கோடம்பாக்கத்தில் அதிசயம்.. முன்னணி தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து பட விநியோகம்..!

கோடம்பாக்கத்தில் அதிசயம்.. முன்னணி தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து பட விநியோகம்..!

தமிழ் சினிமாவில் இப்போது தயாரிப்பாளர்களைவிடவும் விநி்யோகம் செய்யும் அதிபர்கள்தான் முக்கியத்துவம் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

தங்களுடைய தயாரிப்பு படங்களைத் தவிர, மற்றவர்கள் தயாரிக்கும் படங்களையும் தங்களுடையே பேனரில் வாங்கி, வெளியிட்டு கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் இதற்காக அவர்களுக்குள்ளேயே போட்டிகள் வந்துவிட.. சாதாரண சின்ன படத்திற்கே சில கோடிகளை கொட்டிக் கொடுக்க வேண்டியிருக்கிறது..

இதையெல்லாம் தவிர்த்து கூட்டணி முயற்சியோடு குறைவான செலவில் படத்தை வாங்கி கூட்டு முயற்சியில் வெளியிட்டு, கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக் கொள்ளலாம். இதனால் வெளியாட்களுக்கு படமும் போகாது.. நமக்கும் தொடர்ந்து படங்களும் கிடைக்கும், பண வரவும் இருக்கும் என்று சிந்தித்திருக்கிறார்கள் சில தயாரிப்புப் புலிகள். இந்தச் சிந்திப்பு செயலாகிவிட இப்போது ஒன்றிணைந்துவிட்டார்களாம்..

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ சி.வி.குமார், ‘ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்’ எல்ரெட் குமார், ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சஷிகாந்த், ‘அபி அன்ட் அபி’ அபினேஷ் இளங்கோவன், ‘பிரின்ஸ் பிக்சர்’ லக்ஷ்மன் குமார் ஆகியோர் இணைந்து ‘ட்ரீம் ஃபேக்டரி’ என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்.

இந்நிறுவனத்தின் மூலம் புதிய தமிழ்த் திரைப்படங்களை வாங்கி, விநியோகம் செய்து, அதற்கான மார்க்கெட்டிங் வேலைகளையும் செய்ய இருக்கிறார்களாம்.

முதல் கட்டமாக இவர்களுடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் ‘சரபம்’, ‘மெட்ராஸ்’, ‘யான்’, ‘காவியத் தலைவன்’, ‘லூசியா’ போன்ற படங்களை ‘ட்ரீம் ஃபேக்டரி’யின் மூலமாக வெளியிடப் போகிறார்களாம்..

இதனால் என்ன ஆகும் என்கிறீர்களா..?

‘சரபம்’ மற்றும் ‘லூசியா’ திரைப்படங்கள் சி.வி.குமாரின் சொந்தத் தயாரிப்பு. ‘மெட்ராஸ்’ ஸ்டூடியோ கிரீனின் சொந்தப் படம். ‘யான்’ எல்ரெட் குமாரின் சொந்தப் படம். ‘காவியத்தலைவன்’ ஒய் நாட் ஸ்டூடியோஸின் சொந்தப் படம்.

ஆக.. இவர்களே கை கோர்த்துக் கொண்டதால், இந்தப் படங்கள் ரிலீஸாகும் சமயத்தில் இவர்களுடைய தனிப்பட்ட வேறு சொந்தத் தயாரிப்புப் படங்கள் ரிலீஸாகாது.  ஆக.. வசூலைக் குவிக்கும் எதிர்பார்ப்புள்ள நல்ல படங்களுக்கு எதிரியே இன்னொரு நல்ல படங்கள்தான்.. அதையே இப்படி கூட்டணி வைத்து மியூட் செய்தால், கிடைக்கின்ற லாபத்தை சிந்தாமல், சிதறாமல் அள்ளலாம் அல்லவா..?

இதற்காகத்தான் திட்டமிட்டு இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். கூட்டணி வெளியிடு என்றால் வெளியீட்டுச் செலவுகள் பங்களிக்கப்பட்டு அந்த நேரத்தில் இந்த தயாரிப்பாளர்களின் செலவு குறையும்.. வசூலை பங்கு போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை.. செலவு குறையுமே என்கிற ஒரே விஷயத்துக்காக இப்படி திட்டம் தீட்டியிருப்பார்கள் போல் தெரிகிறது..!

எப்படியிருந்தாலும் தமிழ்ச் சினிமாவின் வணிகத் துறைக்கு இது முற்றிலும் புதுமையான விஷயம்தான்..! வாழ்த்துகிறோம்..!

Our Score