full screen background image

பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன் கேட்ட ‘பகீர்’ கேள்வி..!

பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன் கேட்ட ‘பகீர்’ கேள்வி..!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற வார்த்தை நிஜம்தான் போலிருக்கிறது.. மறைந்த ‘கானக்குரலோன்’, ‘சிம்மக்குரலோன்’ டி.எம்.செளந்தர்ராஜனின் அருமை, பெருமையெல்லாம் நமக்கே தெரியும். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவரின் பாடல்கள் மூலமாக இப்போதும், எப்போதும் தமிழ் நெஞ்சங்களிடையே இருப்பவர்.. அப்படிப்பட்டவர் மனதிலும் ஒரு அழுத்தமான தன்னம்பிக்கை இருந்திருக்கிறது என்பதைக் கேள்விப்படும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..

‘நனையாத மழையே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பேசும்போது, டி.எம்.எஸ். சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைக் கூறினார்.

“நானும், இளையராஜாவும் கொடைக்கானல்ல ஒரு படத்தோட கம்போஸிங்குக்காக ஹோட்டல்ல உக்காந்திருந்தோம். அப்போ அதே ஹோட்டல்ல டி.எம்.எஸ்ஸும் தங்கியிருந்தாரு. நாங்க அங்க தங்கியிருக்குற விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்ட டி.எம்.எஸ். ஹோட்டல்ல தன்னைச் சந்திச்சவங்ககிட்டயெல்லாம் ‘இப்பவும் இளையராஜா இசையிலேயும் பாடணும் போலிருக்கு..’ என்று சொல்லியிருக்கிறார். இந்த்த் தகவல் என் காதுக்கும் வந்துச்சு..

ஒரு மரியாதை நிமித்தமா நான் அவரைச் சந்திக்க அவரோட அறைக்கு போனேன். அப்போ அவரோட அறைல இருந்த டிவில ‘நான் ஆணையிட்டால்’ பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த்து. பாட்டு முடிஞ்சதும் டிவியை ஆஃப் பண்ணினார் டி.எம்.எஸ். தொடர்ந்து என்னிடம், ‘பார்த்தீங்களா.. என் பாட்டு எப்படின்னு..? இந்தப் பாட்டு என் குரல்ல ஒலிக்கலைன்னா இங்க எடுபட்டிருக்குமா..? என் வாய்ஸினாலதான இது மாதிரி எல்லா பாட்டுமே ஹிட்டாச்சு.. எம்.ஜி.ஆருக்கு வேற யாராச்சும் குரல் கொடுத்திருந்தா என்னாயிருக்கும்..? இப்படி அவருக்காக பாடி, பாடியே அவரை முதலமைச்சராக்கியிருக்கேன்..’ என்றார்.

எனக்கு முதலில் அதிர்ச்சியாயிருந்தாலும் நானும் உடனே திருப்பிக் கேட்டேன்.. ‘ஏன் நீங்க சிவாஜிக்குக்கூடத்தான் பாடினீங்க. ஆனா அவர் சி.எம். ஆக முடியலையே’ன்னேன்.. இது மாதிரிதான் ஒரு சிலர் அளவுக்கதிகமா தங்களைப் பத்தி நினைப்பாங்க..” என்றார்.

ஆயுள் முழுவதும் பாடியதால் தனக்குக் கிடைத்த ஆதாயம் தனது உழைப்புக்கேற்றதாக இல்லை என்பது அந்த கம்பீரக் குரலோன் தனது கடைசி காலத்தில் வருத்தப்பட்ட விஷயம். அதனாலேயே இது போன்று அவர் எண்ணியிருக்கலாம்..!

Our Score