புதுமுக நடிகர்கள்கூட வருடத்திற்கு 2 படங்களைக் கொடுத்துவிடும் சூழலில் நடிகர் சிம்பு மிக மிக தாமதமாக தனது படங்களைத் திரைக்குக் கொண்டு வருவது குறித்து அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
அவர்களை உற்சாகப்படுத்தும்விதமாக இன்று தனது பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சிம்பு.
அந்த அறிக்கையில், “வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர்தான். இந்தப் படங்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதால்தான் ஷூட்டிங் தாமதமானது. இப்போது அதெல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. வரும் நவம்பரில் ‘வாலு’ திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும்.
‘இது நம்ம ஆளு’ படத்தைப் பொறுத்தவரை இப்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ‘இது நம்ம ஆளு’ கண்டிப்பாக டிசம்பரில் வெளியாகும்.
ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்து விட்டேன். என்னுடைய ரசிகர்களைப் போலவே நானும் எனது படங்கள் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன். நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்….”
– இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
சொன்னதை செய்து காட்டினால் ரசிகர்களையும் தாண்டி தயாரிப்பாளர்களும் சந்தோஷப்படுவார்கள்..!