full screen background image

சரத்குமார், ராதாரவி மீது போலீஸில் புகார் கொடுக்க நடிகர் சங்கம் முடிவு..!

சரத்குமார், ராதாரவி மீது போலீஸில் புகார் கொடுக்க நடிகர் சங்கம் முடிவு..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடந்த ஆண்டு கால கணக்கு வழக்குகளை இன்னமும் ஒப்படைக்காததால் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மீது காவல்துறையில் புகார் கொடுக்க போவதாக தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் இன்றைக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது :

IMG_1026

“மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 99-வது பிறந்த நாளான இன்று(17.01.16) அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்த பின்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 4-வது செயற்குழு கூட்டம் நடிகர் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் திரு.நாசர் அவர்கள் தலைமையில் நடந்தது.

இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்ற நிர்வாகத்தின்போது SPI சினிமாஸுக்கும், நடிகர் சங்கத்தின் CHARITABLE  TRUST-க்கும் இடையே போடப்பட்ட எல்லா வகை ஒப்பந்தங்களையும் முழுவதுமாய் ரத்து செய்யும் அறக்கட்டளையின் முடிவை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு ஏகமனதாய் ஏற்றுக் கொண்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2014 – 2015-க்கான வரவு செலவு கணக்குகளையும், நடிகர் சங்கத்தின் CHARITABLE TRUSTக்கான 2013-2014, மற்றும் 2014-2015-க்கான வரவு, செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு மூன்று மாதங்கள் கழித்தும் முழுமையாக சமர்ப்பிக்காததால், சென்ற நிர்வாகத்தின் தலைவரான சரத்குமார், பொதுச் செயலாளரான ராதாரவி, பொருளாளரான வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது சென்னை காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘குரு தட்சணை திட்டம்’ என்கிற தலைப்பின் கீழ் உறுப்பினர்கள் பற்றிய DATABASE  சேகரிக்கும் திட்டத்தை வடிவமைத்த துணைத் தலைவர் திரு.பொன்வண்ணன் அவர்களுக்கும் அதை வெற்றிகரமாய் செயல்படுத்திய உறுப்பினர்கள் கோவை சரளா, பசுபதி, ரமணா, உதயா, பூச்சி முருகன், விக்னேஷ், நந்தா, பிரேம், ஹேமச்சந்திரன், மனோபாலா, ஜீனியர் பாலையா, ராதா அவர்களை இந்தச் செயற்குழு பாராட்டியும், வாழ்த்தியும், தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஏற்கனவே, துணைத் தலைவர் திரு.கருணாஸ் அவர்களின் பொறுப்பில் ஏற்படுத்தப்பட்ட ARO-க்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்த உறுப்பினர்கள் சிவகாமி, குட்டி பத்மினி, லலிதா குமாரி, உதயா, பிரேம், மருதுபாண்டி, விக்னேஷ் கொண்ட உப குழு அமைக்கப்படுகிறது என்று செயற்குழுவிற்கு தெரிவிக்கப்படுகிறது.

சென்ற மாதத்திற்கான சங்கம், மற்றும் அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகளை பொருளாளர் திரு.கார்த்தி இந்தச் செயற்குழுவிடம் சமர்ப்பித்தார். அது செயற் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

செயற்குழு உறுப்பினர் திரு.பூச்சிமுருகன் நன்றி கூற செயற்குழு கூட்டம் இனிதே நிறைவடைந்தது..”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாயத்து திரும்பவும் முதல்ல இருந்து துவங்கும் போல தெரிகிறது..!

Our Score