செய்யும்போதே டிபனுக்கு காசு இல்லாமல் பட்டாணி கடலையை வாங்கிக் கொடுத்து சமாளித்தாராம்.. இசையமைப்பாளர் இந்த ரகசியத்தை உடைத்தெறிந்தார்..

5 பாடல்களையும் எழுதணும்னு அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட கவிஞர் நெல்லை பாரதி.. கடைசியில் ஒரு பாடலைத்தான் எழுதியிருக்கிறார். மிச்சம் எழுத கூப்பிடும்போதெல்லாம் பாட்டிலும், கையுமாகவே இருந்ததால் பாட்டு எழுதும் வாய்ப்பு பறிபோய்விட்டதாம்.. “உடல் உபத்திரவமும், உப திரவமும் சேர்ந்து தன்னை பாட்டிலில் கவனத்தில் கொள்ள வைத்து.. பாட்டில் கோட்டைவிடச் செய்துவிட்டது..” என்று தமிழாலேயே சோகத்தைச் சொன்னார் கவிஞர். 

எப்போதும் நடனமாடிக் கொண்டே பவனி வரும் நெல்லை பாரதி.. இன்றைக்கு மட்டும் ஸ்டெடியாக வந்திருந்தார். இதுபோல் என்றைக்குமே இருந்தால் எம் நெஞ்சங்கள் குளிர்ந்திருக்கும்..!

பொதுவாக துணை இயக்குநர்களை பற்றி இயக்குநர்தான் பாராட்டிப் பேசுவார். இங்கே ஹீரோயின் துணை, இணை, உதவி இயக்குநர்களை பாராட்டித் தள்ளி அவர்களால்தான் தனக்கு வேலை சுலபமாக இருந்தது என்றார்.. 

இயக்குநருக்கு மாற்றாக ஹீரோயினும், ஹீரோக்களுமே அனைத்தையும் பேசி முடித்துவிட்டதால், எதுவும் பேச மறுத்த இயக்குநர். “ஏதாச்சும் கேள்வி கேளுங்க.. பதில் சொல்றேன்…” என்றார். “நடிகை சிநேகாவுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்..?” என்று கேட்டதற்கு “ஒரு சம்பந்தமும் இல்லை.. இது வேற.. அது வேற.. பேரு மட்டும்தான் சிநேகா..” என்றார். இயக்குநர் முத்தண்ணன் நடிகை சிநேகாவுக்கு சில காலம் மேனேஜராக இருந்திருக்கிறார் என்பதால் இந்தக் கேள்வி தவிர்க்க முடியாதது.. ஆனால் இந்தப் படத்தின் இசை விழாவுக்கு அழைக்க சிநேகாவை பல முறை தொலைபேசியில் அழைத்தும் அவர் போனை எடுக்கலையாம்.. குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் வரலையாம்..! வருத்தப்படுகிறார் முத்தண்ணன்..! சரி விடுண்ணே.. பழசையெல்லாம் திரும்பிப் பார்க்குற நிலைமைலயா இருக்காங்க நம்மூர் நடிகைங்க..!!!

இரண்டே இரண்டு பத்திரிகையாளர்கள் தங்களது சொந்தக் காசில் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு ச்சும்மா பார்ப்பதற்காக வந்ததால் அவர்களையே நடிக்க வைத்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சம்பளத்தை மிச்சப்படுத்தியதாக சொன்னார் இயக்குநர். இந்தப் படம் நல்லா ஓடி ஜெயிச்சுட்டா அடுத்தப் படத்துல இன்னும் நிறைய பத்திரிகையாளர்களை அறிமுகப்படுத்துவதாக உத்தரவாதம் அளித்தார்.

அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தினால் வாழ்க்கை கிடைக்கவிருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களின் தற்போதைய வேண்டுகோளும், எதிர்பார்ப்பும் இதுதான்.. இந்தப் படம் நிச்சயமா ஜெயிச்சிரணும் சாமி..! அடுத்தப் படத்துல எப்படியாச்சும் நம்ம மூஞ்சியை ஸ்கிரீன்ல பார்த்தே தீரணும்..! 

இதுக்கு முத்தண்ணன்தான் அருள் பாலிக்கணும்..!

Our Score