ஸ்டோரிஸ் பை தி ஷோர் நிறுவனத்தின் சார்பில் அனிருத் வல்லப் தயாரித்துள்ள திரைப்படம் ‘ராக்கெட் டிரைவர்’.
இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுக நாயகன் விஸ்வத் நடித்திருக்கிறார். மேலும் காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன், ராம்ஸ் மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கௌசிக் கிரிஷ் இசையமைக்க, ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியனும், கலை இயக்க பணிகளை பிரேம் கருந்தமலையும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தின் கதையை அக்ஷய் பூல்லா, பிரசாந்த்.எஸ் மற்றும் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கியுள்ளார்.
ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக இந்த “ராக்கெட் டிரைவர்” திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படம் சாதாரணமான ஒரு ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதையைக் கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநர், தன் வாழ்க்கையில் எதிர்பாராமல் டைம் மிஷினின் தாமதமான வருகையினால் இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார்.
அந்த சந்திப்பிற்குப் பிறகு அந்த ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்களை கலகலப்பாகவும், பொழுதுபோக்காகவும் சொல்வதுதான் இந்த ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படம்.
ஆட்டோ டிரைவரான விஷ்வத் அப்துல் கலாமின் தீவிர விசிறி. பற்றாளர். அப்துல் கலாமை போலவே ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர். காலம் இவரைத் அடித்துத் துவைத்துக் காயப்போட்டுவிட்டதால் இப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் ரோட்டோரமாக நின்று கொண்டிருக்கும் நாக விஷாலை பார்த்து பரிதாபப்பட்டு அவனை சென்னை பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் செல்கிறான் விஷ்வத். அங்கேதான் அழைத்து வந்தவனின் பெயர் அப்துல் கலாம் என்றும், 1942-ம் ஆண்டு டீனாக இருந்த அறிவழகனைத் தேடி வந்திருக்கிறான் என்பதும் விஷ்வத்திற்குத் தெரிய வருகிறது.
மேலும் விசாரிக்க விசாரிக்க தலை சுற்றல் வரும் நிலை. அந்த அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று இரவு கிளம்பி இன்றைக்குக் காலையில் சென்னை வந்திறங்கியுள்ளார். அவரைப் பொறுத்தவரையில் இப்போதைய ஆண்டு 1942. டைம் மிஷினில் ஏறி வந்ததைப் போல பேசுகிறான் நாகவிஷால்.
அதிர்ச்சியாகும் விஷ்வத், நாக விஷால் மீது பரிதாபப்பட்டு அவனை அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் வருகிறான். ராமேஸ்வரத்தில் நாக விஷாலை அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறான்.
அவனது நினைப்பு நிறைவேறியதா..? உண்மையில் நாக விஷால் யார்..? அப்துல்கலாம் என்ற பெயர் அவனுக்கு எப்படி கிடைத்தது..? டைம் மிஷின் கதை உண்மையா..? பொய்யா..? என்பதையெல்லாம் இடைவேளைக்குப் பின்னான கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
நாக விஷாலின் அழுத்தமான, அடக்கமான, அப்பாவியான நடிப்புதான் படத்தின் மிகப் பெரிய பலம். “மெட்ராஸ்” என்ற பெயரை வைத்து முதலில் அலப்பறையை ஆரம்பிக்கும் நாக விஷால், கடைசிவரையிலும் தன்னுடைய அப்துல்கலாம் பெயரை விட்டுவிடாமல் வைத்திருந்து நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் அப்துல் கலாம் இப்போது மீண்டும் இங்கே வந்திருக்கிறார் என்று நினைத்து அதைக் கண்டறியும் பிரச்சினையில் இறங்கும் நாயகன் விஷ்வத்தும் இடையிடையே நகைச்சுவையைக் கோர்த்து படத்தைப் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
தனது 60 வருட கால நாடக வாழ்க்கை அனுபவத்தை வைத்துக் கொண்டு தான் அறிமுகமாகும் காட்சியிலிருந்து கடைசிவரையிலும் நம்மை புன்னகைக்க வைத்திருக்கிறார் பழம் பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி.
வசனமே இல்லாமல் வெறுமனே முக பாவனையிலேயே பாவமான அப்பாவாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் விஷ்வத்தின் அப்பாவாக நடித்தவருக்கும் பாராட்டுக்கள்..!
இந்தப் படத்தில் என்ன கேரக்டர்.. கேரக்டர் ஸ்கெட்ச் என்ன என்பதையெல்லாம்கூட விசாரிக்காமல் ஒரு நாள் கால்ஷீட்டிலேயே தனது போர்ஷனை முடித்துவிட்டுப் போயிருக்கும் நடிகை சுனைனாவுக்கும் நமது பாராட்டுக்கள்.
தன்னுடைய குடும்பத்தின் மூத்தக்குடிக்கு, அப்துல் கலாம் கடன்பட்டிருந்த அந்த 1 அணாவை, இப்போது திரும்பப் பெற்றுக் கொள்ளும் ராம்ஸின் பரிதவிப்பு நடிப்பும் சுவையானதாக, ரசிக்க வைத்திருக்கிறது.
ரெஜிமேல் சூர்யா தாமஸின் ஒளிப்பதிவு குறையே இல்லாமல் படம் நெடுகிலும் காட்.சியளிக்கிறது. ராமேஸ்வரத்தை அங்குலம், அங்குலமாக பதிவு செய்திருக்கிறார்கள். கெளசிக் கிரிஷின் பின்னணி இசை நகைச்சுவை படம் என்ற பெயர் கிடைப்பதற்காக நிரம்பவே மெனக்கெட்டிருக்கிறது.
கலை இயக்கத்தை செய்திருக்கும் பிரேம் கருந்தமலை தனது பணியை மிகுந்த பிரயத்தனப்பட்டு செய்திருக்கிறார். பாராட்டுக்கள்.
டைம் மிஷின் தாமதமாக வந்தால் என்ன நடக்கும் என்று சயின்டிபிக்கல்லாக வந்திருக்க வேண்டிய கதையை, முன்னோர்களின் நிறைவேறாத ஆசையை வாரிசுகள் நிச்சயமாக செய்து முடிக்க வேண்டும் என்று முடித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.
அதோடு இந்தக் கதைக்கு அப்துல் கலாம் ஐயாவை ஏன் இயக்குநர் இழுத்தார் என்று தெரியவில்லை. அப்துல் கலாமின் விஞ்ஞான, அறிவியல் சாதனைகளைவிடவும் அவர் பட்ட கடன்தான் மிகவும் முக்கியம் என்று இயக்குநர் சொல்லாமல், சொல்லியிருப்பது முட்டாள்தனமானது.
இந்தப் படத்தைக் கிண்டல் செய்பவர்களின் வாயில் அப்துல் கலாமின் பெயர்தான் அரவை மிஷினில் சிக்கிய மாவாக அரைக்கப்படும் என்பதை இயக்குநர் ஏன் நினைக்கவில்லை.
அதோடு கடைசி காட்சியில் “அடுத்தப் பிறவியிலாவது கல்யாணம் பண்ணிரு…” என்று காத்தாடி, நாக விஷாலிடம் சொல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்சான வசனம்.
ஐயா.. இயக்குநர் திலகங்களே.. உங்களுடைய கற்பனை கதைக்கு செத்துப் போன உங்க தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அப்பா, அம்மான்னுகூட யாரையாச்சும் இழுத்துக்குங்க. இந்தியாவுக்கே அடையாளமாய் இருக்குற அப்துல் கலாம் ஐயா மாதிரியானவங்களை விட்ருங்கய்யா.. புண்ணியமாப் போகும்..!
RATING : 2.5 / 5









