எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974-ம் ஆண்டில் வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம், மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது இந்தப் படம் மீண்டும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியாகவுள்ளது.
‘இதயம் பேசுகிறது’ மணியன், வித்வான் வே.லட்சுமணனுடன் இணைந்து உதயம் புரோடக்ஷனஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த இப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.வாசனின் மகனான எஸ்.எஸ்.பாலன்.
இந்தப் படத்திலவ் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். மேலும் எம்.என்.நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரிவேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், எல்.காஞ்சனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்களை வாலியும், புலமைப்பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.
’உலகம் என்னும்..’ என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத எம்ஜிஆருக்காக ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் ஆகிய இரு பாடகர்கள் அந்தப் பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார்கள்.
’எண்ணத்தில் நலமிருந்தால்..’ மற்றும் ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்’ ஆகிய இப்படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இன்னொரு பாடல் ’பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ’ என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இப்படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான வரும் ஜனவரி மாதம் 17-ம் தேதியன்று வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.












