full screen background image

நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!

நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற தீர்மானங்கள் :

1) பாரம்பரியமிக்க நமது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், உறுப்பினர் நலனுக்காகவும் அனைத்து வகையிலும் ஆதரவளித்து உறுதுணையாக இருந்து, சென்னையை அடுத்த பையனூரில் குடியிருப்புகள் கட்ட ஒதுக்கப்பட்ட குத்தகை நிலத்தின் பயன்பாட்டை கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து புதிய அரசாணை வழங்கி, திரையரங்குகளில் வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 8% இருந்து 4% ஆக குறைத்து அரசாணை வெளியிட்டு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திரைப்படங்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கும் பொருட்டு விருதுக் குழு ஒன்றை அமைத்து திரைத்துறைக்கு தொடர்ந்து ஊக்கமும், நம்பிக்கையும் வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், சங்க உறுப்பினரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு வருவாய்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு செயலாளர்களுக்கும், அரசுத் துறை இயக்குநர்களுக்கும் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

2) 13.10.2024 முதல் 21.09.2025 வரை நடந்த அனைத்து செயற்குழு கூட்டங்களில் செயற்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

3) 2024-25 ஆண்டறிக்கை மற்றும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கறிக்கைக்கு பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

4) தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான சங்க சட்ட ஆலோசகராக திரு.கிருஷ்ணா ரவீந்திரன் அவர்களை நியமிக்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

5) தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான சங்க கணக்குத் தணிக்கையாளராக திரு.ஸ்ரீராம்சுந்தர், SRNR & அசோசியேட்ஸ் அவர்களை நியமிக்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

6) தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான பொறுப்புகள் வெற்றிடம் ஆகும் பட்சத்தில், நிர்வாகக் குழு பொதுக் குழுவில் இருந்து அந்த பொறுப்புகளுக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற சங்க சட்ட விதி எண்: 58-ன் அடிப்படையில், சங்க செயற்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் நால்வரின் இடத்தை தற்போது நிரப்ப வேண்டி இருப்பதால், சங்க செயற்குழு உறுப்பினர்களாக பின்வரும் நான்கு உறுப்பினர்களான (1. 2. 3. 4.) ஆகியோரை தேர்ந்தெடுக்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

7) நமது சங்கத்தில் 25 ஆண்டு காலம் நிறைவுற்ற தொழில்முறை உறுப்பினர்களை நடைமுறையில் உள்ள வழக்கப்படி ஆயுள் உறுப்பினராக மாற்றம் செய்ய பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

8.தமிழ்நாடு திரைப்படத் துறைக்கான நல வாரியங்களில், மாற்றுத் திறனாளி கலைஞர்களை, பிரதிநித்துவப்படுத்தும் வண்ணம் வாரிய உறுப்பினர் பொறுப்பு வழங்கிட வழிவகை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் கோரிக்கையை முன் வைக்க பேரவையின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

9) நமது சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் குறித்து தவறாகவும், பொய்யாகவும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவதூறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நபர்கள், நமது சங்க உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில், சங்க சட்ட விதிகளின்படி அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும், சங்க உறுப்பினர்கள் அல்லாத மற்ற நபர்கள் அத்தகு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டால், அவர்கள் மீது சங்க நிர்வாகம் காவல்துறை மூலமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சங்க நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் வழங்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

10) கடந்த 67-வது பொதுக் குழுவில் புதிய சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிக்காக வங்கியிலிந்து ரூ.40 கோடி வரை கடன் தொகை பெறுவதற்கு பேரவையின் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது வங்கிக் கடன் தொகை ரூ.25

கோடிக்கு மட்டும் பெறப்பட்டு, அந்த தொகைக்கான வட்டி நிலுவையின்றி செலுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம், கட்டிடத்தின் உள்கட்டமைப்பில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய வடிவமைப்பை உருவாக்க, மேலும் ரூ.10 கோடி வரை தேவைப்படுகிறது. இது முன்பே ஒப்புதல் பெறப்பட்ட கடன் தொகையை விட ரூ.5 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது தேவைப்படும் ரூ.10 கோடிக்கு வங்கியிலிருந்து கூடுதல் கடன் பெற பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

11) கட்டமைக்கப்படும் நமது சங்கத்தின் புதிய கட்டிடத்தில் உருப்பெற்று வரும்  கலையரங்கம், திருமண கூடம், திருமண மாளிகை மற்றும் பிற பகுதிகளுக்கு, நிர்வாகக் குழுவின் கலந்தாலோசனை மற்றும் பரிசீலனையின் அடிப்படையில் சிறப்பு பெயர்களை சூட்ட சங்க நிர்வாகக் குழுவிற்கு அனுமதி வழங்க வேண்டி பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

12) நமது சங்கத்தின் புதிய சங்க கட்டிடத் திறப்பு விழாவிற்கான உரிய ஏற்பாடுகளை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கவும், அவற்றை செயல்படுத்தவும் சங்க நிர்வாகக் குழுவிற்கு முழு அதிகாரம் வழங்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

13) நமது சங்கத்தின் புதிய சங்க கட்டிட கட்டுமானப் பணிக்காக பெறப்பட்ட கடனை வங்கியில் திரும்ப செலுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை தீர்மானிக்கவும், அவற்றை செயல்படுத்தவும் சங்க நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் வழங்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

14) தற்சமயம் நந்தா அபார்ட்மெண்ட் வளாகத்தில் இயங்கி வரும் நமது சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை அலுவலகத்தை, உரிய சமயத்தில் புதிய சங்க கட்டிடத்திற்கு மாற்ற சங்க நிர்வாகக்குழுவிற்கு அதிகாரம் வழங்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

15) நமது சங்கத்தின் புதிய சங்க கட்டிடத்தில் அமையவிருக்கும் நான்காவது தளத்தை சேர்ந்த அலுவலகப் பகுதியில் செயல்பட, மாத வாடகை அடிப்படையில் இடம் தரக் கோரி,  ’நேச்சுரல்’ அழகுக் கலை மற்றும் உடல் ஆரோக்கிய மையத்திலிருந்து விண்ணப்பம் வந்துள்ளது தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்க சங்க நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் வழங்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

16) நமது சங்கம் சார்ந்த நிர்வாக செயல்பாடுகள், கட்டிட கட்டுமானப் பணிகள், நிதி திரட்டும் நடவடிக்கைகள், நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை சார்ந்த  வழக்குகள் சம்பந்தமாக முடிவெடுத்தல், சங்க பாதுகாப்பிற்காக நீதிமன்ற ஆவணங்களில் கையொப்பமிட்டு பிரதிநிதியாக செயல்படுதல், சட்ட விதிகளின்படி சங்கம் மற்றும் அறக்கட்டளை விதி திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் அவசியமான பிற  அமைப்புகளோடு உடன்படிக்கைகள் செய்து கொள்ளுதல் உட்பட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும், நிர்வாகக் குழு அவ்வப்போது பொருத்தமான முடிவெடுத்து செயலாற்றுவதற்கு அதிகாரம் வழங்க சங்க நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் வழங்க பேரவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.

Our Score