‘தற்போது திரைப்படம் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் பட ரிலீஸின்போது தெருக்கோடியில்தான் நிற்கிறார்கள்’ என்ற புலம்பலை, அனைத்து திரையுலக மேடைகளிலும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஊழல் என்கிற அநியாயம் சினிமாவிலும் வியாபித்திருக்கிறது. இந்தியாவில்தான் லஞ்சமும், ஊழலும் சட்டப்பூர்வமானதாக இருக்கிறதே..! அதனால் சினிமாவிலும் அது ஊடுறுவி இருப்பதில் ஆச்சரியமில்லைதான்.
ஆனால் இன்றைக்கு வெளிவந்திருக்கும் ஒரு ஊழல் கொஞ்சம் வித்தியாசமானது. அதே சமயம் ஆச்சரியமானதும்கூட. இதைச் செய்திருப்பவர் ஒரு பெண்மணி என்பது இன்னொரு ஆச்சரியம்.
அலமேலு என்பவர் தமிழ்த் திரையுலக விளம்பர உலகம் மட்டுமன்றி மீடியாக்கள் உலகமும், விளம்பர வட்டாரமும் நன்கு அறிந்த முகம். விளம்பரத் துறையில் மிக நீண்ட வருட கால அனுபவம் கொண்ட அலமேலு, சென்னை தி.நகரில் Sky Commercial என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த விளம்பர நிறுவனத்தின் மூலமாக புதிதாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படங்களின் விளம்பர வேலைகளைச் செய்து கொடுக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான டிவி விளம்பரம், ரேடியோ விளம்பரம், தனியார் எஃப்.எம். விளம்பரம் மற்றும் டிஜிட்டல் வகை விளம்பரங்கள் அனைத்தையும் தனது நிறுவனத்தின் மூலம் செய்து தருவதாகச் சொல்லி ஒப்பந்தம் செய்து கொள்வார்.
பணிகளைச் செய்து முடித்துவிட்டு அதற்கான பில்களை சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்வார். கூடுதலாக இதற்கான சம்பளப் பணமாக தனது நிறுவனத்துக்கென்று தனியாகவும் ஒரு தொகையைப் பெற்றுக் கொள்வார். இதுதான் வாடிக்கையாக இவரது தொழில்.
இதில்தான் இவர் நிறைய தில்லுமுல்லுகள் செய்து பல லட்சம் ரூபாயை கையாடல் செய்திருப்பதாக தமிழ்ச் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறவனமான RS Infotainment நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
இந்த RS Infotainment நிறுவனம் தயாரிப்பாளர் எல்ரேட் குமாரால் 2008-ல் துவங்கப்பட்டது. தனது முதல் படமாக ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை இந்த நிறுவனம் தயாரித்தது. பின்பு ‘நடுநசி நாய்கள்’, ‘கோ’, ‘வெப்பம்’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘யாமிருக்க பயமே’, ‘யான்’, ‘கோ-2’, ‘கவலை வேண்டாம்’, ‘வீரா’ ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறது.
2012-ம் ஆண்டு தயாரித்த ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் விளம்பரத்தில்தான் திருமதி அலமேலு, போலி பில்களை கொடுத்து தங்களிடமிருந்து லட்சணக்கணக்கான ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றியிருக்கிறார் என்று புகார் தெரிவித்துள்ளது அந்த பட நிறுவனம்.
‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் அனைத்து வகையிலான டிஜிட்டல் விளம்பரத்திற்காக ஸ்கை கமர்ஷியல் நிறுவனத்திற்கு மொத்தமாக 1 கோடியே 76 லட்சத்து 31 ஆயிரத்து 283 ரூபாயை விளம்பரக் கட்டணமாக ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தந்திருக்கிறது.
ஆனால் படம் வெளியான நேரங்களில் டிவிக்களிலும், டிஜிட்டல் பிரிவுகளிலும் தங்களது படத்தின் விளம்பரம் அதிகமாக இல்லாததை பார்த்து சந்தேகப்பட்ட தயாரிப்பு நிறுவனம், சம்பந்தப்பட்ட டிவி சேனல்களிடம் விசாரித்தபோதுதான் திருமதி.அலமேலு தங்களிடம் கொட்டேஷனில் குறிப்பிட்டிருந்த நேரத்தைவிடவும், மிகக் குறைவான நேரத்திற்கே டிவி சேனல்களுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனத்தார் சம்பந்தப்பட்ட டிவி சேனல்களிடம் சென்று அவர்களிடத்தில் இருந்த விளம்பர ஒப்பந்தங்களை வாங்கிப் பார்த்தபோது, ஸ்கை கமர்ஷியல் நிறுவனம் தங்களிடம் கொடுத்திருந்த பில்களில் இருந்த நேரத்தைவிடவும், தொகையைவிடவும் குறைவான நேரம் மற்றும் தொகையிலேயே திருமதி.அலமேலு டிவி சேனல்களில் விளம்பரம் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இப்படி தங்களிடமிருக்கும் ஸ்கை கமர்ஷியல் நிறுவனத்தின் பில்களையும், உண்மையான பில்களையும் சோதித்துப் பார்த்ததில் 28 லட்சத்து 77 ஆயிரத்து 596 ரூபாய்க்கு போலியான பில்கள் மூலம் திருமதி அலமேலு தங்களிடமிருந்து பணம் வசூலித்திருப்பது அந்த நிறுவனத்திற்கு தெரிய வந்திருக்கிறது.
தற்போது மேலும் சில டிவி சேனல்களில் இருந்து உண்மையான பில்களை பெறும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இதனால் இந்தத் தொகை மேலும் உயரும் என்று அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இது குறித்து திருமதி அலமேலுவிடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் கேட்டபோது சரியாகப் பதில் சொல்லாமல் மேலும் இது பற்றிப் பேசினால் பெண் என்கிற அடையாளத்தை வைத்து அவர்கள் மீது புகார் கொடுப்பேன் என்று மிரட்டினாராம்..!
இதையொட்டி ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் மேனேஜரான ஜி.மகேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் மீது விசாரித்த காவல்துறை அதிகாரிகள், புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்து கடந்த 6-ம் தேதியன்று திருமதி.அலமேலு மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.
இது குறித்து விளக்கம் கேட்பதற்காக திருமதி.அலமேலுவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் கிடைக்கவே இல்லை.
ஒரு பக்கம் அளவுக்கதிகமான ஊதியத்தை நடிகர்களுக்குக் கொடுத்துவிட்டு கடைசியில் படத்தின் ரிலீஸின்போது போஸ்டர் அடிக்கக்கூட காசில்லாமல் தவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதோ.. சினிமாவைச் சுரண்டும் இன்னொரு முகமாக இந்த விளம்பரத் துறை உருவெடுத்திருக்கிறது.
இதனை முன்கூட்டியே அறிந்து தடுத்து, தயாரிப்பாளர்களே நேரடியாக விளம்பரம் செய்யும் முறையைத் தயார் செய்தால் இது போன்று அவர்களுடைய பணம் கொள்ளையடிக்கப்படாமல் தடுக்கலாம்..!
தயாரிப்பாளர் சங்கம் புதிதாக வரக் கூடிய தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களிடத்தில் இது குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பெரிய அளவுக்கான பண இழப்பை ஒவ்வொரு தயாரிப்பாளராலும் தவிர்க்க முடியும்..!