full screen background image

சார் – சினிமா விமர்சனம்

சார் – சினிமா விமர்சனம்

SSS PICTURES நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.சிராஜ் இந்தப் படத்தைத் தயாரித்து படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விமல், சாயாதேவி, பருத்தி வீரன் சரவணன், ரமா, உஷா எலிசபெத், சரவண சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைப்பட நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கியுள்ள  இப்படத்திற்கு ஒளிப்பதிவு – இனியன், போர்த்தொழில் படப் புகழ்  ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு – சித்து குமார், மற்றும் கலை இயக்கம் – பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட  நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது. 

பல ப்ளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும்  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட்’ படத்திற்குப் பிறகு இந்த ‘சார்’ படத்தை தமிழகமெங்கும்  வெளியிட்டுள்ளது.

சாதியை விரட்டும் ஒரே ஆயுதம் கல்விதான். ஒரு ஆசிரியரையே ஆயுதம் ஏந்த வைக்கிறது சாதிப் பேய் என்பதுதான் இந்தப் படத்தின் சுதைக் கரு.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயிருக்கும் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் பருத்தி வீரன்’ சரவணன். ஆசிரியர் பணியில் முழு மூச்சாக இருப்பவர். ஆரம்பப் பள்ளியாக இருந்த அந்தப் பள்ளியை நடுநிலைப் பள்ளி அளவுக்கு உயர்த்தியிருக்கிறார்.

இந்தப் பள்ளியை 1950-ம் ஆண்டில் துவக்கியவரே சரவணனின் அப்பாவான ‘அண்ணாதுரை‘ என்கிற சந்திரமோகன்தான். அவரும் ஒரு ஆசிரியர்தான். அந்தக் கிராமத்துக்கு சந்திரமோகன் வந்தபோது, அந்த ஊரில் ஆதிக்க சாதியினரும், ஒடுக்கப்பட்ட சாதியினரும்தான் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

ஆதிக்க சாதியினரின் வீடுகள், தோட்டங்கள், நிலங்களில் அடிமைகளாக வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் அடுத்தத் தலைமுறையாவது நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று நினைத்து பல எதிர்ப்புகளையும் தாண்டி அந்த ஊரில் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர் விமலின் தாத்தாவான சந்திரமோகன்.

இப்போதும் அந்த ஊரில் சாதி வெறி தலைவிரித்தாடுகிறது. ஆதிக்க சாதியினர் அந்தப் பள்ளியை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று இப்போதும் துடிக்கின்றனர். ஆனால் சரவணன் அதைத் தடுத்து இப்போதுவரையிலும் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார்.

சரவணனின் மகன் விமலும் இராமநாதபுரத்தில் ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சரவணன் இந்த வருடம் வேலையில் இருந்து ஓய்வு பெறுவதால், விமலை இந்த ஊருக்கே டிரான்ஸ்பர் வாங்கி வந்து, அதே பள்ளியில் வேலை செய்ய வைக்கிறார்.

தான் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தியதைப் போல தன் மகன் இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்துவான் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார் சரவணன்.

சொந்த ஊருக்கே வந்து தான் படித்த அதே பள்ளியிலேயே ஆசிரியராக வேலைக்கு சேரும் விமல், இந்த ஆசிரியர் வேலையை சீரியஸாக எடுக்காமல் இருக்கிறார். அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலைக்கு சேரும் நாயகி சாயாதேவியை காதலிக்கத் துவங்குகிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று சரவணனுக்கு நேர்ந்த விபத்தினால் பக்கவாதம் வந்து வீட்டில் படுத்த படுக்கையாகிறார். அந்தப் பள்ளியின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளுகிறார் பஞ்சாயத்துத் தலைவர். அந்த ஊரில் தொடர்ந்து நடக்கும் சில மர்ம செயல்களால் விமலும் பாதிக்கப்படுகிறார்.

இந்த நேரத்தில் அந்த ஊரில் நடக்கும் சில சம்பவங்களுக்கான உண்மையான காரணங்கள் என்னவென்பது விமலுக்குத் தெரிய வருகிறது. இதையடுத்து தன் அப்பாவின் கனவுப்படி அந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்கும் முயற்சியில் விமலும் ஈடுபடுகிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற்றதா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

விமலுக்கு நிச்சயமாக இதுவொரு முக்கியமான படம்தான். பேருந்தில் அறிமுகக் காட்சியில் இருந்து தன் தந்தையின் பரிதாப நிலையைப் பார்த்த பின்பு ஒரு உண்மையான ஆசிரியராக மாறுகின்றவரையிலும் சாதாரணமான ஒரு பையனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் விமல், கிளைமாக்ஸில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும்போது நம்மைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தன்னை யாரோ கல்லால் அடிக்கிறார்கள் என்பதை ஊராரிடம் சொல்லும்போதும், தன் அப்பாவின் நிலைமையைக் கண்டு கண்கலங்கி அம்மாவிடம் பேசும்போதும், தான் இதுநாள்வரையிலும் உயிர் நண்பன் என்று நம்பிக் கொண்டிருந்தவனின் துரோகத்தைக் கண்டு அதிர்ச்சியாகும் அத்தருணத்திலும் தன்னுடைய நடிப்பை மிகச் சிறப்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார் விமல். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..!

உருட்டும் விழிகளுடன் கிராமத்து முக ஜாடையுடன் நகர நாகரிகம் தெரியாத ஒரு நாயகியாக அட்சரப் பிசகாமல் கிடைத்திருக்கிறார் நாயகி சாயாதேவி. சில காட்சிகளில் விமலை ஆசுவாசப்படுத்தி அமைதியாக்கும் காட்சிகளில் மட்டுமே இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிளைமாக்ஸில் இவர் கண்டெடுக்கப்படும்போது காட்டும் மெளன நடிப்பு நம்மையும் கலங்க வைக்கிறது.

‘பருத்தி வீரன்’ சரவணனுக்கு இந்தப் படமும், கேரக்டரும் ஒரு பேசும் படம்தான். ஒரு பொறுப்புமிக்க ஆசிரியராக வசனங்களை மிக நிதானமாக நிறுத்தி மனதில் பதியும்படி சொல்லும்விதத்தில் நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார்.

“தப்பு செய்ற இடத்தில்கூட வாத்தியாரோட புள்ளை இருக்கக் கூடாது” என்ற வசனம் மூலமாக அவரை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்தக் காட்சி அபாரம். “வாத்தியார்ங்கிறது வேலையில்லை.. பொறுப்பு..” என்று விமலுக்கு ஆசிரியர் பணி பற்றி எடுத்துரைக்கும் காட்சியிலும் நம்மைக் கவர்கிறார்.

பள்ளிக்கூடத்தை இடித்ததைப் பார்த்த பிறகு நெஞ்சடைத்த நிலையில் வீடு திரும்பி தன் அப்பாவைக் கட்டிப் போட்டிருந்த அந்த செயினை எடுத்துத் தனக்குத்தானே போட்டுக் கொண்டு கொட்டடியில் படுக்கும் காட்சியில் உள்ளத்தைத் தொட்டுவிட்டார் சரவணன். ஹாட்ஸ் அப் ஸார்..!

சரவணனின் மனைவியான ரமா ஊரே திரண்டு புருஷனையும், மகனையும் அடிக்கும்போது பதறி, கதறும் காட்சியில் தன் மொத்த நடிப்பையும் காண்பித்து நம்மைக் கலங்க வைத்திருக்கிறார்.

சாயாதேவியின் அம்மாவாக உஷா எலிசபெத் சில காட்சிகளில் முகம் காட்டியிருக்கிறார். கூட இருந்தே குழி பறிக்கும் வில்லனாக சிராஜ்தீன் புது வில்லனாக நமக்குத் தெரிகிறார். இவருடைய தாத்தாவாக நடித்திருக்கும் ஜெயபாலன், அவருடைய மகனாக நடித்தவர்களும் அந்தக் கதாப்பாத்திர நடிப்பை சிறப்பாகக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் சுவையாகவும், விசேஷமாகவும் இருந்த்து படத்தின் வசனங்கள்தான். படத்தின் தன்மை என்ன.. கதைக் கரு என்ன.. படத்தின் நோக்கம் என்ன என்பதை பல வசனங்களின் வாயிலாக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் வசனகர்த்தாவான பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சுகுணா திவாகர். பாராட்டுக்கள்!

மீடியம் பட்ஜெட் படங்களுக்கேற்ற ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இனியன். அந்தக் கிராமத்தின் அழகை பகலிலும், இரவு நேரக் காட்சியிலும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.

சிந்துகுமாரின் இசையில் டூயட் பாடலும், சோகப் பாடலும் அந்தந்த நேரத்தில் நேரத்தைக் கழிப்பதற்காக மட்டுமே உதவியிருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் விமலின் ருத்ர தாண்டவக் காட்சியை மிக அழகாக படத் தொகுப்பு செய்து கொடுத்துள்ளார் தொகுப்பாளர்.

‘அசுரன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் தனது மகனிடம் “நல்லா படிப்பா. படிப்பை மட்டும்தான் நம்மகிட்ட இருந்து யாராலும் பிடுங்க முடியாது…” என்று பேசுவார். அந்த வசனம்தான் இந்தப் படத்துக்கான அடிப்படைக் கரு.

படிப்புதான் முக்கியம். கல்வியொன்றுதான் நமது சாதிய வேறுபாடுகளைக் களையக் கூடியது என்று நம் நாட்டுத் தலைவர்கள் பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள். அதைத்தான் இந்தப் படத்திலும் இந்த இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

கடவுள், பக்தி என்ற பெயரில் ஆதிக்க சாதியினர் படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி அவர்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள். இந்த அடிமைத் தளையிலிருந்து அவர்கள் விடுதலை பெற கல்வியால் மட்டுமே முடியும் என்பதை இந்தப் படம் பறை சாற்றியுள்ளது.

இதனாலேயே வில்லனின் பெயராக ‘சாமி’ என்றும், நாயகன் விமலுக்குப் பெயராக ‘ஞானம்’ என்றும் பொருத்தமாக வைத்திருக்கிறார்கள். இதில் விமலின் தாத்தாவின் பெயராக ‘அண்ணாதுரை’ என்று வைத்து, “நான் அண்ணாதுரையின் பேரன்டா” என்று விமல் மூலமாக வசனம் பேச வைத்து இந்தப் படத்தை திராவிட இயக்கத் திரைப்படமாக்க கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்..!

கடவுள், பக்தி இவையிரண்டையும் பகுத்தறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து, யார் கடவுள்.. எது பக்தி என்பதை புரிந்து கொண்டு வாழும் மெஜாரிட்டியான மக்கள் வாழும் இந்த நாட்டில் இதே கடவுள், பக்தியை வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றும் ஜாதி வெறி பிடித்தவர்களை அதே கடவுள், பக்தியை வைத்தே சம்ஹாரம் செய்ய வைத்திருப்பது இயக்குநரின் மிக கச்சிதமான திரைக்கதையாக்கம்தான்..!

அதேசமயம் போலி நம்பிக்கை.. போலி பக்தி, மூட நம்பிக்கை இவைகளைப் பற்றிச் சொன்ன கையோடு உண்மையாக கடவுள் நம்பிக்கையுள்ளவர்களையும், அவர்களின் நல்ல செயல்களையும், உண்மையான பக்தி என்பது எதுவென்பதையும் இயக்குநர் சொல்லியிருக்க வேண்டும். இதைச் சொல்லாமல் விட்டதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

கடவுள்கள், பக்தி சமூகம் இவை இரண்டுமே போலித்தனம் என்று போகிற போக்கில் சொல்வதைப் போல படம் அமைந்துவிட்டது என்பது வருத்தமான விஷயம். இதை இயக்குநர் சரி செய்திருக்கலாம்.

மற்றபடி, கல்வியின் முக்கியத்துவத்தை அனைத்து சாதியினருக்கும் உணர்த்தும் வகையில் கதைக் கரு அமைந்துள்ளது என்பதால் இந்தப் படத்தினை வாழ்த்தி வரவேற்போம்.!

சார் – நிச்சயமாக சல்யூட் செய்யலாம்..!

RATING : 4 / 5

Our Score