full screen background image

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ – சினிமா விமர்சனம்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ – சினிமா விமர்சனம்

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம்’, ‘அரண்மனை’, ‘மாயா’, ‘பாகுபலி-1’, ‘சென்னை-28-II’, ‘இது நம்ம ஆளு’, ‘காஞ்சனா’, ‘சிவலிங்கா(தெலுங்கு)’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான விநியோகஸ்தர் ரமேஷ் P.பிள்ளை இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அக்காவாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லிஜோ மோள் ஜோஸ் நடித்திருக்கிறார். இது இவரது முதல் தமிழ்ப் படமாகும். இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி காஷ்மீரா நடித்துள்ளார்.

மேலும், பிரேம், தீபா ராமானுஜம், மதுசூதனன், ‘நக்கலைட்ஸ்’ தனம், மற்றும் ‘நக்கலைட்ஸ்’ யூ டியூப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ரமேஷ் P.பிள்ளை, தயாரிப்பு நிறுவனம் – அபிஷேக் பிலிம்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சசி, ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார். இசை – சித்து குமார்(அறிமுகம்). படத் தொகுப்பு – ஷான் லோகேஷ். பாடல்கள் – மோகன் ராஜன், தமயந்தி, சண்டை இயக்கம் – சக்தி சரவணன், கலை இயக்கம் – S.S.மூர்த்தி, உடைகள் – பி.ஆர்.கணேஷ், விளம்பர வடிவமைப்பு – ஜோசப் ஜாக்சன், சிறப்பு காட்சி அமைப்பு – செங்குட்டுவன், தயாரிப்பு கண்ட்ரோலர் – அருண் அருணாசலம், நிர்வாக தயாரிப்பாளர் – N.பிரதீப், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

‘பிச்சைக்காரனில்’ அம்மா-மகன் பாசத்தை உருக்கிக் காட்டிய இயக்குநர் சசி இந்தப் படத்தில் மாமன்-மச்சான் பாசத்தைக் காட்ட வந்திருக்கிறார்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜி.வி.பிரகாஷும், அவருடைய அக்காள் லிமோ ஜோஸும் அவர்களின் அத்தை ஒருவரின் பராமரிப்பில் வாழ்ந்து வளர்ந்திருக்கிறார்கள். சிறு வயதிலேயே அக்காவும், தம்பியும் அப்படியொரு பாசப் பிணைப்பில் அக்காவுக்கு அப்பாவாகவும், தம்பிக்கு அம்மாவாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போது தம்பி அக்காவுக்கு அடங்காத பிள்ளை. அக்காவுக்குத் தெரியாமல் பைக் ரேஸ் ஓட்டி வருகிறார். அப்படி ரேஸ் ஓட்டும்போது அடிபட்டு மருத்துவமனையில் இருந்தபோது அக்காள்தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டதால் அக்காளின் பேச்சை மீறவும் முடியாமல், தனது ஆசைக் கனவை நிறைவேற்றவும் முடியாமல் தவிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதனால் அக்காவுக்குத் தெரியாமல் பைக் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான சித்தார்த் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றுகிறார். ஜி.வி.பிரகாஷ் ஒரு முறை பைக் ரேஸில் ஈடுபடும்போது சித்தார்த் அவரை விரட்டிப் பிடிக்கிறார். பிடிபட்டபோது சட்டை, பேண்ட் கிழிந்த நிலையில் இருந்த ஜி.வி.பிரகாஷுக்கு நைட்டியை அணிவித்து தெருவில் அழைத்து வந்து அவமானப்படுத்துகிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஜாமீனில் வெளியில் வந்தாலும் சித்தார்த் மீது அதீத கோபத்திலும், வெறுப்பிலும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த நேரத்தில் இவரது அக்கா லிஜோ ஜோஸுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் அவரது அத்தை. அந்த மாப்பிள்ளை சித்தார்த்துதான். லிமா ஜோஸூக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப் போகிறது. அவருக்கும் அப்படியே..

ஆனால் ஜி.வி.பிரகாஷ் வெறியாகிறார். இந்தக் கல்யாணத்தைக் கெடுக்கப் பார்க்கிறார். ஆனால் சித்தார்த் இந்தக் கல்யாணத்தில் உறுதியாக இருக்கிறார். இவர்களின் மோதல் ஒரு நாள் வெட்ட வெளிச்சமாக அப்போது அக்காள் லிஜோ ஜோஸ் தம்பி பிரகாஷிடம் காரணம் கேட்க.. அப்போதுதான் சித்தார்த்தால் ஜி.வி.பிரகாஷ் கைது செய்யப்பட்டது லிமோவுக்குத் தெரிய வருகிறது.

“தம்பிக்குப் பிடிக்காததால் இந்தக் கல்யாணம் வேண்டாம்” என்று சித்தார்த்தை மறுக்கிறார் லிஜோ ஜோஸ். ஆனால் சித்தார்த்தோ அவரைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று உறுதியாய் இருக்கிறார். “கண்டிப்பாக நீ எனக்கு மாமனாக வர முடியாது” என்று ஜி.வி.பிரகாஷூம் மிக மிக உறுதியாய் நிற்கிறார்.

இவர்களில் யாருடைய உறுதி வென்றது.. அதன் பின் நடந்தது என்ன என்பதுதான் இந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ லைட்டுகளின் கதை.

படம் இரண்டு கதைகளைச் சொல்கிறது. ஒன்று இந்தக் கால இளைஞர்களின் பயமறியாத பைக் ரேஸ் பற்றியது. இன்னொன்று ஒரு குடும்பத்தில் மாமன், மச்சான் உறவுகள் எப்படியிருக்க வேண்டும் என்பது.

பைக் ரேஸ் பற்றிய தகவல்களில் இளைஞர்களின் ஆர்வம்.. கவன ஈர்ப்பு.. பைக் ரேஸுக்கு பயன்படுத்தும் பைக்குகளின் அமைப்பு.. வேகத்தைக் கூட்டும் ஸ்பெஷல் சிஸ்டத்தை பைக்கில் பொருத்துவது.. தொகுதிக்கும், ஏரியாவுக்கும் தனித்தனியாக பைக் ரேஸ் நடத்துபவர்கள் இருப்பது.. இதற்காக பக்கா காண்ட்ராக்ட் போட்டு கையெழுத்து வாங்குவது.. போட்டியில் தோற்றால் தோற்றவரின் பைக்கை வாங்கி எரிப்பது.. இந்தப் போட்டியில் பந்தயம் கட்டுவது.. என்று பக்காவாக ஒரு கிரிமினல் அனலைஸ் செய்து இந்தப் படத்தில் இவைகளைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சசி. அந்தவகையில் இயக்குநருக்கு நமது நன்றிகள்.

இன்னொரு பக்கம் தன்னை வெறுக்கும் மச்சினனை நேசிக்க வைத்தே தீருவேன் என்று அடம் பிடித்து அவனை விடாமல் விரட்டி அன்பை போதிக்கும் மாமன் கதையையும் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இது பாசப் போராட்டத்தில் தப்பான கதையாகவே படுகிறது.

அக்காள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவன் அக்காளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதானே நினைப்பான்..? இப்படியொரு மாப்பிள்ளை யாருக்குமே கிடைக்காதுய்யா என்று அனைவரும் சொல்லும்போது அதனை ஏற்றுக் கொண்டு அக்காவுக்காக தனது பொறாமை, கோபம், ஈகோவை தூக்கியெறிந்துவிட்டு அக்காவுக்கு வாழ்க்கை கிடைக்க வைப்பவன்தானே தம்பி..! ஆனால் இதில் அந்தத் தம்பியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை சுயநலவாதியாக மாற்றிவிட்டார் இயக்குநர். இதனால்தான் படத்தில் ஒன்ற முடியவில்லை.

தன் தம்பிக்குப் பிடிக்காத மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று எப்போதே சத்தியம் செய்து கொடுத்ததையே, இப்போதும் நினைத்தும் கொண்டு கல்யாணத்தையும், காதலையும் தியாகம் செய்யும் அக்காவின் கேரக்டர் பத்தாம்பசலித்தனமாகவே காட்சியளிக்கிறது.

தம்பிக்கு வாழ்க்கை என்றால் என்ன.. கல்யாணம் என்றால் என்ன.. மாமன் என்பவர் யார்.. அவருடைய கடமைகள் என்ன.. இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். ஆனால் இது எதையும் செய்யாமல் ஒரு வார்த்தைக்காக காதலைத் தூக்கியெறியும் அக்காளின் கேரக்டர் ஸ்கெட்ச் நம்மை குழப்பமடைய வைக்கிறது.

ஜி.வி.பிரகாஷூக்கு மிக, மிக பொருத்தமான கேரக்டர். அவருடைய முட்டாள்தனமான, மூடத்தனமான கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு எந்தப் பங்கமும் செய்யாமல் நடித்திருக்கிறார். சித்தார்த்துடன் மோதும் காட்சிகளிலும், சித்தார்த்தின் வீட்டில் இருந்து கொண்டே அக்காளின் மீது கோபத்தையும், ஆத்திரத்தையும் காட்டும் இடத்திலும் நமக்கே அவர் மீது ஒரு வெறுப்பினை வரவழைத்துவிட்டார். இறுதிக் காட்சியில் குழந்தையுடன் அவர் நடந்து வரும் காட்சியில் ஒரு பரிதாபமும் கூடவே வருகிறது.

‘அசால்ட்டு சேது’வாக அடித்து ஆடியிருக்கிறார் சித்தார்த். முதல்முறை ஜி.வி.பிரகாஷை பிடிக்க அடித்துப் பிடித்து ஓடும் காட்சியில் அப்படியொரு வேகத்தைக் காட்டியிருக்கிறார் சித்தார்த். அதேபோல் தன்னுடைய போலீஸ் உயரதிகாரியின் முன்னிலையில் தனது போலீஸ் வேலையைப் பற்றி அடுக்கடுக்காகச் சொல்லி பெருமைப்படும் காட்சியில் ஒரு சல்யூட்டே போடலாம் சித்தார்த்துக்கு..!

காதலுக்காக பிரயத்தனப்பட்டு காதலை வெற்றியாக்கி கல்யாணமும் செய்துவிட்டு மச்சானை திருட்டு வழக்கில் இருந்து காப்பாற்றும் அந்த நேரத்திலும், தன் அண்ணனை அடித்த பின்பும்கூட மச்சானை விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சியிலும் சித்தார்த் தனி அடையாளத்தைப் பதித்திருக்கிறார். கதைப்படி அது முட்டுக் கொடுக்க முடியாமல் இருந்தாலும், நடிப்பில் குறையில்லாமல் செய்திருக்கிறார் சித்தார்த்.

கேரளாவின் அடுத்த அறிமுகமாக லிஜோ மோள் ஜோஸ் அக்காள் கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவருடைய சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள் அவருக்கு தமிழகத்தில் தனி ரசிகர் மன்றத்தையே உருவாக்க வைக்கும்.

தனது தம்பிக்காக காதலரை மறக்க நினைத்தும் முடியாமல் தவிப்பதும், தம்பியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் காதலையும் மறக்க முடியாமல் அவர் அல்லல்படும் காட்சியில் அற்புதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் லிஜோ. கல்யாணத்திற்குப் பின்பு தம்பியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் தவிக்கும் அக்காவாகவும், தனது சூல் கொண்ட வயிற்றை ஒரு முறை பார்க்க மாட்டானா என்று ஆசைப்படும் அக்காவாகவும் குறையில்லாமல் நடித்திருக்கிறார் லிஜோ ஜோள். நிச்சயமாக இவர் தமிழில் ஒரு ரவுண்டு அடிக்கலாம்.

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக அறிமுக நடிகை காஷ்மீரா நடித்திருக்கிறார். பொருந்தாக் காதலாக இருந்தாலும் சினிமாத்தன காதலாக இருப்பதால் ரசிக்க வேண்டியிருக்கிறது. மாமனையும், மச்சானையும் சேர்த்து வைக்க திரைக்கதையில் பெரிதும் உதவியிருக்கிறார். நடிப்பைப் பற்றி ஒன்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அடுத்தடுத்த படங்களில் பார்ப்போம்.

சித்தார்த்தின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம், ஒரேயொரு காட்சியில் ஒட்டு மொத்த பெண் குலத்தின் பிரதிநிதியாக மாறி ஆண், பெண் பேதம் பற்றி வகுப்பெடுத்திருக்கிறார். அப்ளாஸ் கிடைக்கும் இடம் இது.

“நைட்டியை ஒரு ஆம்பளைக்கு போட்டுவிடுவதால் அது அவமானம் என்றால் நீ உன் அம்மா, அக்கா, அண்ணி உட்பட நைட்டி போடும் அத்தனை பெண்களையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறாய்…” என்று அன்பாக எடுத்துச் சொல்லும் காட்சியில் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் தீபா ராமானுஜம். நன்று மேடம்..

இன்னொரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு அத்தையாக நடித்திருப்பவரின் வெள்ளந்தியான நடிப்பு ரசிப்புக்குரியது. இவர் மூலமாக ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் புரிவதுபோல அக்காளின் வாழ்க்கையைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கலாம். இயக்குநர் அதை மிஸ் செய்திருக்கிறார்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பூஸ்ட் எனலாம். பைக் ரேஸ் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதத்தில் ஒரு பெரிய பயத்தையே காட்டியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், சண்டை இயக்குநரும்.

நாயகிகளை அழகாகக் காட்டியும், காட்சிகளை இன்னும் அழகாகக் காட்டியும் ஒளிப்பதிவில் பெரும் உதவியைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இதேபோல் படத் தொகுப்பாளர் பைக் ரேஸ் உள்ளிட்ட சில காட்சிகளில் அந்த உணர்ச்சி மறையாதவண்ணம் தொகுத்தளித்திருக்கிறார். அதிலும் டீ ஷாப்பில் அக்காள், தம்பி, மாமா மூவருக்கும் இடையிலான காட்சிகளை தொகுத்திருக்கும்விதம் அருமை.

அறிமுக இசையமைப்பாளர் சித்துமாரின் இசையில் ‘மயிலாஞ்சி’ பாடல் மிக அழகான மெலடி. ஆனால் துவக்க வரிகளுக்குப் பிறகு இசையின் நெருக்கத்தால் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. ‘ஆழி சூழ்ந்த’ பாடல் காட்சியில் படத்தை நகர்த்தியிருப்பதால் பாடல்களைவிடவும் காட்சிகளே அதிகம் கவர்ந்திழுக்கின்றன. ‘உசுரே’ பாடலும், ‘இன்னும் இன்னும்’ பாடலும் கேட்க வைத்திருக்கின்றன என்றாலும் ‘ராக்கம்மா’ பாடலைப் பாடியவரின் குரல் வித்தியாசத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது.

படத்தின் முற்பாதியில் ஒரு போலீஸ் அதிகாரிக்கும், பைக் ரேஸ்காரனுக்கும் இடையில் ஏற்படும் சுவாரஸ்யமான சண்டையாக இருந்த கதை பிற்பாதியில் மாமன், மச்சானா குடும்பக் கதையாக உருமாறியதிலேயே படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைகிறது.

படத்தின் பிற்பாதியில் பல காட்சிகள் ரசிக்கும்படி இல்லை என்பதாலும், மாமன்-மச்சான் மோதல் நமது மனதில் உட்புக மறுத்ததாலும் முழுமையான திருப்தியை இத்திரைப்படம் தரவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

அதோடு இந்தப் படத்தின் மையக் கருத்துக்கு சம்பந்தமே இல்லாமல் குட்கா கடத்தல், மதுசூதனன் கதை என்று திரைக்கதை திரும்பியதால் ரசிகர்களின் மன நிலை மாற்றப்பட்டு படத்தின் தன்மையோடு ஒன்ற முடியவில்லை. கிளைமாக்ஸ் காட்சி நிச்சயமாக தேவையில்லாதது.. குடும்பக் கதையாகவே இதனைக் கொண்டு போயிருக்கலாம்.

கடைசியில் சிவப்பு-மஞ்சள் லைட்டுகள் எரிந்துவிட்டாலும் பச்சை லைட்டு எரியும் முன்பாகவே கரண்ட் கட் ஆன நிலைமைதான் படம் பார்த்தவர்களுக்கும் கிடைத்திருக்கிறது..!

Our Score