full screen background image

சிங்கப்பெண்ணே – சினிமா விமர்சனம்

சிங்கப்பெண்ணே – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஜெ.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி.சதீஷ் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

Swimming, Cycling, Running ஆகிய மூன்றுவிதமான விளையாட்டுத் திறன்களையும் உள்ளடக்கிய Triathlon என்ற விளையாட்டுப் போட்டியை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

Triathlon போட்டியில் பல முறை தேசிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் தமிழக வீராங்கனையான ஆர்த்திதான், இந்தப் படத்தில் கதையின் நாயகியாக ‘தேன்மொழி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆர்த்தியின் பயிற்சியாளர் வேடத்தில் ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.

இவர்களுடன் பசங்க’ சிவகுமார், ஏ.வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். குமரன் சிவமணி இசையமைக்க, கே.எல்.பிரவீன் படத் தொகுப்பு செய்துள்ளார்.

பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசியிருக்கும் இந்தப் படம் மிகப் பொருத்தமாக சர்வதேச மகளிர் தினமான இன்றைக்கு மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தென்காசியில் பிறந்து வளர்ந்த ‘ஷாலினி’ என்ற ஷில்பா மஞ்சுநாத் நீச்சல் விளையாட்டில் சாதிக்க நினைக்கிறார். தனது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றவர்.

இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத ஷில்பா தற்போது தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நீச்சல் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.

அவரது ஊரை சேர்ந்த தேன்மொழி’ என்னும் ஆர்த்தி நீச்சல், சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஓடுவது என்று அனைத்திலும் திறமை படைத்தவராக இருக்கிறார். ஆனால், அவருடைய திறமையைப் பற்றி அவரே தெரிந்து கொள்ளாமல் இருப்பதை உணர்கிறார் ஷில்பா.

மேலும் ஆர்த்தியின் பாட்டி திடீரென்று இறந்து போனதால் அவரது படிப்பு நிறுத்தப்பட்டு கட்டாய கல்யாணத்திற்கு ஆளாக்கப்படும் ஆர்த்தியை அந்தச் சூழலில் இருந்து காப்பாற்றுகிறார் ஷில்பா.

ஆர்த்தியை சென்னைக்கு அழைத்துச் சென்று முறையான பயிற்சி அளித்து அவரை சிறந்த நீச்சல் வீராங்கனையாக உருவாக்க நினைக்கிறார் ஷில்பா. அதன்படியே சென்னைக்கு ஆர்த்தியை அழைத்து வரும் ஷில்பா அவரை தன்னுடைய பயிற்சி மையத்திலேயே சேர்ப்பித்து நீச்சல் கற்றுக் கொடுத்து சிறந்த வீராங்கனையாக உருவாக்குகிறார்.

மற்றொரு பயிற்சியாளரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரேமின் மகளும் இதே நீச்சல் பயிற்சியைப் பெற்று வருகிறார். சாதாரணமாக இரண்டு பயிற்சியாளர்களின் மாணவர்களுக்குள் நடந்த போட்டியில் ஆர்த்தி முதலிடத்தில் வருகிறார்.

இதையடுத்து ஆர்த்தி மாநில போட்டியில் கலந்து கொண்டால் தனது மகள் தோல்வியடைந்து விடுவாளோ என்று பயப்படும் பிரேம், ஆர்த்தியை போட்டியில் பங்கேற்க விடாமல் செய்கிறார். இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஷில்பாவையும் சதி வேலை செய்து சஸ்பெண்ட் செய்ய வைத்து விடுகிறார்.

இதையடுத்து நீச்சலில்தானே நீங்கள் முட்டுக்கட்டை போடுவீர்கள்.. நான் ஆர்த்தியை டிரையத்லான் போட்டியில் சாம்பியனாக்குகிறேன் என்று சொல்லி அதற்கான பயிற்சியை ஆர்த்திக்குக் கொடுக்கத் துவங்குகிறார் ஷில்பா.

ஷில்பா நினைத்ததுபோல் Triathlon போட்டியில் ஆர்த்தி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் டிரையத்லான் சாம்பியன் ஆர்த்திக்கு விளையாட்டு புதிதல்ல என்றாலும் நடிப்பு புதியது. ஆனால், கேமிராவுக்குப் புதியவர் என்பது தெரியாத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

ஆர்த்தியின் பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத், அந்த வேடத்திற்கு தேர்வானது ஏன் என்பது ஸ்கிரீனில் அவரைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது. நீச்சல் வீராங்கனைக்கு ஏற்றபடி மிகவும் பிட்டாக இருக்கிறார் ஷில்பா. தான் ஏற்றிருக்கும் பயிற்சியாளர் வேடத்தை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம் தனது அதிகாரத் திமிரைக் கச்சிதமாகக் காண்பித்திருக்கிறார். வளைந்து, கொடுத்து பிழைக்கத் தெரிந்த பயிற்சியாளரான தீபக் நம்பியார் வில்லன் வேடத்திற்கு புது வரவு. நல்ல பயிற்சியாளராக பசங்க சிவகுமார், மகளது வாழ்க்கை மீது அக்கறை கொள்ளும் தந்தையாக ஏ.வெங்கடேஷ், ஆர்த்தியின் குடிகார முறை மாமனாக சென்ட்ராயன் என்று படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் தனது கேமரா மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். நீச்சல் போட்டி பயிற்சி மற்றும் நீச்சல் போட்டிகளை நிஜமான போட்டிகளின் இடையே கிடைத்த நேரத்தில் படமாக்கியிருக்கும் நேர்த்தி பாராட்டுக்குரியது. கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் தேசிய அளவிலான Triathlon போட்டியை காட்சிப்படுத்திய விதமும் பாராட்டுக்குரியது.

இசையமைப்பாளர் குமரன் சிவமணியின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான். போட்டிகளின்போது அதன் விறுவிறுப்பு குறையாமல் பின்னணி இசையில் பரபரப்பை கூட்டி நம்மை ஸ்கிரீனை மட்டுமே பார்க்க வைத்திருக்கிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கபிலன் வைரமுத்துவின் வசனங்கள்தான். “பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது உரிமையில்லை. அது ஆம்பளைங்க கொடுத்த சலுகை..” என்ற ஒரு வசனமே, இன்றைய உலகளாவிய சமூகச் சூழலை சுட்டிக் காட்டிவிட்டது.

மேலும், “உண்மை ரப்பர் பந்து மாதிரி; அது ரொம்ப நாளைக்கு தண்ணிக்குள்ள இருக்காது…”, “தண்ணியோட நாம பேசுற மொழிதான் நீச்சல்..” என்று ரசிகர்களை யோசிக்க வைக்கும் வசனங்களும் படத்திற்குக் கிடைத்த பெரும் பலம்தான். பாராட்டுக்கள் கபிலன்.

இந்தப் படத்தை நிறைய உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கியுள்ளார் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெ.எஸ்.பி.சதீஷ்.

’ட்ரையத்லான்’ (Triathlon) என்ற விளையாட்டை மையமாக கொண்டு உருவான முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றிருக்கிறது.

படத்தில் ட்ரையத்லான் விளையாட்டு பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் மிகத் தெளிவாக விவரித்திருக்கிறார் இயக்குநர். இதோடு கூடவே படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் நமக்குப் பிடித்தாற்போன்று எமோஷன்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார்.

இந்தியாவில் விளையாட்டுத் துறை இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது..? அதிலிருக்கும் அரசியல் விளையாட்டுத் துறையை எவ்வளவு நாசமாக்கி வருகிறது..? இதையும் தாண்டி ஆர்த்தி என்ற இந்த சின்னப் பெண் எப்படி ஜெயிக்கிறார் என்பதைத்தான் இப்படம் பேசுகிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் நிஜமான தேசிய அளவிலான டிரையத்லான் போட்டியின் இடையே இத்திரைப்படத்திற்காக அந்த நிஜமான வீரர், வீராங்கனைகளுக்கு இடையில் காட்சிப்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது.

பொதுவாக சினிமாக்களில் நீச்சல் உடையை கவர்ச்சிக்காகவே நமது இயக்குநர்களும், நடிகைகளும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் அது போன்ற ஒரு தோற்றத்தையே உருவாக்காத வண்ணம் நீச்சலுடையை வடிவமைத்திருப்பதும், அது பற்றிய கூச்சத்தை நீக்கும்படியாக வசனத்தின் மூலம் நிவர்த்தி செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. ஆனாலும் ஒரேயொரு காட்சியில் ஷில்பாவை நீச்சல் உடையில் காட்டும்போது கமர்ஷியல் ஹீரோயினுக்கேற்ற வகையில் ஸ்லோமோஷனில் ஸ்டைலாக காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

இது விளையாட்டு போட்டியை மையப்படுத்திய திரைப்படம் என்றாலும், சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு அவர்களுடைய குடும்பமும், இந்த சமூகமும் உத்வேகமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதை ஒரு சிறப்பான கதையில் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தை பார்க்கும் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தின் உருவாக்கம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் நல்ல சிந்தனையோடு உருவாகியிருக்கும் இந்த ‘சிங்கப் பெண்ணே’ படத்திற்கு அரசு தரப்பில் வரி விலக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். தயாரிப்பாளர் அரசிடம் இது குறித்து, முறையிட்டாரா.. இல்லையா.. என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இது நிச்சயம் வரி விலக்குக்குத் தகுதியான திரைப்படம்தான்.

பொதுவாகவே விளையாட்டைக் கற்றுக் கொள்ள ஆசைப்படும் பெண்களுக்கு அவர்களது பெற்றோர்களும் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் அனைவரும் இந்த ஆர்த்திபோல் சிங்கப் பெண்ணாக மாறுவார்கள்…!

RATING : 4 / 5

Our Score