பெண் இசையமைப்பாளர்கள் அதிகம் தென்படாத கோடம்பாக்கத்தில், இப்போது புதிதாக ஒரு பெண்ணொருவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.
பெயர் ஸ்ரீவித்யாகலை. பல ஆண்டுகளாக பாடகியாக வலம் வந்து கொண்டிருந்தவர். அந்நியன், தொட்டி ஜெயா, ஒரு கல் ஒரு கண்ணாடி, போக்கிரி ஆகிய படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். இப்போதுதான் முதல் முறையாக ‘என்ன பிடிச்சிருக்கா’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகுகிறார்.
பல இசையமைப்பாளர்களிடத்தில் பணியாற்றிய அனுபவத்தினாலும், முறையாக கர்நாடக இசையை கற்று வைத்திருந்ததாலும் இந்த இசைப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட முடிந்தது என்கிறார். இவருடைய கணவர் கலைச்செல்வன் தபேலா கலைஞராகவும் இருந்ததால் அவருடைய இசை ஆர்வமும் இவரை ஊக்கப்படுத்தியதாம்..!
இப்படத்தில் நடிகை அனுராதாவின் மகன் கெவின் ஹீரோவாக அறிமுகமாகுகிறார். ப்ரீத்தி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுப்புராஜ் படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா சாந்தம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.. சில பாடல்களை திரையிட்டுக் காட்டினார்கள்..! வெளியிட வந்த தேவா பேசும்போது ஸ்ரீவி்த்யாகலையின் ஆர்வத்தையும், உழைப்பையும் பாராட்டிப் பேசினார். “பல ஆண்டுகளாக இசைத்துறையில் தனக்கிருக்கும் அனுபவத்தை வைத்து இந்தப் பெண் முதல் முறையாக இசையமைப்பாளராகியிருக்கிறார். இதுவொரு சரித்திர சாதனை..” என்றார். இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போதும் பாடல்களை மிகவும் பாராட்டினார்.
நன்றி தெரிவித்து பேசிய ஸ்ரீவித்யாகலை, இந்த நிகழ்ச்சிக்கு தனது தாய், தந்தை, சகோதரியை அழைத்து வந்திருப்பதாகச் சொன்னார். அவர்கள் கொடுத்த உற்சாகம், ஊக்கமும்தான் தன்னை இசையமைப்பாளராக மாற்றியது என்றார். கூடவே மறக்காமல் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், பாடல்களை எழுத வந்தபோது ஆச்சரியப்பட்டு பின்பு முனைப்புடன் எழுதிக் கொடுத்த கவிஞர் விவேகாவையும் பாராட்டித் தள்ளிவிட்டார்..!
படத்தில் 6 பாடல்கள். இதில் 5 பாடல்கள் மெட்டுக்குப் போடப்பட்டதாம். ஒரு பாடல் மட்டுமே எழுதிய வரிகளுக்கு இசைக்கப்பட்டதாம்..!
படம் ஜெயிக்கிறதோ இல்லையோ.. பாடல்கள் வெற்றி பெற்றால் இசையமைப்பாளர் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம்.. ஆண்களே கோலோச்சும் இசைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் ஸ்ரீவித்யாகலையை மனதார வரவேற்கிறோம்..!