இளம் தலைமுறை நட்சத்திர நடிகைகளில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் கதையின் நாயகியாக உயர்ந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சிஸ்டர்’ என பெயரிடப்பட்டு, அதற்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை துவாரகா புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிளேஸ் கண்ணன் தயாரித்திருக்கிறார்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ, சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், சேசு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆர். சவரிமுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகி வரும் இந்த ‘சிஸ்டர்’ படத்தின் டைட்டிலையும், டைட்டிலுக்கான மோசன் போஸ்டரையும் படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டில் ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘ரன் பேபி ரன்’, ‘சொப்பன சுந்தரி’, ‘ஃபர்ஹானா’, ”தீரா காதல்’ ஆகிய படங்கள் வெளியானது என்பதும், இவற்றில் ‘ரன் பேபி ரன்’, ‘சொப்பன சுந்தரி’, ‘ஃபர்ஹானா’, ‘தீரா காதல்’ ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது என்பதும், இதன் மூலம் தமிழ் திரையுலகில் கதையின் நாயகியாக நடித்து அதிக வெற்றிகளை குவித்த நட்சத்திர நடிகை என்ற நற்பெயரையும் சம்பாதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.