full screen background image

‘சில்லுக் கருப்பட்டி’ – சினிமா விமர்சனம்  

‘சில்லுக் கருப்பட்டி’ – சினிமா விமர்சனம்  

இந்தப்  படத்தை   டிவைன் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், கே.மணிகண்டன், நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜூன், க்ராவ்மகா ஸ்ரீராம், ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜம், விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி, இசை – பிரதீப் குமார், ஒலிக் கலவை – ஜி.சுரேன், ஒலி வடிவமைப்பு – எஸ்.அழகியக்கூத்தன், ஜி.சுரேன், படத் தொகுப்பு – ஹலிதா ஷமீம், வி.எஃப்.எக்ஸ். சூப்பர்வைஸர் – லிவி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், நிர்வாகத் தயாரிப்பு – பி.சுரேஷ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, தயாரிப்பு – டிவைன் புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – வெங்கடேஷ் வெளினேனி, வெளியீடு – சக்தி பிலிம் பேக்டர் சிக்னேச்சர்.

திரை உலகில் தற்போது  ‘அந்தாலஜி’  என்று அழைக்கப்படும் ஒரு சில குறும் படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. இந்த ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதிலொரு கதையில் சமுத்திரக்கனி -சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்து உள்ளனர்.

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும்  ஒரு சராசரி தம்புதியனரின் வாழ்வியல் முறையை பதிவு செய்யும்  அத்தியாயம் இவர்களுடையது.

‘ஓகே கண்மணி’ படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும், ‘தெய்வ திருமகள்’, ‘சைவம்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழேணியின் உச்சத்தில் இருக்கும் சாரா அர்ஜுன் ஒரு கதையிலும் நடிக்கிறார்.

நிவேதிதா சதிஷ் – மணிகண்டன் ஆகியோர் ஒரு கதையிலும் நடித்து உள்ளனர். இவர்களுடன் க்ராவ்மகா ஸ்ரீராம், ராகுல் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். 

படத்தின் தலைப்பான ‘சில்லுக்கருப்பட்டி’ என்பது பதநீர், ஏலக்காய் சுக்கு, மிளகு இவைகளின் கூட்டணியில் உருவாகும் ஒரு வகையான இனிப்புக் கலவைதான். இந்த நான்குவிதமான பொருட்களின் தன்மையை மையமாக வைத்து நான்குவிதமான குறுங் கதைகளை உருவாக்கியிருக்கிறார் இயக்குநரும், கதாசிரியருமான ஹாலிதா ஷமீம்.

‘பின்க் பேக்’(Pink Bag), ‘காக்கா கடி’, ‘டர்ட்டில் வாக்’(Turtle Walk), ‘ஹாய் அம்மு’ என்ற இந்த நான்கு குறுங் கதைகளுமே நான்குவிதமான காதல், அன்பினைப் பற்றிப் பேசுகிறது.

‘பின்க் பேக்’(Pink Bag) கதையில் ஏழையாக இருந்தாலும் நேர்மையாக இருக்க முயலும் ‘மாஞ்சா’ என்னும் சிறுவனின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. காதலித்து மணமுடிக்க இருப்பவளே தனக்குக் கேன்சர் என்றவுடன் குட் பை சொல்ல.. தன்னுடைய மீம்ஸ்களை மட்டுமே பார்த்திருக்கும் நிலையில் கேன்சர் என்று தெரிந்தும் தன் மீது அன்பு செலுத்தவும், காதலிக்கவும் முன் வரும் ஒரு காதலியை நினைத்து உருகும் ஒரு இளைஞனின் கதையை ‘காக்கா கடி’யில் சொல்லியிருக்கிறார்கள்.

முதுமையை எட்டிய வயதில் பேச்சுத் துணைக்காக பேசத் துவங்கி கூடவே இறுதிவரையிலும் இருந்துவிடலாமா என்றெண்ணத்தை இருவருக்குள்ளும் ஏற்படுத்தும் காதலைப் பேசுகிறது ‘டர்ட்டில் வாக்’. தன்னை ஒரு மிஷினாக நினைக்கும் கணவனிடமிருந்து அன்பையும், காதலையும் பெறத் துடிக்கும் ஒரு மனைவியின் எதிர்பார்ப்பைச் சொல்கிறது ‘ஹாய் அம்மு’ கதை.

ஒட்டு மொத்தமாய் படம் சொல்ல வருவது உண்மையான காதலை… ஒரு இன்பாச்சுவேஷன்.. ஒரு உண்மையான இனம் புரியாத காதல்.. ஒரு முதிய வயது காதல்.. ஒரு திருமணத்திற்குப் பிந்தைய காதல் என்று வகைக்கு ஒன்றாகப் பிரித்து அழகாக எழுதியிருக்கிறார் ஹாலிதா ஷமீம்.

பின்க் பேக்(Pink Bag)

சென்னையின் கொடுங்கையூர் பக்கமாக சேரிப் பகுதியில் வாழும் சிறுவன் மாஞ்சா. கொடுங்கையூர் குப்பை மேட்டில் தினமும் பழையப் பொருட்களைத் தேடி சேகரித்து அவற்றை கடைகளுக்குப் போட்டு காசு பார்ப்பது வழக்கம். அவனுடைய கண்களுக்கு மட்டும் தினம்தோறும் ஒரு பின்க் கலர் பிளாஷ்டிக் பேக் தென்படுகிறது. அதில் முதல் நாளே அழகிய பதின்ம வயது பெண்ணின் புகைப்படம் இருக்கிறது. அந்தப் புகைப்படம் அவன் மனதை ஏதோ செய்ய.. அதை அவன் பத்திரப்படுத்துகிறான். இதேபோல் தினமும் வாக்மேன் உள்ளிட்ட சில பொருட்கள் அந்த பின்க் பையின் மூலமாக அவனுக்குக் கிடைக்கின்றன.

அப்படியொரு நாள் அந்த பேக்கில் ஒரு மோதிரம் ஒன்று கிடக்கிறது. புகைப்படத்தில் பார்த்த அந்தப் பெண்தான், இந்த மோதிரத்தை தவற விட்டிருப்பாளோ என்று நினைத்த மாஞ்சா, அதனை அவளிடமே திரும்பவும் ஒப்படைக்க நினைக்கிறான்.

இதனால் குப்பை லாரியில் தொற்றிக் கொண்டு அந்த பின்க் கலர் பையை யார் தினமும் குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள் என்று கண்டுபிடிக்கிறான். அது அவனே எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்ட்.. இதையடுத்து மாஞ்சா என்ன செய்கிறான் என்பதுதான் இந்தப் பகுதியின் கதை.

‘காக்கா கடி’

மணிகண்டன் என்னும் இளைஞனுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம். காதலித்த  பெண்ணை மணக்கவிருக்கிறார். இவர் ஒரு மீம்ஸ் கிரியேட்டர்.. யூ டியுப் விமர்சகர்.. ஒரு நாள் திடீரென்று இவருக்கு உடல் நலம் கெட.. மருத்துவரை நாடுகிறார். அங்கே இவருக்கு கேன்சர் என்கிறார்கள்.

இதையறியும் கல்யாணப் பெண் “கட்டி வைச்சிருக்கிறவனுக்கு யார் கட்டிக் கொடுப்பாங்க…” என்று சொல்லி கல்யாணத்தை முறித்துக் கொள்கிறார்.

இவரோடு தினமும் யூபர் டாக்சியில் பயணிக்கும் ஆடை வடிவமைப்பாளரான நிவேதிதா சுரேஷை மணிகண்டன் கவர்கிறார். அவருடைய நோயைப் பற்றிக் கேள்விப்பட்டு அவருக்குத் தைரியம் சொல்கிறார் நிவேதிதா. இந்த அக்கறை அவருக்குள் காதலை வளர்த்துவிட.. தான் மணிகண்டனை காதலிப்பதாகவும் சொல்கிறார் நிவேதிதா. இதற்கிடையில் மணிகண்டனுக்கு கேன்சருக்கான ஆபரேஷன் நடைபெறுகிறது..

மணிகண்டன் உயிர் பிழைத்தாரா..? இவர்களின் காதல் ஜெயித்ததா..? என்பதுதான் இந்தக் ‘காக்கா கடி’யின் கதை.

‘டர்ட்டில் வாக்(Turtle Walk)’

தன்னைக் காதலித்தவனை நம்பி திருமணமே செய்யாமல் காத்திருந்த யசோதா என்னும் லீலா சாம்சன்.. காதலன் திரும்பி வராத சூழலிலும் அப்படியே தன் காதலை தன் மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டிவிட.. இப்போது 60 வயதில் தனி வீட்டில் தன்னந்தனியே வாழ்கிறார்.

இதேபோல் மனைவியுடன் முப்பது வருட காலம் வாழ்ந்த அனுபவத்திற்குப் பிறகு மனைவியை இழந்து இப்போது தனிக்கட்டையாய் வாழ்கிறார் நவநீதன். இவர்கள் இருவரும் ஒரு மருத்துவமனையில் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். பழகுகிறார்கள்.

ஒரு நாள் இரவில் கடற்கரையில் ஆமை முட்டைகளை பத்திரப்படுத்தும் சமூக நிகழ்வில் தங்களைத் தாங்களே உணர்கிறார்கள். தங்கள் இருவருக்குமே ஆள் துணை தேவை என்பதை கண்டறிகிறார்கள்.

இப்படி அவர்களுக்குள் பூத்திருக்கும் காதல் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றதா.. இல்லையா.. என்பதுதான் இந்த ‘டர்ட்டில் வாக்’ கதை..!

‘ஹாய் அம்மு’

அமுதினிக்கும், தனபாலுக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள். தினமும் காலையில் இருந்து இரவுவரையிலும் குழந்தைகளைக் கவனிப்பது.. சமைப்பது.. வீட்டு வேலைகளைப் பார்ப்பது என்று ஒரே மாதிரியான வேலைகளைச் செய்து, செய்து அலுப்பாகியிருக்கிறாள் அமுதினி.

கணவன் தனபாலுக்கு அமுதினி என்ற மனைவி மீதான ஈர்ப்பு இருக்கிறதே தவிர.. அவளும் ஒரு மனுஷிதான். அவளுக்கும் ஒரு விருப்பம் உண்டு.. ஓய்வு தேவை.. அன்பு தேவை.. ஆறுதல் தேவை.. என்பதையெல்லாம் அறியும் மன நிலையில்லை.

இது ஒரு நாள் அந்த வீட்டில் பிரச்சினையாக வெடிக்கிறது. தனபால் இதுவரையிலும் எதைப் பற்றியும் கவலைப்படாத ராசாவாக வாழ்ந்ததாகக் குற்றம் சொல்லுகிறாள் அமுதினி. ஆனால் தனபாலோ அதை மறுக்கிறான். தனக்கு வேலையே மென்னியைப் பிடிக்கிறது. தன்னால் அவள் விருப்பப்படியெல்லாம் இருக்க முடியாது என்கிறான்.

இந்தப் பிரிவினை குடும்பத்திற்குள் சுவரை எழுப்ப.. இயல்பு நிலைமை அந்த வீட்டில் காணாமல் போகிறது.. கடைசியில் குடும்பம் என்னவானது..? இருவருக்குள்ளும் சுமூக நிலைமை ஏற்பட்டதா..? அல்லது நிரந்தரமாகப் பிரிந்தார்களா…? என்பதுதான் இந்த ‘ஹாய் அம்மு’ கதையின் முடிவு.

இந்த நான்கு கதைகளும் ஒன்றுக்கொன்றுடன் தொடர்பில்லை என்றாலும், நான்கின் கதையம்சமும் ஒன்றுதான். அது காதல். காதல்.. காதல்…

வழமையான திரைப்படங்களில் சொல்லப்படும் காதலாக இல்லாமல்.. தானாக.. இயல்பாக அவர்களுக்குள் பூக்கும் காதல் உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் இயக்குநர் ஹலிதா ஷமீம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

‘பின்க் பேக்’ கதையில் சொல்லப்படுவது ‘இன்பாச்சுவேஷன்’ என்றாலும், அதையும் ஒரு இனம் புரியாத காதலாகவே ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் புகைப்படத்தில் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போய் அவளைக் காதலிப்பதாகச் சொல்லி பின்னால் அலையாமல்.. அவளுக்கு நல்லது செய்ய நினைத்து.. அவள் தொலைத்த மோதிரத்தைக் கொடுத்துவிட்டு போக நினைக்கும் செயலை காதல் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘மாஞ்சா’வாக நடித்த பையனும், அவனுடயை நண்பனாக வருபவனும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். ‘எவ்வளவு பெரிய கையா இருந்தாலும் எல்லா கையும் அக்குள்வரைக்கும்தான்.. தெரியுமில்ல..’ என்று மாஞ்சாவின் தோழன் வெங்கடேஷ் சொல்லும் இடம் நகைக்க வைத்திருக்கிறது.

மாஞ்சாவின் அம்மா பேசும் பேச்சும், “போர்வையாச்சும் எடுத்திட்டுப் போடா” என்று பாசத்துடன் அறிவுரை சொல்லும் பாங்கும் பையனையும் கண்டிக்கக் கூடாது.. அதேபோல் தனது பாசமும் வெளிப்பட்டாக வேண்டும் என்பது போன்ற கட்டாய உணர்வை கண்ணியமாகக் காட்டியிருக்கிறது.

‘காக்கா கடி’யில் அனைவரையும் சகட்டு மேனிக்குக் கலாய்க்கும் மணிகண்டன் தன் வாழ்க்கை சூனியமாகிவிட்டது என்பதை உணர்ந்தவுடன் படும் துயரமும், கேன்சரை சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் பேசும் பேச்சுக்களும் மிக இயல்பு. “கட்டி வந்தவனுக்கு எப்படி பெண்ணை கட்டி வைப்பாங்க…” என்று கல்யாணப் பெண் அனுப்புபம் வாட்ஸப்பில் மெஸேஜை பார்த்து தியேட்டரே கலகலப்பாகிறது..!

இதேபோல் நிவேதிதாவும் சினிமாத்தனம் இல்லாமல் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். காதல் என்ற உணர்வே வராமல் மணிகண்டன்பால் ஈர்க்கப்பட்டவர் கடைசியில் காதலியாகவே மாறுவது ஒரு ஹைக்கூ கவிதை..!

சுகர் பிரச்சினையில் நேரத்திற்கு மாத்திரைகளையும், அளவு சாப்பாட்டையும் சாப்பிட்டு பேரனுடன் சரிக்கு சமமாக விளையாடிக் கொண்டிருக்கும் நவநீதனுக்குள்ளும் ஒரு காதல் பொசுக்கென்று வருகிறது ‘யசோதா’ என்னும் லீலா சாம்சனைப் பார்த்தவுடன்.

லீலாவுடன் கனிவான பேச்சு மேலும், மேலும் ஆர்வத்தைத் தூண்டிவிட நெருக்கத்துடன் பழக ஆரம்பித்து ஒரு வார்த்தையில் தனது ஆம்பளைத்தனத்தைக் காட்டிவிட்ட நவநீதனிடம் முறுக்கிக் கொண்டாலும் சட்டென இயல்பு நிலைமைக்கு மாறும் லீலாவின் ஆக்சன்கள் அட்டகாசமான காதல் கவிதைகள்..!

“சங்கு ஊதுற வயசில சங்கீதாவா?’ன்னு கேக்குற மாதிரி… ‘இஸ்துக்கினு போற வயசில யசோதாவா?’ன்னு கேட்டிருவாங்களோ’ன்னு பயமா இருக்கு..” என்று லீலா சாம்சன் கேட்கும் காட்சியில் செம கலகலப்பு. நவநீதனின் காதல்தனமான பேச்சு கடைசியில் வெற்றிகரமாக முடியுமிடத்தில் ‘இதுதாண்டா காதல்’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

காட்சிக்குக் காட்சி கை தட்டல் பெற வைத்திருக்கிறது கடைசி கதையான ‘ஹாய் அம்மு’. இதுவரையிலும் கருத்தாழமிக்க வசனங்களை பேசியே மனதில் இடம் பிடித்த சமுத்திரக்கனி இந்தப் படத்தில் எதுவும் அறிந்திருக்காத கணவராக.. ‘தனபால்’ என்ற அந்தக் கேரக்டராகவே மாறி வாழ்ந்திருக்கிறார்.

மனைவியின் ‘பொங்கலைப்’ பார்த்த பிறகும்,கேட்ட பிறகும்.. ஏதோ ஒரு தவறு.. எங்கோ தவறு செய்ய… முதற் புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட பின்பு அதைச் சரி செய்ய அவர் செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் ஏக கை தட்டல்கள்..!

இதேபோல் சுனைனாவும் தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். வேன் டிரைவரின் தற்செயலான பாராட்டுரை அவருக்குள் ஏற்படுத்தும் மாற்றத்தையும் அதை நேர்மையாக தனது கணவரிடம் சொல்லும் பாங்கும் அழகு. எத்தனையோ மனைவிமார்களைப் பார்த்தும் திருந்தாக கணவர்கள் இந்த அமுதினியைப் பார்த்தால் நிச்சயம் திருந்துவார்கள் என்பது திண்ணம்.

இந்த நான்கு கதைகளுக்குள்ளும் நுணுக்கமாக சில நல்லவைகளையும் வைத்திருக்கிறார் இயக்குநர். முதல் கதையில் வீட்டில் இருக்கும் சாக்லேட்டுகளை யாராவது சாப்பிடட்டுமே என்று சொல்லி பின்க் பேகில் போட்டு அனுப்புகிறாள் சாரா. ஆனால், அவள் தெரியாமல் போட்டுவிட்ட மோதிரம் தானாகவே அவளைத் தேடி வருகிறது.

இரண்டாவது கதையில் நிவேதிதாவைத் தேடி தினமும் ஒரு காகம் வருகிறது. அது எங்கிருந்தாவது எதையாவது எடுத்து வந்து நிவேதிதாவிடம் கொடுத்துவிட்டுப் போகிறது. இதுபோல் இவளுடைய காதலும் தானாக வந்து சேர்கிறது என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

தன் மேல் வீட்டில் குடியிருக்கும் ஒரு சிறுமி தன்னையும் சறுக்கி விளையாட்டுக்குக் கூப்பிட்டபோது மறுக்க முடியாமல் விளையாடப் போய் தனக்கான ஒரு துணையைத் தானே தேடிக் கொள்கிறார் யசோதா.  

வீ்ட்டில் கணவருடன் சத்தமாய் பேசி தனது ஆளுமையை நிரூபிக்கும் அமுதினி, கணவன் வாங்கிக் கொடுத்த அலெக்ஸா ஸ்பீக்கரில் சாந்தமாய்ப் பேசும் அம்முவின் மூலமாக கணவரின் காதலை உணர்வதும் ஒரு வகையான குறிப்புணர்தல்தான்..!

இந்த படத்தின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் கதைக்கு ஒருவராக நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருப்பதுதான்.  மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி யக்னமூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது தனித் திறமைகளை தங்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகளில் திறம்பட  வெளிப்படுத்தி உள்ளனர்.

அந்தக் குப்பை மேட்டுக் காட்சிகளை எப்படித்தான் படமாக்கினார்களோ தெரியவில்லை. பிரமாதம். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் அற்புதமான ஒளிப்பதிவில் குப்பைக் கூளங்களே ஒரு காட்சிப் பொருளாகத் தெரிகிறது.

கார் பயணத்திலேயே பெரும்பாலான காட்சிகளில் காதலை உணர்த்துவதும், காதலியை பிடித்துக் கொடுப்பதுமாய் கதை நகர்வதால் இதனை அபிநந்தனின் கேமிராவும் மிக ஆர்வமாகவும், கவனமாகவும் படம் பிடித்திருக்கிறது.

முதியவர்களின் காதல் கதையில் லீலா சாம்சனின் மிக மெல்லிய வசன உச்சரிப்பையும், அழகான அந்த முகத்தையும், நவநீதனின் தேடலையும் கேமிராப் பதிவு இன்னமும் கூடுதல் அழகாக்கியிருக்கிறது.

வீடுதான் கதைக் களம் என்பதால் அதையே மையப்படுத்தி மைதானமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக். சமையலறையில் சுனைனாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையில் நடக்கும் வார்த்தைப் போர் காட்சிகளைப் படமாக்கியிருக்கும்விதமும், கேமிரா கோணங்களும் அழகு. பாராட்டுக்கள்..!

பாராட்ட வேண்டியவைகள் நிறைய இருந்தாலும், சுட்டிக் காட்ட வேண்டிய குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இள வயது காதலர்கள் பார்த்தவுடன் யசோதை மேல் நவநீதனுக்கு ஈர்ப்பு வருவது நாடகத்தனமாக இருக்கிறது.

இதேபோல் இன்பாச்சுவேஷனில் அந்தப் புகைப்படத்தில் இருப்பவள்தான் அந்த பின்க் கலர் பையை தினமும் போடுகிறாள் என்பதை மாஞ்சா யூகிப்பது எப்படி என்பதும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவன் என்றாலும், மீம்ஸ் கிரியேட்டர் என்பதாலேயே நிவேதிதாவுக்கு மணிகண்டன் மேல் வரும் விருப்பமும், அனுதாபமுமே காதலாக மாறுவது பார்வையாளர்களுக்கு ரொம்பவே முற்போக்குத்தனமாக தெரிகிறது.

எப்போதும் டிகாஷன் காபியைக் குடித்தே பழகியவர்களுக்கு ‘கருப்பட்டி காபி’ என்பது மிக, மிக வித்தியாசமான ஒரு ருசியைத்தான் தரும். இந்தச் ‘சில்லுக்கருப்பட்டி’யும் அப்படியொரு வித்தியாசமான அனுபவத்தைத்தான் தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கிறது.

இயக்குநர் ஹலிதா ஷமீமுக்கும், அவரது குழுவினருக்கும் நமது மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!

வருடக் கடைசியில் வந்த நல்முத்துக்களில் இதுவும் ஒன்று..!

Our Score